கரும்பு விவசாயிகளுக்கு ரூ.195 ஊக்கத்தொகை
தமிழக பட்ஜெட்டின் 2-வது நாளான இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பண்டைத் தமிழர்கள் கரும்பைக் கசக்கி சாறு பிழிந்து சர்க்கரையாக்கும் தொழில் நுட்பத்தைத் தெரிந்து வைத்திருந்தனர் என்பதைக் ‘கரும்பாட்டிக் கட்டி சிறு காலைக் கொண்டார்’ என்று நாலடியார் நவில்கிறது. கடித்தாலும் சுவை தருகிறது கரும்பு, காய்ச்சினாலும் வெல்லம் தருகிறது அதன் சாறு. தொழில் துறை வசமிருந்த சர்க்கரைத் துறை வேளாண் துறைக்கு மாற்றப்பட்டது உழவர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி.
கரும்பு உற்பத்தி, சர்க்கரைக் கட்டுமானத்தை உயர்த்துவதற்காக, தமிழ்நாடு அரசு பல்வேறு சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கூட்டுறவு, பொதுத்துறை, தனியார் சர்க்கரை ஆலைகள் அதிக மகசூல் தரக்கூடிய, அதிக சர்க்கரைக் கட்டுமானம் கொண்ட கரும்பு இரகங்களைப் பயிரிட இவ்வரசு சிறப்பு கவனம் செலுத்திவருகிறது.
சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை மேலும் மேம்படுத்திடவும், கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டும், 2022-23 ஆம் நிதியாண்டில் பின்வரும் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
கரும்பு விவசாயிகள், விவசாய சங்கங்களின், கரும்பு விலையை உயர்த்தி வழங்கவேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை கனிவுடன் பரிசீலனைசெய்து, கரும்புவிவசாயிகளின் நலனைக்காக்கும் வகையில், சென்ற ஆண்டினைப் போலவே, 2021-22 அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கும் தகுதியுள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசின் சிறப்பு ஊக்கத் தொகையாக கரும்புக்கு டன் ஒன்றிற்கு 195 ரூபாய் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கரும்பு விவசாயிகள் பயன் பெறுவர்.
கரும்பு விவசாயிகளின் சாகுபடி செலவைக் குறைக்கும் நோக்குடன், வல்லுநர் விதைக்கரும்பு, திசுவளர்ப்பு நாற்றுக்கள், பருசீவல் நாற்றுக்கள், ஒரு பரு விதைக்கரும்பு, உயிர் உரங்கள், கரும்பு சோகை உரிக்கும் கருவிகள், நீரில் கரையும் உரங்கள், ஒட்டுண்ணி அட்டைகள் ஆகியவற்றை வழங்குவதற்கும், கரும்பு சோகையை தூளாக்குவதற்கும், ஹைட்ரா லிக்டிப்ளர் நிறுவுவதற்குமான திட்டம் வரும் நிதி ஆண்டில் 10 கோடி ரூபாய் மத்தி, மாநில அரசு நிதியில் செயல்படுத்தப்படும்.
சர்க்கரை ஆலைகளில் உள்ள ஆய்வுக்கூடங்களில் ஆய்வுகளை விரைந்தும் துல்லியமாகவும் மேற்கொள்ளும் வகையில் அமராவதி, அறிஞர்அண்ணா, செய்யார், செங்கல்ராயன், தருமபுரி, கள்ளக்குறிச்சி 1, கள்ளக்குறிச்சி2, எம்.ஆர்.கே., மதுராந்தகம், பெரம்பலூர், சுப்பிரமணியசிவா, சேலம், திருப்பத்தூர், திருத்தணி, வேலூர் ஆகிய 15 கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் உள்ள ஆய்வுக் கூடங்கள் மொத்தம் மூன்று கோடி ரூபாய் மாநில அரசுநிதி ஒதுக்கீட்டில் நவீனப்படுத்தப்படும்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரே சர்க்கரை ஆலையான நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலை, கரும்பு பற்றாக்குறை காரணமாக கடந்த 2016-17 அரவைப் பருவம் முதல் இயங்காமல் இருந்து வருகிறது. விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று ஆலையை மீண்டும் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்கும் வகையில் குழு ஒன்றுஅமைக்கப்படும்.
கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் கரும்பினைத் துல்லியமாக எடையிடும் வகையிலும் கரும்பிற்கான விலையினை விவசாயிகளுக்கு விரைந்து வழங்கிடும் வகையிலும், 15 கூட்டுறவு, பொதுசர்க்கரை ஆலைகளில் ஒரு கோடியே ஐம்பது இலட்சம் ரூபாய் மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் தற்போது பயன்பாட்டில் உள்ள எடைத்தளங்கள் கணினி மூலம் தானியங்கி முறைக்கு மேம்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் கரும்பு எடை விவரங்கள் விவசாயிகளுக்கும்,
வாகன ஓட்டுநர்களுக்கும், களப்பணியாளர்களுக்கும், குறுஞ்செய்தியாக உடனுக்குடன் அனுப்பப்படுவது உறுதி செய்யப்படும்.
உழைப்பின் பயனாக உற்பத்தி செய்தவை தூறலில் நனைந்தால் கண்களில் மழை உருவாகும். அறுவடைசெய்த விளை பொருட்களை இயற்கைச் சீற்றங்களில் இருந்து பாதுகாப்பதற்கும், உலர்களமாகப் பயன்படுத்துவதற்கும் 60 ஆயிரம் விவசாயிகளுக்குத் தார்பாய்கள் ஐந்து கோடி ரூபாய் மானியத்தில் வழங்கப்படும்.
Comment / Reply From
You May Also Like
Popular Posts
-
dhanush movie status
- Post By Admin
- March 2, 2021
-
sports
- Post By Muthu
- March 5, 2021
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!