• Thursday, 05 December 2024
அபாய கட்டத்தை நெருங்கும் இந்தியா : எச்சரிக்கும் சு.வெங்கடேசன் எம்.பி.

அபாய கட்டத்தை நெருங்கும் இந்தியா : எச்சரிக்கும் சு.வெங்கடேசன் எம்.பி.

`ஆக்ஸிஜன் பற்றாக்குறையில் நாம் அபாயகட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்' என்று அரசுக்கு எச்சரிக்கை செய்திருக்கிறார் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்.

தற்போது நாடுமுழுவதும் ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் பற்றாக்குறையை பார்த்து ஒவ்வொரு மாநில மக்களும் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இதுபோன்ற சூழல் தமிழகத்தில் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதை அறிக்கை மூலம் அரசுக்கு சுட்டிக் காட்டியுள்ளார் மதுரை எம்.பி சு.வெங்கடேசன்..அதைப்பற்றி நம்மிடம் பேசும்போது, "தமிழகத்தின் மருத்துவ ஆக்ஸுஜன் உற்பத்தி திறன் 400 மெட்ரிக் டன். ஏப்ரல் மாத மத்தியில் நமது மருத்துவ பயன்பாட்டிற்கான ஆக்ஸிஜன் தேவை 240 மெட்ரிக் டன்னாக இருந்தது.

ஆனால், கடந்த சில நாட்களாக நமது தேவை 350 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. இது நாம் அபாயகட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை காட்டுகிறது.

திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு தினமும் விநியோகிக்கப்படும் ஆக்ஸிஜன் அளவு 5 மெட்ரிக் டன். ஆனால் தினமும் தேவையோ 7 மெட்ரிக் டன். தர்மபுரி மாவட்டத்துக்கு தினமும் ஒரு மெட்ரிக் டன் விநியோகிக்கப்படுகிறது. ஆனால் அங்கு தேவையோ தினமும் 3 மெட்ரிக் டன். 

நாமக்கல் மாவட்டத்துக்கு தினமும் 6 மெட்ரிக் டன் விநியோகிக்கப்படுகிறது. ஆனால், அங்கு தேவையோ 10 மெட்ரிக் டன்.திருச்சி மாவட்டத்துக்கு கடந்த ஒரு வாரத்தில் 10 மெட்ரிக் டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அங்கு தினசரி தேவையோ 5 மெட்ரிக் டன்.தேனி மாவட்டத்துக்கு கடந்த ஒரு வாரத்தில் விநியோகிக்கப்பட்டுள்ள அளவு 5 மெட்ரிக் டன். ஆனால், அங்கு தேவையோ ஒரு வாரத்துக்கு 15 மெட்ரிக் டன்.

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு கடந்த நான்கு நாட்களாக ஆக்ஸிஜன் விநியோகம் எதுவும் செய்யப்படவில்லை. ஆனால், அங்கு தினமும் ஒரு மெட்ரிக் டன் தேவைப்படுகிறது.

இப்படி, தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஆக்சிஜன் தேவையின் அளவு தினசரி கூடிக்கொண்டிருக்கிறது, பற்றாக்குறையின் அளவும் வேகமாக கூடுகிறது. தமிழக அரசிடம் இப்போது நாம் எதிர்பார்ப்பது கூடுதல் திட்டமிடலும், விரைவான செயல்பாடும்தான்" என்றார்.

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!