• Thursday, 21 November 2024
சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் ரத்து

சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் ரத்து

பெருந்தொற்றால் தொடர்ந்து 2-வது ஆண்டாக சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் ரத்து செய்யப்படுகிறது. மேலும் குறிப்பிட்ட நேரத்தில் சாமியை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறும் ஆனி திருமஞ்சன விழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தற்போது கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் பக்தா்கள் இன்றி விழா கோவில் உள்பிரகாரத்திலேயே நடைபெற்று வருகிறது. அதே வேளையில் சாமிக்கு விழாவுக்கான சிறப்பு பூஜைகள் முடிந்த பின்னர் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் சிகர திருவிழாவான தேரோட்டம் இன்றும் (புதன்கிழமை), நாளை (வியாழக்கிழமை) ஆனிதிருமஞ்சன விழாவும் நடைபெற உள்ளது. இதில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும், மேலும் திருவிழா முன்பு எப்படி நடைபெறுமோ அதே போன்று நடைபெற அனுமதி அளித்திட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

ஆனால் மாவட்ட நிர்வாகம் தனது முடிவை மாற்றி கொள்ள முன்வரவில்லை. மேலும் கொரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக, தேரோட்டத்தை கோவிலுக்கு வெளியேவும், ஆனிதிருமஞ்சன விழாவையும் நடத்த அனுமதி அளிக்கவில்லை. பக்தர்கள் யாரும் இன்றி, கோவில் உள் பகுதியிலேயே தேரோட்டம் மற்றும் ஆனிதிருமஞ்சன விழாவை நடத்தி கொள்ளலாம் என்று அறிவுறுத்தியது.

அதன்படி இன்று நடைபெற இருந்த பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் நிகழ்வு ரத்து செய்யப்படுகிறது. அதே நேரத்தில் வழக்கமாக தேரோட்டத்தின் போது நடராஜருக்கு கோவிலுக்கு உள்ளே நடைபெறும் பூஜைகள், இன்றும் அதே போன்று நடக்கிறது.
அதன்படி இன்று நடராஜரும் சிவகாம சுந்தரியும் சித்ர சபையில் இருந்து புறப்படுகின்றனர். அதை தொடர்ந்து உள் பிரகாரத்தை வலம் வரும் சுவாமி அங்கிருந்து புறப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள உள்ளார். அதன் பின்பு காலை 9 மணி முதல் 2 மணி வரை சுவாமியை தரிசிக்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதன் பின்பு பக்தர்கள் அனுமதி முற்றிலுமாக நிறுத்தப்படும்.
தொடர்ந்து தரிசன நாளான நாளை(வியாழக்கிழமை) ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகிறது. பின்பு
மாலை 3 மணியிலிருந்து இரவு 10 மணி வரை பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக ஆனி திருமஞ்சன விழாவில் தொடர்ந்து 2-வது ஆண்டாக  தேரோட்டம் ரத்து செய்யப்படுவதுடன், ஆனி திருமஞ்சனமும் பக்தர்கள் இன்றி நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடதக்கதாகும். இது பக்தர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!