• Wednesday, 02 July 2025
மீனாட்சி திருக்கல்யாணம் டும் டும் டும்..

மீனாட்சி திருக்கல்யாணம் டும் டும் டும்..

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.

நேரில் காண அனுமதி இல்லாததால் இணையதளம் மூலம் மக்கள் கண்டு பக்தி பரவசம் அடைந்தனர்.

புகழ்மிக்க மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்ததால் இந்த ஆண்டும் மக்கள் பங்களிப்பு இல்லாமல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

தினம் ஓர் அலங்காரத்தில் ஆடி வீதியில் மீனாட்சியம்மன் - சுந்தரேசுவரருடன் எழுந்தருளினார்.

8-ம் நாள் பட்டாபிஷேகம், 9-ம் நாள் திக்கு விஜயம் என்று விமரிசையாக நடந்த விழாவில் 10-ம் நாளான இன்று திருக்கல்யாணம் நடந்தது.

 

இன்று காலை மணக்கோலத்தில் எழுந்தருளிய மீனாட்சி சொக்கநாதருக்கு திருக்கல்யாண மண்டபத்தில் ஐந்து வகை தீபாராதனை நடத்தப்பட்டது. பின்பு ஆடி வீதியில் வலம் வந்தனர். பல்வேறு பூஜைகளுக்கு பின், கோயில் தக்கார், அதிகாரிகள் கலந்துகொள்ள திருக்கல்யாணத்தை சிவாசார்யர்கள் நடத்தி வைத்தனர்.

திருக்கல்யாண விழாவை இணையதளம் மூலம் மக்கள் கண்டு களித்தாலும், நேரில் காணவும் மக்கள் திரண்டு வந்திருந்தனர். ஆனால், அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

திருமணமான பெண்கள் இணையதளத்தில் பார்த்தும், கோயிலருகே வந்திருந்தும் புதுத்தாலி மாற்றிக் கொண்டனர். பிரமாண்டமாக நடைபெறும் கல்யாண விருந்து வைபவம் இந்தாண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மக்கள் பங்களிப்பு இல்லாதது குறையாக இருந்தாலும் சிறப்பாக நடந்து முடிந்தது திருக்கல்யாணம்.

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!