• Friday, 05 September 2025
'கர்ணன்’ விமர்சனம்

'கர்ணன்’ விமர்சனம்

தென்மாவட்டத்தைக் கதைக்களமாக கொண்ட ’அசுரன்’  திரைப்படம் தனுஷூக்கு பல்வேறு பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்றுக் கொடுத்தது. அதேபோல், தென்மாவட்டத்தைக் கதைக்களமாகக் கொண்ட ’பரியேறும் பெருமாள்’ இயக்குநர் மாரிசெல்வராஜ் மீது கவனத்தை உண்டாக்கியத் திரைப்படம். இந்நிலையில், நடிகர் தனுஷூம் இயக்குநர் மாரிசெல்வராஜூம் அதே தென்மாவட்ட கதைக்களத்தில் ஒன்றாக இணைந்ததால் ’கர்ணன்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது எனலாம்.

 

திருநெல்வேலி மாவட்டம் பொடியன்குளம் கிராமத்தைச் சேர்ந்த துடிப்புமிக்க இளைஞன் தனுஷ் (கர்ணன்).  பொடியன்குளம் ஊர் வழியாகச் செல்லும்  பேருந்துகள் அந்த கிராமத்தில் நிற்பதில்லை. இதனால், ஆதிக்க ஜாதியினர் வசிக்கும் பக்கத்துக் கிராமத்துக்கு சென்றுதான் அவர்கள் பேருந்தைப் பிடிக்க வேண்டும் என்பதால், அடிக்கடி  மோதல்கள் ஏற்படுகிறது. இதனால், அக்கிராம மக்கள் படும் அவஸ்தைகளும் வேதனைகளும் ஏராளம். இதன் உச்சகட்டமாக, கர்ப்பிணி பெண்ணை ஏற்றுவதற்காகக்கூட நிற்காமல் செல்லும் பேருந்து ஒன்று அடித்து நொறுக்கப்படுகிறது. இதனையடுத்து காவல்துறை பொடியன்குளத்தை தும்சம் செய்ய முற்படுகிறது. சாதிய வன்மம் கொண்ட காவல் துறையின் அத்துமீறலை முடிவுகட்ட வாளேந்தும்  கர்ணன்,  பொடியன்குளம் மக்களின் உரிமைகளை மீட்டாரா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதி கதை.

 

’கண்டா வரச்சொல்லுங்க’ பாடல் படத்தின் தொடக்கத்திலேயே வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடிவிடுகிறது. ஆயினும் படம் முழுக்க ஒருவிதமான தளர்வு இருக்கிறது. படத்தின் சண்டை காட்சிகள் கொஞ்சம் விறுவிறுப்பைக் கொடுத்தாலும் கூட, தனுஷூன் உடல்மொழியில் ஆக்ரோஷமே இல்லை. காவல் துறை உயர் அதிகாரியான  நட்ராஜிக்கும் (கண்ணபிரான்) தனுஷூக்கும் நடக்கும் மோதல் தட்டையாக இருப்பது ஏமாற்றத்தை உண்டாக்குகிறது.


லால், யோகிபாபு, சண்முகராஜா, குதிரை வளர்க்கும் பையன் ஆகியோரின் கதாபாத்திர உருவாக்கம் இருந்த அளவிற்குக் கூட தனுஷூன் கதாபாத்திர உருவாக்கம் வலுவாக உருவாக்கப்படாதது போல் தோன்றுகிறது. முகபாவனை, வசனம், ஆடை வடிவமைப்பு, தோற்றம் ஆகியவை சாதாரணமாக இருப்பதற்கு நமக்கு தனுஷ்- மாரிசெல்வராஜ் மீது இருக்கும் அதிகப்படியான எதிர்பார்ப்பு கூட காரணமாக இருக்கலாம்.


 கதாநாயகி ராஜிஷா விஜயன் வழக்கமான தமிழ் சினிமா கதாநாயகிகள் போல் வருகிறார்.

 

தலை இல்லாத புத்தர் சிலை, நாட்டார் தெய்வங்கள், மீன், குதிரை, யானை, கழுதை, வாள், கழுகு, காட்டுப்பேச்சி, கதாபாத்திரங்களின் பெயர்கள்  தொன்மக் குறியீடுகளாக இருப்பது மாரி செல்வராஜின் புதிய பங்களிப்பு. சந்தோஷ் நாராயணன் இசை, தேனி ஈஸ்வரின் படத்தின் ஒளிப்பதிவு, செல்வாவின் படத்தொகுப்பு, ராமலிங்கத்தின் கலை ஆகியவை கர்ணனை உயிர்ப்புடன் வைக்க உதவியிருக்கிறது.


“எங்க தேவை என்ன, எங்க பிரச்சனை என்ன என்பதை புரிஞ்சிக்க முடியல, ஆனா எப்படி நிக்குறோம் என்பது மட்டும் பிரச்சினையா தெரியுது. நாங்க நிமிர்ந்து நின்னுட்டோம், இனி குனிய முடியாது” போன்ற வசனங்கள் படத்திற்கு மேலும் பலம் சேர்க்கிறது.

 

தலை இல்லாத புத்தர் சிலை, சுவரில் வரையப்படும் ஓவியம் (இமானுவேல் சேகரன்) ஆகியவை தலித் அரசியலுக்கான ஏதோ ஒரு குறியீட்டை விட்டு செல்கின்றன.

Comment / Reply From