• Friday, 22 November 2024
கல்வி கொள்கையில் மத்திய அரசு சதி : வைகோ

கல்வி கொள்கையில் மத்திய அரசு சதி : வைகோ

கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு 12-ம் வகுப்புக்கான சி.பி.எஸ்.இ பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக நேற்று (01-06-2021)அறிவிக்கப்பட்டது. பிரதமர் தலைமையில் முக்கிய அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தகுந்த மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (02-06-2021) ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தலைமை செயலாளர், உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மாநில கல்வித்திட்ட பிளஸ் 2 தேர்வு பற்றி ஆலோசனை நடத்தி முடிவு இன்று அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதில் சூழ்ச்சி உள்ளதாக தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ``மத்திய அரசின் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ (Indian Certificate of Secondary Education) ஆகியவற்றில், மேனிலை இறுதி ஆண்டுத் தேர்வை நடத்துவது இல்லை என, பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்து இருக்கின்றார். மாணவர்களின் உடல்நலம், மனநலத்தைக் கணக்கில் கொண்டு, இந்த முடிவை எடுத்து இருப்பதாக விளக்கம் அளித்து இருக்கின்றார்.

 ஆனால், நீட் தேர்வு கிடையாது என அறிவிக்கவில்லை, இந்த ஆண்டும் நடத்தப் போகின்றார்கள். அப்படியானால், அந்தத் தேர்வு எழுதுகின்ற அந்த மாணவர்களின் உடல்நலனில் பிரதமருக்கு அக்கறை இல்லையா? அவர்கள் மனஅழுத்தங்களால் பாதிக்கப்பட மாட்டார்களா? அவர்களை மட்டும் கொரோனா தொற்று தாக்காமல், விதிவிலக்கு அளிக்குமா? எனவே, இது ஒரு சூழ்ச்சித் திட்டமே ஆகும். காரணம், அவர்கள் ஏற்கனவே கொண்டு வந்து திணித்து இருக்கின்ற புதிய கல்விக் கொள்கையின்படி, கல்லூரிகளில் சேருவதற்கு, மேனிலைப்பள்ளித் தேர்வில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. தேசிய தேர்வு முகமை நடத்தும் திறன் அறித் தேர்வில் பெறுகின்ற மதிப்பெண்களின் அடிப்படையில்தான் சேர்க்கை என்று கூறி இருக்கின்றார்கள்.
 

எனவே, இந்த ஆண்டு மட்டும் அல்ல, இனி எப்போதுமே மேனிலைப்பள்ளித் தேர்வு நடத்த வேண்டிய தேவை இல்லை என்பதுதான் அவர்கள் திட்டம் ஆகும்.

ஆனால், மாநில அரசுகளின் பாடத்திட்டங்களைப் பொறுத்தமட்டில், மேனிலைப் பள்ளித் தேர்வில் பெறுகின்ற மதிப்பெண்களின் அடிப்படையில்தான், கல்லூரிச் சேர்க்கை நடைபெறுகின்றது. அயல்நாடுகளின் பள்ளி, கல்லூரிச் சேர்க்கைக்கும் அந்த மதிப்பெண்களே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. வேலை வாய்ப்புகள் பெறுவதற்கும் அதுவே தகுதியாக இருக்கின்றது. மருத்துவக் கல்லூரிகளுக்கும் அந்த அடிப்படையில்தான் சேர்க்கை நடைபெற வேண்டும்; நீட் தேர்வு கூடாது என்பதுதான், தமிழ்நாட்டின் கருத்து ஆகும்.

எனவே, மத்திய அரசின் சூழ்ச்சிக்கு அடிபணியாமல், தமிழ்நாட்டின் கல்வியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரின் கருத்துகளைக் கேட்டு, அதன்படி தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும். கொரோனா தொற்றின் வேகம் குறைந்த பிறகு, ஒரு மாத முன் அறிவிப்போடு, மேனிலைப் பள்ளித் தேர்வுகளை நடத்த வேண்டும் தமிழ்நாட்டில் வலுவான பள்ளிக் கல்வி கட்டமைப்பு உள்ளதால், மாணவர்கள் குழப்பம் அடையாமல், தங்களின் பயிற்சிகளைத் தொடருகின்ற வகையில், மேனிலைப் பள்ளித் தேர்வு நடக்கும் என்று தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்” என்றார்.

 

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!