• Thursday, 05 December 2024
உஷார் மக்களே.. ரெம்டெசிவர் பெயரில் கொள்ளை

உஷார் மக்களே.. ரெம்டெசிவர் பெயரில் கொள்ளை

நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. கொரோனா பாதித்த பலருக்கு மருத்துவமனையில் இடம் கூட கிடைக்காத நிலை இருந்து வருகிறது. கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க பயன்படும் ரெம்டெசிவிர் மருந்துக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு இம்மருந்து போதிய அளவு கிடைக்காமல் இருக்கிறது. இதனால் கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் இம்மருந்து எங்கு கிடைக்கும் என்று தேடி அலைய ஆரம்பித்துள்ளனர். அவர்களின் தேடுதல் வேதனையில் சிலர் பணம் பார்க்க ஆரம்பித்துள்ளனர். சொந்தங்களின் உயிரை எப்படியாவது காப்பாற்றிவிடமாட்டோமா என்ற எண்ணத்தில் இருப்பவர்களை இந்த கும்பல் குறிவைக்கிறது.

ஆன்லைனில் யாராவது கொரோனா சிகிச்சை மருந்து தேடினால் அவர்களை இந்த மோசடி பேர்வழிகள் தங்களிடம் ரெம்டெசிவிர் மருந்து இருப்பதாக போன் செய்து பேசி பணத்தை வாங்கிக்கொண்டு தலைமறைவாகிவிடுகின்றனர். மும்பை மட்டுமல்லாது நாடு முழுவதும் இது போன்ற மோசடிகள் நடந்து கொண்டிருக்கிறது. மும்பையை சேர்ந்த கனிகா மோகன் என்பவரின் தோழி குருகிராம் நகரில் உள்ள மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந்தார். அவர் கனிகாவிடம் ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படுகிறது. ஆனால் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்.

இதையடுத்து கனிகா தனக்கு தெரிந்த நபர்கள் மூலம் இம்மருந்து எங்காவது கிடைக்குமா என்று தேடிப்பார்த்தார். ஆன்லைனில் இம்மருந்து எங்கு கிடைக்கும் என்று தேடினார். அதனை பார்த்துவிட்டு அஜய் அகர்வால் என்பவர் தொடர்பு கொண்டு தான் சிப்லா மருந்து கம்பெனி பிரதிநிதி என்று தெரிவித்ததோடு தன்னிடம் மருந்து இருப்பதாக தெரிவித்தார். உடனே இந்த விபரங்களை கனிகா தனது தோழிக்கு தெரிவித்து போன் நம்பரையும் கொடுத்தார். அவரது தோழி நம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொண்ட போது மருந்தை அனுப்ப 18 ஆயிரத்தை ஆன்லைனில் அனுப்பும்படி கேட்டார். கனிகாவின் தோழியும் பணத்தை அனுப்பினார். ஆனால் பணம் கிடைத்தவுடன் அந்த நபர் காணாமல் போய்விட்டார். போன் கால்களுக்கு பதிலளிக்காமல் நம்பர்களை பிளாக் பண்ணிவிட்டார்.

இதேபோன்று சுபம் கார்வார் என்பவரின் உறவினர் மும்பை அருகில் உள்ள தானே மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு இருந்தார். டாக்டர்கள் ரெம்டெசிவிர் மருந்தை ஏற்பாடு செய்யும் படி கேட்டுக்கொண்டனர். இதனால் அந்த நோயாளியின் உறவினர்கள் எங்காவது இம்மருந்து கிடைக்குமா என்று தேடினர். சுபம் கார்வார் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் போன்ற தளங்களில் இது தொடர்பாக பதிவிட்டார். இதனை பார்த்த வாட்ஸ்அப் உறுப்பினர் ஒருவர் தன்னிடம் அம்மருந்து இருப்பதாக கூறி போன் செய்தார்.

அம்மருந்தை கொடுக்க 18 ஆயிரம் ருபாயை ஆன்லைனி அனுப்பும் படி கேட்டுக்கொண்டார். மருந்து கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் இருந்த சுபம் கார்வார் ஆன்லைனில் 18 ஆயிரத்தை அனுப்பிவைத்தார். ஆனால் அதன் பிறகு பணத்தை வாங்கிய நபர் சுபம் கார்வார் நம்பரை பிளாக் செய்துவிட்டார். இதையடுத்து இது குறித்து சுபம் ஆன்லைனில் போலீஸில் புகார் செய்துள்ளார்.

ஜெயஸ்ரீஷெட்டி என்ற பெண்ணின் சகோதரர் மும்பை பவாய் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு இருந்தார். அவருக்கு சிகிச்சையளிக்க ரெம்டெசிவிர் மருந்து தேவைப்பட்டது. ஷெட்டிக்கு தெரிந்த ஒருவர் மூலம் சிப்லா கம்பெனியில் வேலை செய்யும் ஒருவரின் போன் நம்பர் கிடைத்தது. அவரிடம் போன் செய்து பேசிய போது ரு.17,500 ஆன்லைனில் அனுப்பி வைத்தால் இரண்டு மணி நேரத்தில் மருந்து சப்ளை செய்யப்படும் என்று தெரிவித்தார். ஷெட்டியும் அப்பணத்தை அனுப்பி வைத்தார். ஆனால் பணம் கிடைத்த பிறகு அந்த நபர் தலைமறைவாகிவிட்டார். இந்த மோசடி நடப்பதற்கு ஒரு நாளுக்கு முன்புதான் ஷெட்டியின் தாயார் கொரோனாவுக்கு உயிரிழந்திருந்தார். அதனால் எப்படியாவது தனது சகோதரனை காப்பாற்றிவிடவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார். அவரிடமும் மோசடி பேர்வழிகள் கைவரிசை காட்டியுள்ளனர். இதேபோன்று டெல்லியை சேர்ந்த சதாப் நஸ்மி என்பவரும் தனது நண்பருக்காக ஆன்லனில் கொரோனா சிகிச்சை மருந்தை தேடி மோசடி பேர்வழிகளிடம் 8 ஆயிரத்தை இழந்துள்ளார். மும்பையை சேர்ந்த சஞ்சய் ஷா என்பவரும் இது போன்று மோசடி பேர்வழிகளிடம் பணத்தை கொடுத்து ஏமாந்திருக்கிறார்.

மும்பை பெண்டி பஜார் பகுதியை சேர்ந்த அஸ்லாம் மல்கனி என்பவரின் உறவினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது சிகிச்சைக்கு கொரோனா சிகிச்சை மருந்து தேவைப்பட்டது. டாக்டர்கள் அம்மருந்தை வெளியில் வாங்கி வரும்படி கேட்டனர். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை. இதையடுத்து வாட்ஸ்அப் குழுக்கள், பேஸ்புக்களில் இது குறித்து கோரிக்கை வைத்தார்.

அதனை பார்த்த ஒருவர் தன்னிடம் மருந்து இருப்பதாகவும் அதற்கு ரூ.75 ஆயிரம் கொடுக்கவேண்டுமென்றும் தெரிவித்தார். பணத்தை ஆன்லைனில் அனுப்பவேண்டும் என்றும், மருந்தை கூரியரில் அனுப்புவேன் என்று தெரிவித்தார். ஆனால் அஸ்லாம் தான் நேரில் பணத்தை கொடுத்துவிட்டு மருந்தை வாங்கிக்கொள்வதாக தெரிவித்தார். ஆனால் மருந்து வைத்திருக்கும் நபர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இறுதியில் அஸ்லாம் உறவினர் கொரோனாவிற்கு இறந்துவிட்டார்.

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!