• Wednesday, 02 July 2025
வேலியே பயிரை மேய்ந்த கதை இதுதான்

வேலியே பயிரை மேய்ந்த கதை இதுதான்

வேலூர் மாவட்டம், ஊசூர் அடுத்த குருமலையிலுள்ள நச்சுமேடு கிராமத்தில், சாராயம் காய்ச்சுவதாக வந்த தகவலின் பேரில், அரியூர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான காவலர்கள் அங்கு சென்றுள்ளனர். சாராய கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இளங்கோ, செல்வம் ஆகியோரின் வீடுகளுக்குச் சென்று சோதனை செய்தனர். அவர்களது வீடுகளில், சுமார் ஆயிரம் லிட்டர் சாராய ஊறல், எட்டு மூட்டை வெல்லம், 50 லிட்டர் சாராயம் மற்றும் சாராயம் காய்ச்சத் தேவையான மூலப்பொருள்கள் இருந்ததாகவும், அவற்றைக் கைப்பற்றி அழித்ததாகவும் கூறப்படுகிறது.

அப்போது எஸ்.ஐ உட்பட அந்த மூன்று காவலர்களும் இளங்கோ, செல்வம் ஆகிய இருவரது வீட்டிலிருந்து சுமார் ரூ.8.50 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் 15 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வேக வேகமாகத் தப்பிக்க முயன்றுள்ளனர். இதையறிந்த மலைக் கிராம மக்கள், மூன்று காவலர்களையும் இடைமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பாகாயம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுபா, மூன்று காவலர்களிடமிருந்த நகை, பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளார். இது தொடர்பாக, மலைக் கிராம மக்கள் கொடுத்த புகாரின்பேரில், வேலூர் ஏ.எஸ்.பி ஆல்பர்ட் ஜான் விசாரணை மேற்கொண்டுவருகிறார்.

விசாரணைக்குப் பிறகு அரியூர் சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன், காவலர்கள் யுவராஜ், இளையராஜா ஆகிய மூன்று பேர் மீதும் இரண்டு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று பேரையும் சஸ்பெண்ட் செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுள்ளன. காவலர்களே கைவரிசை காட்டியிருக்கும் இந்தச் சம்பவம், வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!