• Friday, 05 September 2025
ஆ... அண்டார்ட்டிக்கா

ஆ... அண்டார்ட்டிக்கா

 

அண்டார்ட்டிகாவில் 4320 சதுர கிலோ மீட்டர் (கிட்டத்தட்ட 8 மாவட்டங்களின் அளவு) அளவுள்ள பனிப்பாறைகள் உடைந்து உருகத்தொடங்கியுள்ளது. இது மிகவும் ஆபத்து என்ற செய்திகள் வட்டமடிக்கும் நிலையில், “இது இயற்கையாகவே நிகழும் சாதாரண நிகழ்வுதான்” என்கிறார் கிறிஸ்டோபர் ஷூமன் என்ற ஆய்வாளர்.

அண்டார்ட்டிகாவை 98% பனிப்பாறைகள்தான் மூடியிருக்கின்றன. உலகின் 61% சுத்த நீர், இந்தப் பாறைகளுக்குள்தான் உறங்கிக்கொண்டி ருக்கின்றன. ஒருவேளை இவை முழுமையாக உருகினால், உலகின் கடல் நீர் மட்டம் 60 மீட்டர் வரை உயரும் அபாயம் உண்டு. இந்த அபாயச் செய்திகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டுப் பார்த்தால், அன்டார்ட்டிகா என்பது ஒரு பாலைவனம். பல்லாயிரம் ஆண்டுகளாக அங்கு விழும் பனி, அந்தக் கண்டத்தை அப்படி உருமாற்றி வைத்திருக்கிறது.

ரோன் பனி அடுக்கிலிருந்து இப்படிப் பனிப்பாறைகள் உடைவதை ‘கால்விங்’ என்கிறார்கள் ஆய்வாளர்கள். நிலத்தோடு ஒட்டியிருக்கும் இந்தப் பனிப்பாறைகள் நீர் நிலைகளைத் தொடும்போது, அதன் சமநிலை கேள்விக்குள்ளாகிறது. அப்போது நிலத்தைச் சாராமல் விலகி இருக்கும் பகுதிகள் உடைந்து பனிப்பாறைகளாக மிதக்க ஆரம்பிக்கின்றன. ஃபில்ச்னர் - ரோன் பனி அடுக்கு, வெட்டல் கடலுக்கு அருகிலேயே இருப்பதால் அதில் ஒவ்வொரு ஆண்டும் நூறு மீட்டர் அளவிலான கட்டிகள் உடையக்கூடும். தற்போது நடந்திருப்பது ஒரு பெரும்பிளவு, அவ்வளவே.

ரோன் பனி அடுக்கில் இந்த A76 நிகழ்வு நடந்ததற்குக் காரணம் அதனை ஒட்டியிருக்கும் வெட்டல் கடல். மே மாதத்தின் ஆரம்பத்தில் மெலிதாய் விரிசல்கள் உண்டாக, அது கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகி, தற்போது உலகின் மிகப்பெரிய பனிப்பாறையாக உருமாறி உலக வெளிச்சம் பெற்றிருக்கிறது.

இதற்கு முன்பு 2017-ல் லார்சன் பனி அடுக்கில் இருந்து A68A பனிப்பாறை உடைந்து மிதந்தது. இந்த ஆண்டு ஜனவரி ஆரம்பத்தில் A68Aவின் ரெக்கார்டை முந்தியது A23A. இப்போது இவை இரண்டையும் பின்னுக்குத்தள்ளி A76 முதலிடம் பிடித்திருக்கிறது.

 

Comment / Reply From