• Thursday, 21 November 2024
இந்தியாவில் கொரோனா 4-வது நிச்சயம் : ஆய்வாளர் கணிப்பு

இந்தியாவில் கொரோனா 4-வது நிச்சயம் : ஆய்வாளர் கணிப்பு

 

 

இந்தியாவில் கொரோனா 3-வது அலை ஜனவரி மாதம் தொடங்கியது. தற்போது, முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. உலகில் பல நாடுகளில் ஏற்கனவே 3-வது அலை தாக்கி விட்டது. தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே உள்ளிட்ட சில நாடுகளில் 4-வது அலை தொடங்கி உள்ளது.

இந்தநிலையில், இந்தியாவிலும் 4-வது அலை தொடங்க உள்ளதாக உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஐ.ஐ.டி.யை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். கணிதம் மற்றும் புள்ளியியல் துறையை சேர்ந்த சபரா பர்ஷத் ராஜேஷ்பாய், சுப்ரசங்கர் தார், ஷலாப் ஆகியோர் தலைமையில் இந்த ஆய்வு நடந்துள்ளது.

இந்தியாவின் கொரோனா தரவுகளை பயன்படுத்தி, புள்ளியியல் ஆய்வு முறையில் இதை கணித்துள்ளனர். இதுகுறித்து அந்த ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:-

இந்தியாவில், முதன் முதலில் கொரோனா தாக்கிய 2020-ம் ஆண்டு ஜனவரி 30-ந் தேதியில் இருந்து 936 நாட்களுக்கு பிறகு 4-வது அலை தொடங்கும் என்று எங்கள் ஆய்வு தெரிவிக்கிறது. அந்தவகையில், வருகிற ஜூன் 22-ந் தேதிவாக்கில் இந்தியாவில் 4-வது அலை தொடங்கும்.

ஆகஸ்டு 23-ந் தேதி வாக்கில் 4-வது அலை உச்சத்தை எட்டும். அக்டோபர் 24-ந் தேதிவாக்கில் இந்த அலை முடிவடையும். அதாவது, 4 மாதங்களுக்கு இந்த அலை நீடிக்கும்.

புதிய உருமாறிய கொரோனா உருவாக வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே கூறியுள்ளது. எனவே, புதிய உருமாறிய கொரோனா மற்றும் இந்தியாவில் தடுப்பூசி போடப்படும் வேகம் ஆகியவை அடிப்படையில், 4-வது அலையின் தீவிரத்தன்மை அமையும்.

புதிய உருமாறிய கொரோனா பரவும் வேகமும், உயிரிழப்பை ஏற்படுத்தும் வேகமும் அதிகமாக இருந்தால், 4-வது அலையின் தீவிரமும் அதிகமாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதே ஆராய்ச்சியாளர்கள்தான், பிப்ரவரி 3-ந் தேதி, இந்தியாவில் 3-வது அலை உச்சத்தை எட்டும் என்று கணித்திருந்தனர். அது சரியாக அமைந்தது. ஜிம்பாப்வேயில் ஏற்பட்ட 3-வது அலையின் புள்ளிவிவரங்கள் அடிப்படையில், அதை கணித்தனர்.

அதுபோல், தற்போது ஜிம்பாப்வேயில் 4-வது அலை தொடங்கியநிலையில், இந்தியாவிலும் 4-வது அலை உருவாக வாய்ப்புள்ளது தெரிய வந்துள்ளது.

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!