திரிஷ்யம் 2
நடிகர் | மோகன்லால் |
நடிகை | மீனா |
இயக்குனர் | ஜீத்து ஜோசப் |
இசை | அணில் ஜான்சன் |
ஓளிப்பதிவு | சதீஷ் குருப் |
தன் மகள் செய்த ஒரு கொலையை மறைத்து, தன் குடும்பத்தைக் காக்க உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டராக இருக்கும் மோகன்லால், போலீசிடம் இருந்து தப்பிப்பதே ‘திரிஷ்யம்’ படத்தின் கதை. முதல் பாகம் முடிந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ‘திரிஷ்யம் 2’ கதை தொடங்குகிறது. சாதாரண கேபிள் ஆபரேட்டராக இருந்த மோகன்லால், இப்போது ஒரு தியேட்டர் உரிமையாளராக இருக்கிறார். தான் எழுதி வைத்திருக்கும் ஒரு கதையைப் படமாகத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
ஆறு ஆண்டுகளில் மோகன்லாலிடம் ஏற்பட்ட மாற்றங்களை மீனா விரும்பாமல் இருக்கிறார். இவர்களின் மூத்த மகள் அன்ஸிபா, முன்பு நடந்த கொலை சம்பவத்தில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறார்.
ஆறு ஆண்டுகளாக எந்தப் பிரச்சினைகளும் இல்லாமல் நிம்மதியாகப் போய்க் கொண்டிருந்தாலும், மொத்தக் குடும்பமும் சிறிய பயத்துடனே இருந்து வருகிறார்கள். மோகன்லாலின் வளர்ச்சியால் பொறாமையில் இருக்கும் சிலர் கொலையை அவர்தான் செய்ததாகவே நம்புகின்றனர். இந்நிலையில், மோகன்லாலை மீண்டும் சிக்கவைக்க காத்திருக்கும் போலீஸுக்கு ஒரு துப்பு கிடைக்கிறது. இதனால் மீண்டும் சிக்கலில் மாட்டுகிறார் மோகன்லால்.
இறுதியில் போலீசிடம் மோகன்லால் சிக்கினாரா? போலீஸ் விசாரணையை மோகன்லால் எப்படி எதிர்கொண்டனர்? இறுதியில் வென்றது யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
ஜார்ஜ்குட்டியாக தன்னுடைய வழக்கமான ஸ்டைலில் நடித்து அசத்தி இருக்கிறார் மோகன்லால். பல காட்சிகளில் தன்னுடைய ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பால் அதிகம் கவர்கிறார். மோகன்லாலின் மனைவி ராணியாக வரும் மீனா, கணவனிடம் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டு விரும்பாமல் இருப்பது, பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் குற்ற உணர்வில் அழுது புலம்புவது, என நடிப்பில் பளிச்சிடுகிறார். மகள்களாக அன்ஸிபா, எஸ்தர் அனில், அதிகாரியாக வரும் முரளி கோபி என அனைவரும் கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். முதல் பாகத்தில் நடித்த ஆஷா சரத் இதிலும் வந்து நடித்து மனதில் நிற்கிறார்.
முதல் பாகத்தின் கிளைமாக்ஸ் காட்சியிலிருந்து ஒரே நூல் பிடித்து ஒரு முழுக் கதையை வடிவமைத்துள்ளார் இயக்குனர் ஜீத்து ஜோசப். படம் தொடங்கிய பத்தாவது நிமிடம் நம்மைத் தொற்றிக் கொள்ளும் பரபரப்பு படம் முடியும் வரை நம்மை விட்டு நீங்காமல் பார்த்துக் கொள்கிறார் இயக்குனர். படத்தில் மோகன்லால் கொலை மறைக்க போராடுவது போல், இயக்குனர் ஜீத்து ஜோசப் இந்த கதைக்காக மிகவும் போராடி இருக்கிறார். இந்த போராட்டத்திற்கு வெற்றி கிடைத்திருக்கிறது என்றே சொல்லலாம். திரைக்கதையில் மாயாஜாலம் புகுத்தி ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார். பொதுவாக முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றி இரண்டாம் பாகத்திற்கு அதிகம் கிடைப்பதில்லை. ஆனால், இந்த பாகத்தை திறம்பட இயக்கிய ஜீத்து ஜோசப்புக்கு பாராட்டுகள்.
அனில் ஜான்ஸனின் இசை படத்திற்கு பெரிய பலம். இவரது பின்னணி இசை மற்றொரு ஹீரோ. கதைக்குத் தேவையானதை அழகாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சதீஷ் குருப்.
மொத்தத்தில் ‘திரிஷ்யம் 2’ திகைப்பு.
Comment / Reply From
You May Also Like
Popular Posts
-
dhanush movie status
- Post By Admin
- March 2, 2021
-
sports
- Post By Muthu
- March 5, 2021
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!