• Tuesday, 03 December 2024
ஆக்சிஜன் அபாயத்தில் தமிழ்நாடு

ஆக்சிஜன் அபாயத்தில் தமிழ்நாடு

``நாமும் நமது நகரமும் சுற்றியுள்ள மாவட்டங்களும் மருத்துவ அபாய நிலையை அடைந்துள்ளோம்" என்று எச்சரித்துள்ளார் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்.

தமிழகத்தில் வேகமாகப் பரவி வரும் கோவிட் இரண்டாம் அலையின் பாதிப்பால் மருத்துவமனைகளில் இடமில்லாத நிலையும், அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ள நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அதன் அபாயத்தைப் பற்றி எச்சரிக்கை செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்...

``ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிக்குப் படுக்கை கிடைக்க வேண்டுமென்றால், ஏற்கெனவே படுக்கையில் உள்ள நோயாளி, அங்கிருந்து அகன்றால் மட்டுமே கிடைக்கும் என்பதுதான் தனியார், அரசு மருத்துவமனைகளின் இன்றைய நிலைமை. இதுதான் அபாய கட்டத்தின் ஆரம்பம்.

`ஆக்சிஜன் சிலிண்டர்கள் கையிருப்பு மே 7-ம் தேதி வரை மட்டுமே இருக்கும், மே 8-ம் தேதி மிக மோசமான சூழ்நிலையை எட்டிவிடுவோம்' என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு மருந்துக்கழக நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுதான் தமிழகம் முழுவதும் உள்ள நிலை.

 

கேரளாவிலிருந்து தென்தமிழகத்துக்கு வழங்கப்பட்டுக் கொண்டிருந்த 40 டன் ஆக்சிஜன், மத்திய அரசின் புதிய உத்தரவால் நிறுத்தப்பட்டுள்ளது. உடனடியாக அதை வழங்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.

நேற்று மத்திய அரசு பிறப்பித்த உத்தரவில் தமிழகத்தின் ஆக்சிஜன் தேவையை முற்றிலும் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

நமது ஆக்சிஜன் தேவை இரண்டு மடங்காக அதிகரித்த நிலையிலும் மத்திய ஒதுக்கீட்டில் இருந்து நமக்கு அதிகப்படுத்தித் தர மறுக்கிறார்கள். நிலைமை அனைத்து வகையிலும் கைமீறிக்கொண்டிருக்கிறது. மத்திய அரசிடமிருந்து நமக்கான உரிமையைக் கேட்டுப் பெறுகின்ற போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவோம். இப்பொழுது உடனடித் தேவை, போர்க்கால அடிப்படையிலான மேலாண்மைத்திறன்.

ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்குப் படுக்கைகளை உறுதிப்படுத்துவது, ஆக்சிஜன் தேவைப்படாத நோயாளிகளை ஆக்சிஜன் படுக்கையில் இருந்து மாற்றுவது, கூர்மையான மருத்துவக் கண்காணிப்பின் அடிப்படையில் இப்பணியை செய்தால் நம்மால் பலரின் உயிரை இந்த அபாய கட்டத்திலும் காப்பாற்ற முடியும்.

 

மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் ஒவ்வொரு மணிநேரத்துக்கு ஒருமுறை நிலைமையை உன்னிப்பாகக் கவனித்துப் பணியாற்ற வேண்டும்.

பொறுப்பேற்கும் நம் முதல்வர், மருத்துவ அவசரநிலை போன்று நிலைமை உள்ளதால் கட்டளை அறை அமைக்க உத்தரவிட்டுள்ளார். மாவட்ட அளவிலான கட்டளை அறைகளின் செயல்பாடும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

பேரிடர் காலத்தில் அதிகாரத்தில் இருப்பவர்களின் சிறு அசைவும் செயல்களும் மனித உயிர்களைக் காக்கும் என்பதை அனைவரும் உணர்ந்து செயல்படுவோம்" என்று தெரிவித்துள்ள சு.வெங்கடேசன், முன்னதாக, `தமிழ் மக்கள் உயிர்கள் முக்கியமில்லையா?' என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு
அவசர கடிதமும் அனுப்பியுள்ளார்.

அதில், ``தேசிய சுகாதார முகமையின் இயக்குநர் டாக்டர் சஞ்சய் ராய் வெளியிட்டுள்ள மே 5-ம் தேதியிட்ட மாநிலங்களுக்கான மருத்துவ ஆக்சிஜன் ஒதுக்கீடு திட்டத்தைப் பார்த்து அதிர்ந்து விட்டேன். இதில் தமிழகத்துக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

10 நாள்களுக்கு முன்பு தமிழகத்துக்கு 280 மெட்ரிக் டன் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது மாநிலம் முழுவதும் ஏற்பட்டுள்ள கோவிட் பரவலால், மருத்துவ நிபுணர்கள் கருத்துப்படி 500 மெட்ரிக் டன்னாகத் தமிழகத் தேவை உயர்ந்திருக்கிறது. மத்திய அரசு சார்ந்த நிறுவனங்களின் சில மதிப்பீடுகளே 400 மெட்ரிக் டன்கள் என்று கூறுகிறது.

தமிழகத்துக்கு கூடுதல் ஒதுக்கீடு இல்லை. ஒரு கேள்வியை மன வலியோடு எழுப்பும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். தமிழ் மக்கள் உயிர்கள் முக்கியமில்லையா?

செவ்வாய் இரவு செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையில் 13 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. ஆக்சிஜன் பற்றாக்குறையே அதற்குக் காரணம். அங்கு கோவிட் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள 447 பேரில் 309 பேர் ஆக்சிஜன் தேவைப்படுபவர்கள். இது தனித்த உதாரணம் அல்ல. தமிழகத்தின் பல பகுதிகளில் இதுதான் நிலைமை.

பல அரசு, தனியார் மருத்துவமனைகள் பல சிரமங்களோடும், உயிர் பயத்தோடும் வரும் நோயாளிகளை திருப்பி அனுப்பி வருகின்றன.

இன்னும் ஓரிரு நாள்களில் இதைவிட நிலைமை மோசமாகக் கூடும். ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிர் இழப்புகள் ஏற்பட்டால் தமிழக மக்களுக்கு மத்திய அரசு பதில் சொல்ல வேண்டி வரும்" என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அபாய கட்டத்திலிருந்து மீள தக்க மருத்துவ உதவி கிடைக்குமா?

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!