• Saturday, 23 November 2024
உலகின் மிகப்பெரிய விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷ்யா

உலகின் மிகப்பெரிய விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷ்யா

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷியா ஏவுகணைகளை வீசியது. விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் ராணுவ உள்கட்ட மைப்புகளை குறிவைத்து குண்டுகளை வீசியது.
 
இந்த நிலையில் உக்ரைன் தயாரித்த உலகின் மிகப் பெரிய சரக்கு விமானத்தை ரஷியா அழித்துள்ளது. ஏ.என்-225 ‘மிரியா’ என்று பெயரிடப்பட்ட அந்த விமானம் ரஷியாவின் ஏவுகணை தாக்குதல் மூலம் தகர்க்கப்பட்டு இருக்கிறது.
 
தலைநகர் கீவ் அருகே உள்ள ஹோஸ்டோமல் விமானநிலையத்தில் ரஷிய படையினரின் குண்டுவீச்சால் உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம் அழிக்கப்பட்டதாக உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்தார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-
உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான மிரியா ரஷிய ஆக்கிரமிப்பாளர்களால் அழிக்கப்பட்டது. நமது மிரியாவை ரஷியா அழித்திருக்கலாம். ஆனால் வலுவான சுதந்திரமான ஜனநாயக ஐரோப்பிய நாடு என்ற நமது கனவை அவர்களால் ஒருபோதும் அழிக்க முடியாது. நாம் வெற்றி பெறுவோம்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
உக்ரைன் அரசின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில், ‘உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான மிரியா ரஷியாவால் அழிக்கப்பட்டுள்ளது. அந்த விமானத்தை நாம் மீண்டும் உருவாக்குவோம். வலுவான சுதந்திரமான மற்றும் ஜனநாயக உக்ரைன் என்ற நமது கனவை நிறைவேற்றுவோம். அவர்கள் மிகப்பெரிய விமானத்தை எரித்தனர். ஆனால் எங்கள் மிரியா ஒரு போதும் அழியாது’ என்று தெரிவித்துள்ளது.
 
மிரியா விமானம் உக்ரைனின் அன்டோனோ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. மிரியா என்றால் உக்ரைன் மொழியில் கனவு என்று அர்த்தம்.
 
இந்த விமானம் கடந்த 1985-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. 30 சக்கரங்கள், 6 எஞ்சின்கள், 290 அடி இறக்கைகளுடன் தயாரிக்கப்பட்ட இந்த விமானம் உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம் என்ற சிறப்பை பெற்றது.
இந்த விமானத்தால் 4,500 கிலோமீட்டர் வரை செல்ல முடியும். கொரோனா கால கட்டத்தில் உலகம் முழுவதும் உயிர்காக்கும் தடுப்பூசி மற்றும் மருந்துகளை மிரியா விமானம் எடுத்துச்சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!