• Friday, 05 September 2025
'சுல்தான்’ திரை விமர்சனம்

'சுல்தான்’ திரை விமர்சனம்

மும்பையில் ரோபோட்டிக்ஸ் என்ஜினியராக இருக்கும் கார்த்திக்கு தனியாக ரோபோட்டிக்ஸ் நிறுவனம் ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற ஆசை. சென்னையில் பிறந்து வளர்ந்த கார்த்திக்கு அப்பாவின் (நெப்போலியன்) தொழில் பிடிக்காத காரணத்தால் எப்போதாவதுதான் சென்னை வருவார். அப்படி ஒரு முறை சென்னை வரும் கார்த்தி எதிர்பாராத நிகழ்வுகளால் சேலம் அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு  செல்கிறார். மலையடிவாரத்தில் உள்ள அந்த கிராமத்தினரிடமிருந்து விவசாய நிலங்களைப் பறிக்கத் துடிக்கும் கார்ப்பரேட் நிறுவனத்திடமிருந்து நிலங்களை கார்த்தி பாதுகாத்தாரா? இல்லையா? என்பதுதான் சுல்தான்.

சென்னையில் நூற்றுக்கும் மேற்பட்ட ரவுடிகளுடன் தாதாவாக இருப்பவர் நெப்போலியன். இவருடைய மனைவியாக வரும் அபிராமி, கார்த்தியை பெற்றெடுக்கும் போதே இறந்து விடுகிறார். ரவுடிகளின் அன்பில் வளர்க்கப்படும் கார்த்தி,  நீண்டநாள் கழித்து சென்னை வரும்போது, ரத்த வாடையை ரசித்தது வாழும் ரவுடிகளை திருத்த முற்படுகிறார் என்று போகிறது கதை.

 
கல்வி என்றால் சூர்யா; விவசாயம் என்றால் கார்த்தி என ஆகிவிட்டதால் இந்தபடத்திலும் விவசாயத்தைத் தூக்கிப் பிடிக்கிறார் கார்த்தி.

புழுதி பறக்கும்  மண்ணில்  வெளுத்த தோலுடன் வரும் ராஷ்மிகா மந்தனாவின் அழகில் சொக்கி நிற்கிறார் கார்த்தி. ரவுடி அண்ணன்களை நல்லவர்களாக மாற்றவேண்டும் என்பதற்காக கார்த்தி மேற்கொள்ளும் முயற்சிகள் கலகலப்பானவை.

ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் சண்டைக் காட்சிகளை அற்புதமாகப் படம்பிடித்துள்ளார். இதுவே கார்த்தி ரசிகர்களுக்கு கொஞ்சம் ஆறுதலைத் தரலாம். இடைவேளை வரை கலகலப்பாகச் செல்லும் படம், அதற்குப் பின்னர் அலுப்பை ஏற்படுத்துகிறது. கிராமத்து வில்லனாக நடித்திருக்கும் கேஜிஎப் ராம் சில இடங்களில் தனது நடிப்பால் மிரட்டுகிறார். அதேபோல், கார்ப்பரேட் வில்லன் நவாப் ஷா சில காட்சிகளில் வந்து போகிறார். வில்லன்கள் தமிழ் தான் பேசுகிறார்களா என்ற சந்தேகம் அடிக்கடி வந்துபோகிறது. பொன்வண்ணன், மயில்சாமி, சிங்கம் புலி போன்றவர்களுக்கு ஆங்காங்கே கொஞ்சம் வசனங்கள்.

விவேக் மெர்வின் இசையில்  ’சண்டையில கிழியாத சட்டை இல்ல குமாரு’ பாடல் அதிர்கிறது. பின்னணி இசை யுவன்ஷங்கர் ராஜாவினுடையது.

தமிழ் சினிமாவின் வழக்கமான மாஸ் ஹீரோ திரைப்படம்தான். சமகால போக்கின் படி விவசாயத்தைக் கலந்து பிசைந்து காரசாரமாக விருந்து படைத்துள்ளார் இயக்குநர் பாக்யராஜ் கண்ணன்.

Comment / Reply From