
2023 சிறுதானிய ஆண்டு : ஐ.நா. அமைப்பு அறிவிப்பு
வங்கதேசம், கென்யா, நேபாள், நைஜீரியா, ரஷ்யா, செனகல் ஆகிய நாடுகளுடன் இணைந்து இந்தியா எடுத்த முன்னெடுப்பால் ஐக்கிய நாடுகள் அமைப்பு 2023-ம் ஆண்டை சிறுதானியங்களுக்கான சர்வதேச ஆண்டாக அறிவித்திருக்கிறது.
ஆரோக்கியம், சூழலியல் அடிப்படையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பர்யப் பயிர் வகைகளான சிறுதானியங்களின் மீது உலகளாவிய ஈர்ப்பை உண்டாக்குவதற்கு இந்த அறிவிப்பு மிகவும் உதவும்.
தற்போதைய உணவு உற்பத்தியில் பெருமளவு பங்கு வகிப்பது கோதுமை மற்றும் நெல் பயிர்கள்தான். 20-ம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில், எதிர்காலப் பயிர்களாக மக்கள் இவையிரண்டையும் கருதினார்கள். பசுமைப் புரட்சி தொடங்கிய பின்னர், இந்த இரண்டின் மீதும்தான் உணவு உற்பத்தியின் அதிகபட்ச கவனம் குவியத் தொடங்கியது. ஆனால், விரைவிலேயே இது பல்லுயிரிய வளக் கோட்பாட்டுக்கும் பயிர் பன்மைத்துவத்துக்கும் பெருங்கேடாக வளர்ந்து நின்றது. விவசாய அணுகுமுறை ஒற்றைப் பயிரிடுதலை நோக்கிச் சென்று கொண்டிருந்ததால், அதன் விளைவுகளும் விரைவிலேயே விவசாயிகளைப் பாதிக்கத் தொடங்கின. இன்று அதனால், பல பகுதிகளில் விளைநிலங்கள் தங்கள் முழுமையான உற்பத்தித் திறனை இழந்து நிற்கின்றன.
குறிப்பாக, விவசாய நிலத்தில் பல சூழலியல் அச்சுறுத்தல்களை ஒற்றைப் பயிரிடுதல் முறையில் விதைக்கப்பட்ட கோதுமையும் நெல்லும் உண்டாக்கின. அதிக விளைச்சலைக் கொடுத்துக் கொண்டிருந்த கோதுமை, நெல் ரகங்கள் அதிகளவிலான பூச்சி மருந்துகள், செயற்கை உரங்களைத் தின்றன. அது, நிலத்தையும் பாதிக்கத் தொடங்கியது, அதன் உற்பத்திக்கான செலவையும் அதிகரித்தது. சிறுதானியப் பயிர்களின் மீது கவனம் செலுத்துவதன் மூலம், விவசாயத்திலுள்ள பல சிக்கல்களைக் களைய முடியும். அதையுணர்ந்தே ஐக்கிய நாடுகள் அமைப்பு, இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.
இந்தியா 2020-ம் ஆண்டில் 11.5 மில்லியன் மெட்ரிக் டன் சிறுதானியங்களை உற்பத்தி செய்துள்ளது. இது 2019-ம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட உற்பத்தி அளவைவிடக் குறைவுதான் என்றாலும், நாட்டின் மொத்த உணவு உற்பத்தியில் சிறுதானியங்கள் முக்கியப் பங்கு வகிப்பதை இது காட்டுகிறது.
சிறுதானியங்கள், வறண்ட சூழலியல் அமைப்பைக் கொண்ட நிலப்பகுதிகளுக்கு ஏற்றது. சர்வதேச உணவு மற்றும் விவசாய அமைப்பின்படி, வறட்சியான சூழலிலும்கூட இது நன்கு வளரக்கூடியது.
சிறுதானிய விளைநிலங்கள் பல்லுயிரிய வளம் மிக்கதாக அறியப்படுகிறது. இமயமலைப் பகுதிகளில் தொடங்கி தமிழ்நாடு வரை அவற்றுக்கெனப் பல்வேறு வகையான விவசாய முறைகள் பின்பற்றப்படுகின்றன. மேலும், குறிப்பிட்ட நிலத்தில் சிறுதானிய விவசாயத்தை மேற்கொள்வதன் மூலம், அந்த நிலத்தின் பல்லுயிரிய வளத்தையும் பாதுகாக்க முடியும். சிறுதானிய விவசாயம் குறித்த சமீபத்திய ஆய்வு, சிறுதானியங்களை விளைவிப்பதன் மூலம் ஓராண்டில் ஏக்கருக்குச் சுமார் 6 மில்லியன் லிட்டர் தண்ணீரை மிச்சப்படுத்த முடியுமென்று கூறுகிறது. மிகக் கடினமான காலநிலையையும்கூடத் தாங்கி வளரக்கூடிய திறம் பெற்றவையாக இவை இருப்பதால், வறட்சிக் காலங்களிலும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் இதற்குப் பெரும் பங்குண்டு.
ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்வதற்குச் சுமார் 3,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். ஆனால், சோளம், திணை, கம்பு போன்ற சிறுதானிய வகைகளுக்கு அதைவிடக் குறைவான நீரே தேவைப்படும்.
இன்றளவிலும் தென் மாவட்டங்களில் உள்ள விவசாயிகளில் பெரும்பாலானோர் வரகு, கம்பு, சாமை போன்ற சிறுதானியங்களை விளைவிப்பதில் அதிகக் கவனம் செலுத்துவதைப் பார்க்க முடியும். அதற்குக் காரணம், அதிக நீரை உறிஞ்சாமல் குறைந்த செலவில் உற்பத்தி செய்துவிட முடியும். நெல் உற்பத்திக்குத் தேவைப்படும் நீரில் மூன்றிலொரு பங்கு நீர் இருந்தாலே இதற்குப் போதுமானது. ஆகவே, பயிர் பன்மைத்துவத்தை, சிறுதானிய விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம், நடுத்தர விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்த முடியும்.
கடந்த சில ஆண்டுகளில், கம்பு, சோளம், ராகி ஆகிய பயிர்கள் நகரவாசிகளால் அதிகளவில் விரும்பப்படுகின்றன. சிறுதானிய உணவகங்கள், சிறுதானிய விற்பனைக் கூடங்கள் என்று நகர்ப்புறங்களில் அவற்றின் விற்பனை அதிகரித்து வருவது அதற்கொரு சிறந்த உதாரணம். சமைக்கப்பட்ட உணவை நேரடியாகப் பெறுவது அல்லது சிறுதானியங்களை வாங்கி வீட்டிலேயே சமைத்துக்கொள்வது என்று ஏதாவதொரு வகையில் தங்கள் உணவுமுறையில் அவற்றைச் சேர்த்துக்கொள்ள நகர்ப்புற மக்கள் விரும்புகிறார்கள். இவைபோக, ராகி பிஸ்கட், திணை அல்வா, உப்புமா, குதிரைவாலி முறுக்கு, கம்பு அதிரசம் என்று மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களாகவும் சிறுதானிய உணவுகள் விற்கப்படுகின்றன.
உள்ளூர் பாரம்பர்யப் பயிர்கள் மீதான கவனமும் ஆதரவும் அதிகரித்து வருவதை இது காட்டுகிறது. சிறுதானிய உற்பத்திகளுக்குரிய முறையான சந்தைப்படுத்துதல் தொடங்கினால், அதை விளைவிக்கும் விவசாயிகளுக்கு இதன் பயன்கள் நேரடியாகச் சென்றடைவதை உறுதி செய்ய முடியும்.
உதாரணத்துக்கு, சிறுதானிய விவசாயிகள் அனைவரையும் ஒன்றுதிரட்டி, அவர்களுடைய உற்பத்தியை மதிப்புக்கூட்டி அவர்களே நேரடியாகச் சந்தைப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பை அரசு ஏற்படுத்திக் கொடுக்கலாம். இது, அவர்களின் உற்பத்திக்குரிய பலனை அவர்கள் நேரடியாக அடைவதற்கு உதவக்கூடும். தர்மபுரியில் சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் அமைப்பு இதுபோன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய முயற்சியை அரசு முன்னெடுத்தால், அதிகளவிலான உழவர்கள் பயனடையக்கூடும். மேலும், அவர்களிடமிருந்து அரசாங்கமே சிறுதானிய உற்பத்திகளை நேரடியாகப் பெற்று சுற்றுலாத் தலங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் விற்பனைக் கூடங்கள் அமைத்து விற்கலாம். இது, சிறுதானிய உணவுகள் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் மேலும் அதிகப்படுத்த உதவும்.
கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து மக்களின் உணவுமுறையில் ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்புத்திறன் நிறைந்த உணவுகள் இடம்பெறத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், நம் நிலத்தின் பயிர்களான சிறுதானிய வகைகளில் கவனம் செலுத்துவதன் மூலம், உடல் ஆரோக்கியம் மட்டுமன்றி விவசாய நிலங்களின் சூழலியல் சமநிலையையும் பாதுகாக்க முடியும். இப்போது பெருகிக்கொண்டிருக்கும் சிறுதானிய உணவுப் பொருள்களின் தேவையை உணர்ந்து, இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இன்னும் அதிக விவசாயிகளைச் சிறுதானிய உற்பத்தியில் ஈடுபட வைக்க முடியும்.
அதன்மூலம், தனித்துவமான கிராமப் பொருளாதாரக் கட்டமைப்பையும் சிறுதானிய உற்பத்தியைச் சுற்றி உருவாக்க முடியும். அதை, தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முன்னெடுக்கப்பட்ட, இந்திய அரசாங்கத்தின் சிறுதானியத் திட்டம் (India Millets Mission) போன்றவற்றின் மூலம் சாத்தியப்படுத்தலாம். பயிர்களுக்கு விலை நிர்ணயிப்பதிலும் இவற்றின் வழியே கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சமீபத்தில், சத்தீஸ்கர் மாநில அரசு, வரகு, சாமை, ராகி ஆகிய பயிர்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, அவற்றுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை அறிவித்தது.
ஹைதராபாத்தில் அப்போலோ மருத்துவமனை தங்கள் மருத்துவமனையின் உணவுமுறையில் சிறுதானிய வகைகளைச் சேர்த்துக் கொள்வதற்காகக் கையெழுத்திட்டது. இந்த முன்னெடுப்பின் மூலம் 5,000 பெண் விவசாயிகள் பலனடையப் போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், கர்நாடக அரசு, அரசுப் பள்ளிகளின் மதிய உணவில் சிறுதானியங்களைச் சேர்க்கப்போவதாக அறிவித்துள்ளது.
இத்தகைய முன்னெடுப்புகளின் மூலம், சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிப்பதோடு, ஊட்டச்சத்துக் குறைபாடுகளையும் நிவர்த்தி செய்ய முடியும். இவை மட்டுமன்றி, சிறுதானிய உற்பத்தியில் பெண் விவசாயிகளை அதிகளவில் ஈடுபடுத்துவது அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பெரியளவி உதவும்.
காலநிலைப் பாதுகாப்புடனான அவர்களுடைய நெருக்கம் காரணமாக, சிறுதானிய விவசாயத்தில் பெண்களுக்கு முதலுரிமை வழங்குவது ஏற்புடையதாக இருக்கும். ஆண்களைவிட பெண்களுக்குத்தான் இயல்பிலேயே நீர்ப் பாதுகாப்பு குறித்த அக்கறை அதிகம். பெண் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவதன் மூலம், இதில் அவர்களை அதிகமாக ஈடுபட வைக்கலாம். அதன்மூலம், நீண்டகாலத்துக்குரிய நிலைத்தன்மையான விவசாய இலக்கை அடைவதற்கான பாதை சாத்தியப்படும்.
Tags
Comment / Reply From
Popular Posts
-
dhanush movie status
- Post By Admin
- March 2, 2021
-
sports
- Post By Muthu
- March 4, 2021
-
'தி லெஜண்ட்’ விமர்சனம்
- Post By Admin
- July 30, 2022
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!