• Saturday, 05 July 2025
தெலுங்கில் ‘கர்ணன்’ ரீமேக்

தெலுங்கில் ‘கர்ணன்’ ரீமேக்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி அனைவராலும் பாராட்டப்பட்ட படம், 'கர்ணன்'. தனுஷ் மட்டுமல்லாது இதில் நடித்த அனைவரின் நடிப்பும் பேசப்பட்டது. இசை, ஒளிப்பதிவு, கலை இயக்கம் என தொழில்நுட்பம் ரீதியாகவும் படம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இயக்குநர் மாரி செல்வராஜின் கதை சொல்லல் படத்தை தூக்கி நிறுத்தியது.

ஒரு படம் ஒரு மொழியில் மிகவும் வரவேற்கப்பட்டால், அது வேறு மொழியில் ரீமேக் செய்யப்படுவது வழக்கம். அப்படி, 'கர்ணன்' திரைப்படமும் ரீமேக்காக இருக்கிறது. ஆம்... விரைவில் தெலுங்கில் 'கர்ணண்' ரீமேக்காகிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். 'கர்ணன்' திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை அதன் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவிடம் இருந்து வாங்கிவிட்டார், தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ். இதில் நாயகனாக அவரது மகன் பெல்லம்கொண்டா சாய் ஶ்ரீநிவாஸ் நடிக்கவிருக்கிறார். இயக்குநர் யார் என்பது விரைவில் முடிவாகும்.

இதுவரை எட்டு படங்களில் நடித்திருக்கிறார் ஶ்ரீநிவாஸ். அதில் 'சுந்தரபாண்டியன்', 'ராட்சசன்' ஆகிய படங்களின் ரீமேக்கும் அடங்கும். இந்த இரு தமிழ் படங்களைத் தொடர்ந்து, தற்போது, 'கர்ணன்' தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவிருக்கிறார். ராஜமெளலி இயக்கி ப்ளாக்பஸ்டராகிய 'சத்ரபதி' படத்தை இந்தியில் ரீமேக் செய்து பாலிவுட்டிலும் அறிமுகமாகிவிருக்கிறார்.

தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'அசுரன்' திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கை சுரேஷ் புரோடக்‌ஷன்ஸோடு இணைந்து தயாரித்திருக்கிறார் தாணு. 'நாராப்பா' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் வெங்கடேஷ் நாயகனாக நடித்திருக்கிறார். மே 14 வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில், கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக படம் தள்ளிப்போகிறது.

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!