
இங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைந்தார்

பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத்தின் கணவரும், எடின்பரோ இளவரசருமான பிலிப், தனது 99-வது வயதில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை விண்ட்சர் கோட்டையில் காலமானார்.
பிலிப் மறைந்த செய்தியை அரச குடும்பத்தினர் அதிகாரபூர்வமாக வெளியிட்டனர். அந்த அறிவிப்பில், ``உலக மக்கள் அனைவருடனும் எங்கள் துக்கத்தைப் பகிர்ந்து கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தனர். மேலும் அரச குடும்பத்தின் அதிகாரபூர்வ வலைத்தளம் கறுப்பு வெள்ளையாக மாற்றப்பட்டது.
பிலிப் இறப்பதற்கு முன் அறிவுறுத்தியதன் படி, அவரது உடல் செயின்ட் ஜார்ஜ் அரண்மனையில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெகுஜன மக்கள் அஞ்சலி செலுத்த முடியாத நிலை உள்ளது.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், `இது மிகப்பெரிய சோகம்' என அறிக்கையுடன், பிலிப்பின் சேவை மற்றும் நினைவுகள் குறித்த தனது இரங்கலை நாட்டு மக்களுக்கும் ராணி எலிசபெத்திற்கும் கூறியுள்ளார்.
பிலிப் உடன் 74 ஆண்டுகள் திருமண வாழ்வை வாழ்ந்துள்ளார் ராணி எலிசபெத். இன்னும் 12 நாள்களில் ராணியின் பிறந்தநாள் வரவிருக்கும் நிலையில் பிலிப்பின் மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் பிலிப் இரு மாதங்களில் தனது 100-வது பிறந்தநாளை கொண்டாட இருந்தது குறிப்பிடத்தக்கது.
எலிசபெத் ராணி எப்போதும் `என் பலமும் இருப்பும்' எனக் குறிப்பிடும் அவரின் கணவர் பிலிப், கடந்த பிப்ரவரி மாதம் இருதயக் கோளாறு மற்றும் பிற நோய்த்தொற்று காரணமாக உடல்நிலை மோசமானதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் இருதய சிகிச்சை முடித்து ஒரு மாதத்தில் அரண்மனை திரும்பினார்.
கடந்த 2017-ம் ஆண்டு முதல் அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிலிப் கொரோனா பரவல் காலகட்டத்தில் மனைவியுடன் விண்ட்சர் கோட்டையில் இருந்தார். இருவரும் ஜனவரி 9-ம் தேதி தடுப்பூசி போட்டுக்கொண்டனர். 1952 முதல் மனைவிக்கு பக்கபலமாக அரசு வேலைகளை கவனித்து வந்த பிலிப், இங்கிலாந்து வரலாற்றில் அதிக ஆண்டு அரசு பணியாற்றியவர். இதுவரை 14 பிரதமர்களுடன் பணிசெய்துள்ளார் பிலிப்.

தனது 7 வயதில் இங்கிலாந்திற்கு வந்த பிலிப் தன் பாட்டி விக்டோரியா மவுன்ட்பேட்டன் மற்றும் மாமா ஜார்ஜ் மவுன்ட்பேட்டன் ஆகியோருடன் வசித்து வந்தார். பதின் பருவத்தில் கடற்படையில் சேர்ந்து இரண்டாம் உலகப்போரில் பங்கு பெற்றார்.
1947-ம் ஆண்டு தனது 26-ம் வயதில் எலிசபெத்தை திருமணம் செய்துகொண்டார் பிலிப். பிலிப் இங்கிலாந்தை பூர்விகமாகக் கொண்டவர் அல்லர் என்பதால், பல சர்ச்சைகளும் வந்தன. திருமணம் ஆன புதிதில் எலிசபெத் தன் தந்தைக்கு எழுதிய கடிதத்தில், `நாங்கள் பல ஆண்டுகள் பழகியவர்கள் போல நடந்து கொள்கிறோம்' எனக் குறிப்பிட்டிருந்தார். ஓராண்டிற்குப் பின் இளவரசர் சார்லஸ் பிறந்தார். தொடர்ந்து அன்னா, ஆண்ட்ரூ, எட்வர்ட் ஆகியோர் பிறந்தனர்.

பிப்ரவரி 6, 1952-ம் ஆண்டு, மன்னர் ஆறாம் ஜார்ஜ் இறப்பிற்கு பின் எலிசபெத் ராணியாகப் பதவியேற்றதும், அவருக்குத் துணையாக அரசு வேலைகளில் கவனம் செலுத்தினார் பிலிப். உள்நாட்டுப் பயணங்கள், வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள், காமன்வெல்த் சுற்றுலா என ராணியின் பலமாக இருந்தார்.
அலுவல் முறை பயணமாக 140 நாடுகளுக்குச் சென்றுள்ளார் பிலிப். பல தசாப்தங்கள் எலிசபெத் மற்றும் பிலிப் இணைந்து ஆட்சி நடத்தினர். நவம்பர் 20, 1997-ம் ஆண்டு நடந்த பொன் விழா திருமண நிகழ்வில் எலிசபெத் ராணி, ``எளிமையாக, இத்தனை ஆண்டுகள் என்னுடன் இருந்த என் பலம் அவர்" எனக் கூறினார்.
பிலிப்பின் மறைவு எலிசபெத் ராணிக்கும், அரச குடும்பத்தினருக்கும், இங்கிலாந்து மக்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் சூழலில், அவரது நினைவுகளால் அனைவரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இன்னொரு பக்கம், பிலிப் தன் வழக்கமாக வைத்திருந்த இனவெறி பேச்சுகளும், பெண்களை இழிவுபடுத்தும் ஆணாதிக்க பேச்சுகளும் இந்நேரத்தில் நினைவுகூரப்பட்டு, அதனடிப்படையிலும் அவரது வாழ்வை எடைபோடும் கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
Tags
Comment / Reply From
Popular Posts
-
dhanush movie status
- Post By Admin
- March 2, 2021
-
sports
- Post By Muthu
- March 4, 2021
-
'தி லெஜண்ட்’ விமர்சனம்
- Post By Admin
- July 30, 2022
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!