
எல்லையில் மிரட்டும் சீனா : எதிர்க்குமா இந்தியா?
கடும் மோதல்களுக்குப் பிறகு இந்திய - சீன எல்லைப் பகுதியில் சீன ராணுவம் தனது படைகளை வாபஸ் பெற்றதாகச் சொல்லப்பட்டாலும், பதற்றம் தணியவில்லை. அருணாசலப் பிரதேசத்தில் 600 புதிய கிராமங்களை சீனா உருவாக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. இதைத் தவிர பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே உலகின் மிகப்பெரிய அணை கட்டுவது என அத்துமீறல்களைத் தொடர்கிறது சீனா.

கிழக்கு லடாக் பகுதியில், சீன ராணுவத்தின் ஆக்கிரமிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இதற்குத் தீர்வு காண ராஜாங்கரீதியிலும், ராணுவ மட்டத்திலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகின்றன. கடந்த ஜனவரியில் இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் நடந்த 9-ம் கட்டப் பேச்சுவார்த்தையின் அடிப்படையில், ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பாங்கோங் சோ ஏரிப் பகுதியிலிருந்து இரு நாட்டுப் படைகளும் வாபஸ் பெறப்பட்டன. இது ஒரு நல்ல அறிகுறி என்றாலும் காக்ரா, ஹாட் ஸ்பிரிங்ஸ், டெப்சாங் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ராணுவத்தை வாபஸ் பெறுவது தொடர்பான பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஏப்ரல் 9-ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது.
இந்திய - சீன எல்லைப் பிரச்னைக்கு ஏராளமான காரணங்கள் இருந்தாலும், பிரச்னையின் மையப்புள்ளியாக விளங்குகிறது திபெத் பிராந்தியம். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் பலவற்றின் எல்லையாக திபெத் தன்னாட்சிப் பிரதேசம் இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் திபெத்துக்கும் இந்தியாவுக்குமான எல்லை வரையறுக்கப்பட்டு, மெக்மோகன் கோடு எல்லையாக வரையறுக்கப்பட்டது. அந்த எல்லைக்கோட்டை சீனா மதிக்காததுதான் பிரச்னைக்கு மூலகாரணம். தவிர, அருணாசலப் பிரதேசம் உள்ளிட்ட இந்தியப் பகுதிகளை உரிமை கொண்டாடும் சீனா, தான் ஆக்கிரமித்துள்ள இந்தியப் பகுதிகளில் சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது.
லடாக் அருகே இரு ராணுவங்களுக்கும் இடையே கடந்த ஆண்டு ஏற்பட்ட மோதல் சம்பவங்களுக்குப் பிறகு, அருணாசலப் பிரதேச மாவட்டம் ஒன்றில் புதிதாக ஒரு கிராமத்தையே உருவாக்கியது சீனா. அது தொடர்பான செய்திகள் இந்தியாவில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தின. அந்த அதிர்ச்சியிலிருந்தே இன்னும் மீளாத நிலையில், திபெத் - இந்திய எல்லையில் 36,000 கோடி ரூபாய் மதிப்பில் சாலைகள், மின் உற்பத்தி, தொழில் வாய்ப்புகள் உள்ளிட்ட வசதிகளுடன் சுமார் 600 கிராமங்களை உருவாக்க முனைப்பு காட்டுகிறது சீனா. இதன் மூலம் எதிர்காலத்தில் அருணாசலப் பிரதேசத்தை சீனா முழுமையாக உரிமை கோரினாலும் ஆச்சர்யம் இல்லை!
இவை தவிர, வற்றாத ஜீவநதியும் உலகின் மிக நீளமான நதிகளில் ஒன்றுமான பிரம்மபுத்ராவின் குறுக்கே உலகின் மிகப்பெரிய அணையைக் கட்டி நீர்மின் உற்பத்தியை மேற்கொள்ள நடவடிக்கைகளை எடுத்துவருகிறது சீனா. இமயமலையில் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் உற்பத்தியாகி, இந்தியாவின் அருணாசலப் பிரதேசம் வழியாக நுழையும் பிரம்மபுத்ரா நதி அஸ்ஸாம் தாண்டி, பங்களாதேஷ் வழியே பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. பிரம்மபுத்ராவின் கரையோரங்களில் வாழக்கூடிய மக்களுக்கு அந்த நதியே பாசனம், மீன்பிடி, போக்குவரத்து என உயிர்நாடியாக விளங்குகிறது. சீனாவின் அணை கட்டப்பட்டால் அதனால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் இந்தியாவே எதிர்கொள்ள வேண்டும்.

சீனாவின் அத்துமீறல்களைக் கண்டிக்கவோ, அவற்றைத் தடுத்து நிறுத்தவோ போதுமான நடவடிக்கைகளை நம் அரசு மேற்கொள்ளவில்லை என்ற விமர்சனம் இருக்கிறது. இந்தநிலையில்தான், “சீனாவுக்கு இணையாக எல்லைப் பகுதியில் உள்கட்டமைப்புகளை அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் இந்திய அரசு மேற்கொள்ளும்” என்று சொல்லியிருக்கிறார் முப்படைத் தளபதி பிபின் ராவத். எல்லைப் பகுதியில் இந்திய அரசு மேற்கொள்ளும் சிறு சிறு பணிகளுக்கே கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது சீனா. போர்ப் பதற்றம் வரை நிலைமை போய்விடுகிறது. அப்படியிருக்கும்போது, அரசியல்வாதிகளின் வாக்குறுதி கணக்காக எதைவைத்து முப்படைத் தளபதி இப்படிக் கூறினார் என்பதுதான் யாருக்குமே புரியாத புதிராக இருக்கிறது.
சீனா - இந்தியா எல்லையில் அதிக பதற்றம் நிலவுவதாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் அமெரிக்க உளவுப் பிரிவு தெரிவித்திருக்கிறது. ‘சர்ச்சைக்குரிய பிராந்தியம் உட்பட அந்நிய நிலப்பரப்புகளில் தனது பிடியை வலுப்படுத்துவதற்கும், தனது இருப்பை அண்டை நாடுகள் சர்ச்சையின்றி ஏற்றுக்கொள்ள வைப்பதற்கும் சீனா தனது அரசு இயந்திரம் முழுவதையும் பயன்படுத்துகிறது’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. அமெரிக்காவின் தேசிய நுண்ணறிவு இயக்குநர் அலுவலகத்தின் ‘வருடாந்தர அச்சுறுத்தல் மதிப்பீடு’ அறிக்கையிலும், ‘வெளிநாடுகளில் தனது பொருளாதார, அரசியல், ராணுவ இருப்பை விரிவுபடுத்துவதற்காகப் பல மில்லியன் டாலர் முதலீட்டில் சாலை உள்ளிட்ட திட்டங்களை சீனா தொடர்ந்து செயல்படுத்த முனைகிறது’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
Tags
Comment / Reply From
Popular Posts
-
dhanush movie status
- Post By Admin
- March 2, 2021
-
sports
- Post By Muthu
- March 4, 2021
-
'தி லெஜண்ட்’ விமர்சனம்
- Post By Admin
- July 30, 2022
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!