• Thursday, 04 September 2025
மாண்புமிகு மகா ஜனங்களே..

மாண்புமிகு மகா ஜனங்களே..

 

மாண்புமிகு மகா ஜனங்களே…

 

தமிழகத்தின் தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது. இன்னும் சில தினங்களில் மக்களின் வாக்குரிமை பதிவு செய்யப்படவுள்ளது. ஆளுங்கட்சி, எதிர்கட்சி, ஜாதி கட்சிகள், புதிய கட்சிகள், தனி பலத்தை தெரிந்துகொள்ள ஆசைப்படும் சுயேட்சைகள் என ஆட்சியை, அதிகாரத்தை பிடிக்க வரிந்துகட்டிக்கொண்டு களத்தில் கர்ஜித்துக்கொண்டிருக்கும் மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 4220.

அதிமுக, திமுக தொடங்கி நேற்று முளைத்த காளான் கட்சிகள் வரை ஆளாளுக்கு வாய்க்கு வந்த வாக்குறுதிகளை அள்ளி வீசி ஓட்டுக்கு வலை விரித்துள்ளன. கொரோனா தாக்கம், கடுமையான பொருளாதார நெருக்கடி, வேலை வாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு என நாடு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் இந்த நேரத்தில் வாக்குரிமை என்பது மக்கள் சுபிட்சம் பெறுவதற்கான நல்ல வாய்ப்பாக கருத வேண்டும்.

தத்தம் தொகுதிக்கு யார் நல்லது செய்வார் என்பதை தீர்க்கமாக யோசித்து சரியான தீர்ப்பை வழங்கவேண்டிய பொறுப்பு வாக்காளர்களுக்கு உள்ளது. எனவே எந்த , விலைக்கும் பலியாகாமல் நேர்மையான முறையில் வாக்குரிமையை மக்கள் பதிவு செய்யவேண்டும்.

கட்சிகளின் மயக்கும் வாக்குறுதிகளை முழுமையாக நம்பி ஓட்டளிக்காமல், எது சாத்தியம் சாத்தியமற்றது என்பதை அறிவுபூர்வமாக சிந்தித்து ஆர்வத்துடன் வாக்களிப்பதே நம்மை இக்கட்டான சூழ்நிலையிலிருந்து காப்பாற்றும். யார் ஆட்சிக்கு வந்தாலும் அரசியல்வாதிகளின் பாக்கெட்டிலியிருந்து 5 பைசாகூட எடுத்து செலவழிக்கப் போவதில்லை என்பதே நிதர்சனம். மக்களின் வரிப்பணமே அரசின் கஜானா. எனவே மாண்புமிகு மகா ஜனங்களே… வாக்குகளை விழலுக்கு இறைத்த நீராக்காமல் நம் உயிர் காக்கும் இரத்தமாக சிந்தித்து வாக்களியுங்கள். வாழுங்கள்!

 

Comment / Reply From