• Friday, 22 October 2021
இலங்கை மண்ணிலிருந்து  இந்தியாவுக்கு கூர்தீட்டும் சீனா

இலங்கை மண்ணிலிருந்து இந்தியாவுக்கு கூர்தீட்டும் சீனா

இலங்கை தலைநகர் கொழும்புவில், சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் சிறப்பு பொருளாதார மண்டலமாக உருவாகும் துறைமுக நகரத்தை, சீனாவுக்கு குத்தகைக்கு விட்டிருப்பது பலத்த சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் அரசியல் வல்லுநர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகரத்துக்கான மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த மே 20-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. துறைமுக நகரத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கவும், தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கும் அனைத்து உரிமைகளை சீனாவுக்கு வழங்கவும் இலங்கை அரசு முடிவெடுத்துள்ளது. இதனால் இந்த மசோதாவை, 'சீன மாகாண மசோதா' என, அந்நாட்டு எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் எம்.பிக்கள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர். இலங்கை அரசின் இந்த அனுமதி மற்றும் இந்திய அரசு மவுனமாக இருப்பது குறித்து தமிழக அரசியல் தலைவர்களும் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இதுகுறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``தமிழக எல்லையையொட்டிய அம்பாந்தோட்டை துறைமுகத்தையும், அதையொட்டிய 15,000 ஏக்கர் நிலங்களையும் சீனாவுக்கு தாரை வார்த்துள்ள சிங்கள அரசு, அவற்றை சீன இறையாண்மை கொண்ட பகுதியாக அறிவித்திருக்கிறது. இதன்மூலம் இந்தியப் பாதுகாப்புக்கு, குறிப்பாக தமிழ்நாட்டின் பாதுகாப்புக்கு இதுவரை இல்லாத அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. மத்திய அரசு என்ன செய்யப்போகிறது?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,``தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து 290 கி.மீ. தொலைவில் சீனாவின் கடற்படைத் தளம் உருவானால், அது இந்தியாவின் பூகோள நலனுக்கு எதிராகப் போய்விடும் நிலைமை ஏற்படும் என்பதை இந்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும்'' எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது ஒருபுறமிருக்க,``கொழும்பு துறைமுக நகரம், இந்திய, மேற்கத்திய இராஜதந்திரத்தின் தோல்வி'' என்கிறார் இலங்கையைச் சேர்ந்த அரசியல் விமர்சகரும் எழுத்தாளருமான நிலாந்தன். அவர் இதுகுறித்து விரிவாகப் பேசும்போது,

``இலங்கைத் தீவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சீன மயமாகிவிட்டது. சீனாவுக்கும் இலங்கைத் தீவுக்கும் நாடுகளுக்கும் இடையிலான பாரம்பரியமான உறவுகள் என்பது இரு அரசுகளுக்கிடையிலான உறவுகளாக பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. ஆனால், பொருளாதார அடிப்படையிலும் அரசியல் அதிகார அடிப்படையிலும் இலங்கைத் தீவு கடந்த பத்தாண்டுகளில்தான், அதிகளவுக்கு சீன மயப்பட்டிருக்கிறது. இனி இலங்கையை சீனாவின் பிடிக்குள் இருந்து விடுவிடுக்க உள்நாட்டில் யாராலும் முடியாது. வெளியில் இருக்கும் சக்திகளால்தான் அது முடியும். கொழும்பில், சிறிய கடலை மூடி உருவாக்கப்பட்டிருக்கும் சீனப்பட்டிணமானது, இலங்கைத் தீவில் உள்ள முதலீடு சம்பந்தமான 21 சட்டங்களில் இருந்து விசேஷ விடுப்புரிமையைக் கொண்டிருக்கிறது. அந்த சட்டங்களுக்கு சீனாவின் தீவு கட்டப்படாது. நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்டிருக்கும் குழுக்கள் எதற்கு முன்னரும் அச்சிறிய தீவு பதிலளிக்கத் தேவையில்லை. அதனால் , நாடாளுமன்றத்துக்குக் கட்டுப்பாடாத தீவா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இத்தீவை நிர்வகிக்கக் கூடிய நிர்வாகக் குழு நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் இலங்கையர்களே உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ஆனால், இந்த நிர்வாகக் குழு, முழுக்க ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில்தான் இயங்கும். ஜனாதிபதிக்குப் பதிலளித்தால் போதும். நாடாளுமன்றத்துக்கு பதிலளிக்கத் தேவையில்லை. சில மாதங்களுக்கு முன்பு, ஜனாதிபதியின் அதிகாரத்தை அதிகப்படுத்தும் நோக்கில், 20-வது சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. அதன் மூலம், ஓர் அரசனைப் போல ஜனாதிபதி ஆகியிருக்கிறார்.

இந்தத் தீவை, விசேஷ அந்தஸ்துடைய முதலீட்டு வளையமாகப் பார்க்கும்வரை, இந்தியா இதுகுறித்து அஞ்ச வேண்டியதிருக்காது. இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களும் அங்கு முதலீடு செய்ய வாய்ப்பிருக்கிறது. ஆனால், அரசியல் ரீதியாக எதிர்கால நோக்கோடு பார்த்தால், அந்த தீவு முழுவதுமாக சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் வரும்போது, இந்தியாவுக்கு பல அபாயங்கள் இருக்கிறது. இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பது இந்தியாவுக்கு நல்லதல்ல'' என்கிறார் அவர்.

இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனத் தொடர்ந்து பல தரப்பினரும் குரல் எழுப்பிவரும் நிலையிலும் மத்திய அரசு அமைதியாக இருப்பது குறித்து பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம்,

``இது இன்று நேற்று நடப்பதல்ல. சீனாவுக்கு அம்பாந்தோட்டா துறைமுகத்தை 99 ஆண்டு குத்தகைக்கு விடும்போது நாங்கள் எச்சரித்தோம். ஆனால், தமிழகத்தில் இருக்கக்கூடியவர்கள் தொடர்ந்து இலங்கைக்கு எதிரான நிலைப்பாடு எடுத்து, இந்தியா இலங்கையுடன் எந்தவித தொடர்பையும் வைத்துக்கொள்ளக்கூடாது என நெருக்கடி கொடுத்ததன் காரணமாக, அன்றைய தி.மு.க அங்கம் வகித்த காங்கிரஸ் அரசு அம்பாந்தோட்டா சீனாவின் கைகளுக்குச் செல்ல காரணமாக இருந்தது. ஆனால், தற்போது இந்தியா தொடர்ந்து தற்போது சீனாவுடன் பேசிவருகிறது. ஆனால், பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை போன்ற நாடுகளை சீனா அதிகக் கடன் கொடுத்து தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது ஆபத்தான ஒரு விஷயம்தான். ஆனால், பா.ஜ.க அரசு இதையெல்லாம் முன்பே உணர்ந்து, இலங்கையில் பல்வேறு முதலீடுகளை, உதவிகளைச் செய்து இலங்கையுடன் நட்புறவு பாராட்ட முயற்சி செய்கிறது. வரும் காலங்களில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் இந்தியா இறங்கும்'' என்கிறார் அவர்.

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!