• Friday, 13 December 2024

’பீஸ்ட்’ திரை விமர்சனம்

’பீஸ்ட்’ திரை விமர்சனம்

கோடிகளை கொட்டிக் கொடுத்த சன் பிக்சர்ஸ், கொடுக்கும் கேரக்டரை வெளுத்து வாங்கக்கூடிய மாஸ் ஹீரோ, அனிருத், மனோஜ் பரமஹம்சா என்ற தொழில்நுட்ப ஆளுமைகள், ஏற்கனவே இயக்கிய இரண்டு படங்களில் ஹிட்டடித்து நிருபித்த இயக்குனர் என எல்லா பலமும் இருந்தும் ‘பீஸ்டை’ வேஸ்டாக்கிய இயக்குனர் நெல்சனின் வச்ச குறி தப்பியிருக்கிறது.

சென்னையில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்று தீவிரவாதிகளால் ஹைஜாக் செய்யப்படுகிறது. அதில் மாட்டிக்கொள்ளும் மக்களில் ஒருவர்தான் இந்திய அரசாங்கத்தின் உளவாளி விஜய். இவரால் ஏற்கனவே சிறைபிடிக்கப்பட்ட தீவிரவாத தலைவனை விடுவிக்க வேண்டும் என்பதுதான் தீவிரவாதிகளின் கோரிக்கை. மாலில் மாட்டியிருக்கும் மொத்த பேரையும் விஜய் ஒத்த ஆளாக காப்பாற்றுவதுதானே கதையாக இருக்க முடியும்? அதுதான் வேஸ்ட் ஸாரி.. பீஸ்ட்.

ஒரு மால், தீவிரவாதிகளுடன் அதிகாரி செல்வராகவன் தொடர்புகொண்டு பேசுவதற்காக இத்துப்போன ஒரு பங்களா, க்ளைமாக்ஸ் சீனுக்கும், இரண்டு பாடல் காட்சிகளுக்கும் செட்ஸ்.  இதுதான் படத்தின் மொத்த லொக்கேஷன்ஸ்.

 தீவிரவாதிகளை டுபுடுபுன்னு சுட்டுத்தள்ளி எதிராளியோட  ஒத்த தோட்டாவைகூட உடம்பில் வாங்காத உளவாளி வீரராகவனாக மேஜிக் காட்டியிருக்கும் விஜய்க்கு சிங்கம் ’மாதிரி’யான கேரக்டர்.  அந்த ஹேர் ஸ்டைல், தாடிதான் அவரை கிழட்டு சிங்கமாக காட்டுகிறது. கதையை விடுங்க எசமான் அவ்வளவு பெரிய ஹீரோவுக்கு அட்லீஸ்ட் டயலாக்கையாவது பெப்பியா எழுதியிருந்தா விஜய் ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சியா இருந்திருப்பாங்க.

”ஒருதடவை முடிவு பண்ணிட்டா என் பேச்ச நானே கேட்க மாட்டேன்..” என்ற பழைய பஞ்ச்சையே வாந்தியெடுக்க வைத்திருக்கிறார் இயக்குநர் நெல்சன். பாதுகாப்பு அதிகாரியாக வரும் இயக்குனர் செல்வராகவன் அசால்ட் நடிப்பால் அப்ளாஸ் அள்ளுகிறார். நடிகராக ஜெயிச்சிட்டீங்க செல்வா.

கதைக்கே வேலையில்ல என்கிறபோது கதாநாயகிக்கு பெருசா என்ன இருக்கப்போவுது. விஜய்யை பார்த்ததுமே காதல் கொள்ளும் பூஜா ஆஹா அழகு. அரபி குத்து பாடலில் விஜய்யுடன் ஜோடி போட்டு ஆடும் ஆட்டம், பேரீச்சம்பழ தித்திப்பு.

யோகிபாபு, விடிவி கணேஷ், கிங்ஸ்லி என கணிசமான காமெடியன்கள் இருந்தும் சிரிப்பும், தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதுபோல கடுப்பாகிறது. இந்திய திரையுலகில் இவ்வளவு வீக்கான தீவிரவாதிகளை எந்தப் படத்திலும் காட்டவில்லை. ஈயம் பித்தளைக்குப் போடக்கூடிய ஒரு கத்திய வச்சிக்கிட்டு தீவிரவாதிகளின் தலையை கேக் வெட்டுவதுபோல வெட்டித்தள்ளுகிறார் விஜய். ஆனால் நவீன துப்பாக்கிகளை வைத்திருக்கும் தீவிரவாதிகள் தேமே என்று செத்துவிழுவது கடவுளே…

க்ளைமாக்ஸில் பாகிஸ்தானுக்கு போய் ராணுவத்துக்கே தண்ணிக்காட்டிவிட்டு தீரவாத தலைவனை பொட்டலம் கட்டிக்கொண்டு விஜய் வரும் காட்சிகள் வீடியோ கேம் விளையாட்டு. ”போன் ஒயர் பிஞ்சு ஒருவாரம் ஆச்சு..” காமெடி போல  படம் முடிஞ்சிருச்சுன்னு நினைச்சு தியேட்டருக்கு வெளியே ஆடியன்ஸ் நடையை கட்டிய பிறகு வரும் பாட்டு இது வேறயா.. என கேட்க வைக்கிறது

 மொத்தத்தில் பீஸ்ட் பொம்மை துப்பாக்கி.

  • அமலன்

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!