• Friday, 05 September 2025
ஜனங்களின் கலைஞன் காலமானார்

ஜனங்களின் கலைஞன் காலமானார்

நகைச்சுவை நடிப்பால் மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த நடிகர் விவேக் இன்று அதிகாலை காலமானார். விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கும் அவரது உடலுக்கு இன்று மாலை 5 மணியளில் இறுதிச்சடங்குகள் நடைபெற இருக்கிறது.

கே.பாலசந்தர் இயக்கத்தில் 1987-ல் வெளியான 'மனதில் உறுதி வேண்டும்' என்கிற திரைப்படம் மூலம் தமிழ்த்திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் விவேக். கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக தமிழ் சினிமா உலகில் பயணித்து, நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பரபரப்பாக இயங்கிவந்த விவேக் பத்மஶ்ரீ உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

 

நேற்று காலை திடீர் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் இன்று அதிகாலை 4.35 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு வயது 59.

நடிகர் விவேக்

விவேக்கின் மரணச்செய்தி வெளியானதும் பல்வேறு திரைநட்சத்திரங்கள் கண்ணீரோடு அவருக்கு அஞ்சலி செலுத்திவருகிறார்கள்.

''விவேக் பிரிந்துவிட்டார் என்பதை நம்பமுடியவில்லை. பல தசாப்தங்களாக மக்களை மகிழ்ச்சிப்படுத்தியவர். அவரின் புகழ் என்றும் மக்களிடத்தில் நிலைத்திருக்கும்'' என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தன் அஞ்சலி செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார்.

''சமூகத்தின் மீது தீரா நேசம் கொண்ட விவேக் அவர்களின் பிரிவு, வார்த்தைகளில் சொல்ல முடியாத துயர்'' என இயக்குநர், நடிகர் பார்த்திபன் குறிப்பிட்டிருக்கிறார்.

''அன்புதம்பி விவேக்கின் மறைவு என்கிற வார்த்தையை பயன்படுத்தவே கஷ்டமாகயிருக்கிறது. வார்த்தைகளால் அவரது குடும்பத்துக்கோ, ரசிகர்களுக்கோ ஆறுதல் சொல்வது என்பது இயலாத காரியம்'' என்று நடிகர் சத்யராஜ் தனது வருத்தத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

இன்று சினிமா தொடர்பாக நடைபெறயிருந்த பல்வேறு நிகழ்ச்சிகளும் நடிகர் விவேக்கின் மறைவால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் நடிகர் விவேக் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

நடிகர் விவேக்கின் திடீர் மரணம் பலரை வேதனையடைய செய்துள்ளது.

விவேக்கின் காமெடி நடிப்பும், வசன உச்சரிப்பும் மக்களை மகிழ்வித்தன.

தனது படங்களிலும் நிஜ வாழ்க்கையிலும் சுற்றுச்சூழல் மற்றும் சமூகம் மீது அக்கறை காட்டியவர் நடிகர் விவேக் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டி உள்ளார்.

Comment / Reply From