• Saturday, 23 November 2024
இந்திய கிரிக்கெட்  அணியின் கனவு கதம் கதம்...

இந்திய கிரிக்கெட் அணியின் கனவு கதம் கதம்...

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, குரூப்-2-ல் இடம் பெற்றுள்ளது. தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இந்திய அணி அடுத்த லீக்கில் நியூசிலாந்திடம் 110 ரன்னில் அடங்கியது. இவ்விரு மோசமான தோல்விகள் இந்தியாவின் அரைஇறுதி வாய்ப்புக்கு ‘ஆப்பு’ வைத்தது. கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்டிருந்த இந்திய அணி விளையாடிய விதம் மிகுந்த ஏமாற்றம் அளித்தது.
 
இருப்பினும் அடுத்த இரு லீக் ஆட்டங்களில் ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து அணிகளை பந்தாடி ரன்ரேட்டிலும் ஏற்றம் கண்டதால் இந்தியாவுக்கு லேசான வாய்ப்பு எட்டிப்பார்த்தது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 210 ரன்கள் குவித்து மலைக்க வைத்த இந்திய அணி, ஸ்காட்லாந்தை 85 ரன்னில் சுருட்டி அந்த இலக்கை 6.3 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து அசத்தியது. ரன்ரேட் உயர்ந்தாலும் இந்திய அணி மற்ற ஆட்டங்களின் முடிவை சார்ந்து இருக்க வேண்டிய பரிதாப நிலைமைக்கு தள்ளப்பட்டது.

 
ஆப்கானிஸ்தான் அணி தனது கடைசி லீக்கில் நியூசிலாந்தை தோற்கடித்தால் மட்டுமே இந்திய அணிக்கு அரைஇறுதி வாய்ப்பு உருவாகும் என்ற சூழலில் நேற்று இவ்விரு அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவின் அரைஇறுதி கனவு முற்றிலும் கலைந்தது. 20 ஓவர் உலக கோப்பை வரலாற்றில் இந்தியா சூப்பர் சுற்றுடன் வெளியேறுவது இது 4-வது நிகழ்வாகும். நியூசிலாந்து அணி 8 புள்ளிகளுடன் இந்த பிரிவில் இருந்து 2-வது அணியாக அரைஇறுதி சுற்றை அடைந்தது.
 
இந்தியா தனது கடைசி லீக்கில் இன்று (திங்கட்கிழமை) புதுமுக அணியான நமிபியாவை துபாயில் சந்திக்கிறது. இதில் இந்திய அணி வெற்றி பெற்று 6 புள்ளியை எட்டினாலும் பலன் இல்லை. எனவே இது சம்பிரதாய மோதலாகவே இருக்கும். அனுபவம் இல்லாத நமிபியாவை இந்திய அணி எளிதில் தோற்கடித்து விடும் என்பதில் சந்தேகமில்லை.
 
இந்த ஆட்டத்தின் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதால் இதுவரை ஆடாத சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹருக்கு இன்றைய ஆட்டத்தில் வாய்ப்பு அளிக்கப்படலாம். மேலும் சில முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளித்து விட்டு, இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன், ஷர்துல் தாக்குர், புவனேஷ்வர்குமார் ஆகியோரை சேர்ப்பது குறித்து அணி நிர்வாகம் பரிசீலிக்கிறது.
 
இந்த உலககோப்பையுடன் விராட் கோலி இந்திய 20 ஓவர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறார். இதனால் அவர் 20 ஓவர் அணியின் கேப்டனாக விளையாடப்போகும் கடைசி போட்டி இதுவாகும். அத்துடன் ரவிசாஸ்திரியின் பயிற்சியாளர் பணியும் இந்த ஆட்டத்துடன் முடிவுக்கு வருவது நினைவு கூரத்தக்கது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!