• Saturday, 23 November 2024
ஆசிரியர்கள் மீதான பாலியல் புகாரை விசாரிக்க தனிக்குழு : அமைச்சர் அறிவிப்பு

ஆசிரியர்கள் மீதான பாலியல் புகாரை விசாரிக்க தனிக்குழு : அமைச்சர் அறிவிப்பு

சென்னையின் பிரபல தனியார் பள்ளியான பி.எஸ்.பி.பி-யில் பணிபுரியும் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர், மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டதாகவும், அரைகுறை ஆடையுடன் ஆன்லைன் வகுப்புக்கு வந்ததாகவும், ஆபாசமாகப் பேசியதாகவும் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பள்ளியின் டீனுக்கு புகார் அனுப்பப்பட்டது. எனினும் பள்ளி தரப்பில் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற தகவல் வெளியானது, தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த விவகாரம்.

இந்தநிலையில், ஆசிரியர் ராஜகோபாலனை தமிழக காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதனிடையே ராஜகோபாலன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில், அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போக்சோ சட்டம் உள்பட 5 பிரிவுகளில் ஆசிரியர் ராஜகோபாலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதியின் இல்லத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே ஆன்லைன் வகுப்புகளை நெறிப்படுத்துவது தொடர்பாக இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்திக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ``ஆன்லைன் வகுப்புக்கு என்று தனியாக நெறிமுறைகள் இருக்கிறது. இப்போது அது பின்பற்றப்படுவதாக் தெரியவில்லை. தொடர்ந்து அனைத்து நெறிமுறைகளை பின்பற்றுவது உறுதி செய்யப்படும். புதிய நெறிமுறைகளும் வெளியிடப்படும். போலீஸார் தற்போது இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள்.

பள்ளிகளில் ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்களை விசாரிப்பதற்கு என்று தனிக்குழு அமைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்திருக்கிறது. நல்ல ஆசிரியர்களுக்கு களங்கம் வராத வகையில் இந்த குழு அமையும். ஆன்லைன் வகுப்புகளில் இப்படி ஒரு விஷயம் நடக்கும்னு யாரும் எதிர்பார்க்கவில்லை.. இது எங்களுக்கும் ஒரு பாடம் தான். இனி வரும் காலங்களில் அது மாதிரியான தவறுகள் நடக்காமல் பார்த்து கொள்வோம்” என்றார்.

இதனிடையே, இந்த பாலியல் புகார் விவகாரத்தில் பள்ளி நிர்வாகத்துக்கு சம்மன் அனுப்ப போலீஸார் முடிவு செய்திருக்கிறார்கள். மாணவர்கள் புகார் தெரிவித்தும் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!