• Tuesday, 03 December 2024
7 மொழிகளில் தயாராகும் படத்தில் ஸ்ரேயா

7 மொழிகளில் தயாராகும் படத்தில் ஸ்ரேயா

ஒரு வெற்றிகரமான கதை இருந்தால் அது மொழிகளைக் கடந்து வரவேற்பு பெறும்; அது வெளியாகும் பல மொழிகளிலும் வெற்றி பெறும். பல மொழி நட்சத்திரங்கள் பங்கேற்றுப் பட வெளியீட்டுக்குப் பின் இந்திய அளவில் பேசப்பட்டு அது ஒரு பேன் இந்தியா மூவியாக மாறும்.
அப்படி ஒரு பேன் இந்தியா மூவியாக உருவாகி வரும் படம் தான் 'கப்ஜா'.
 
இந்தப்  படத்தில் கன்னடத் திரையுலக சூப்பர் ஸ்டார் யதார்த்த நாயகன் உபேந்திரா நாயகனாக நடிக்கிறார். மற்றொரு நட்சத்திரம் சுதீப் இன்னொரு நாயகனாக நடிக்கிறார். இருவேறு நிலையில்  எதிர்பார்ப்புள்ள கதாநாயகர்கள் இருவரும் இதில் இணைந்து நடிக்கிறார்கள். ஒரு நாயகியாக ஸ்ரேயா ஷரண் நடிக்கிறார்.
 
படத்தை ஆர். சந்துரு இயக்குகிறார். இவர் ஏற்கெனவே பல்வேறு முன்னணி நட்சத்திரங்களை வைத்து  இயக்கிய பதினொரு படங்களில்  பெரும்பாலானவை வெற்றிப்படங்கள் அல்லது பேசப்பட்டவை.  
'கப்ஜா' இவருக்கு 12 வது படம்.இயக்குநர் சந்துரு இரண்டு மாநில விருதுகள், இரண்டு ஃபிலிம்ஃபேர் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
 
கே ஜி எஃப் படம் அதன் பிரமாண்டத்தால் பேசப்பட்டது. அதில் பணியாற்றிய பலரும் இதிலும் பங்கேற்றுள்ளனர். கேஜிஎஃப் படத்தை போல் இருமடங்கு பெரிதாக இப்படம் உருவாக உள்ளது. இந்தப் படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா பெங்களூரில் மோகன் பி கரே ஸ்டுடியோவில் நடைபெற்றது.
 
கேஜிஎஃப் படத்திற்கு இசை அமைத்த ரவி பஸ்ரூர்  தான் 'கப்ஜா' படத்துக்கும்  இசையமைக்கிறார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு ஏ.ஜே.ஷெட்டி, கலை இயக்கம் சிவக்குமார்.
 
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா,மராத்தி, இந்தி என 7 மொழிகளில் இப்படம் உருவாகிறது.
 
கலைக்கு மொழி இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் அனைத்து மொழிகளுக்குமான பொதுத் தன்மையோடு இந்தப் படம் உருவாகிறது.
 
 நிழலுலக அரசனாக உபேந்திரா நடிக்க ராணியாக ஸ்ரேயா நடிக்கிறார். ஏற்கெனவே இவர் கன்னடத்தில் புனித் ராஜ்குமாருடன்  நடித்த படம் பெரிய திருப்புமுனையாக இருந்தது. சற்று இடைவெளிக்குப் பின் உபேந்திராவுக்கு ஜோடியாக  'கப்ஜா 'வில்  நடிப்பது கன்னடத்தில் மீண்டும் ஒரு மறுபிரவேசமாக அமையும் என்கிறார்கள்.
 இன்னொரு நாயகி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும்.

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!