கவர்னரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரிய ஸ்டாலின்
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் தி.மு.க. மட்டும் 125 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது.
கூட்டணி கட்சி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ம.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்களையும் சேர்த்து தி.மு.க.வுக்கு 133 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. புதிய ஆட்சியை ஏற்படுத்த முறைப்படி சட்டசபை தி.மு.க. தலைவரை தேர்வு செய்ய தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் கூட்டத்தை பொதுச் செயலாளர் துரைமுருகன் கூட்டினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று மாலை 6 மணி அளவில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என். நேரு, துணை பொதுச் செயலாளர்கள் பொன்முடி, ஐ.பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வரவேற்றார்.
கூட்டம் முடிந்ததும் மு.க.ஸ்டாலின் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு கிண்டி கவர்னர் மாளிகைக்கு மு.க.ஸ்டாலின் சென்றார். அவருடன் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் சென்று இருந்தனர்.
அங்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அப்போது அவர் சட்டமன்ற கட்சி தலைவராக எம்.எல்.ஏ.க் களால் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம் வழங்கினார்.
ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோரினார். இதை கவர்னர் பன்வாரிலால் ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து கவர்னர் பன்வாரிலால் புரோகித், மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து பூங்கொத்து வழங்கினார். ஆட்சி அமைப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதாக கூறினார். பின்னர் அங்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவருக்கும் கவர்னர் தேனீர் வழங்கினார்.
நாளை மறுநாள் 7-ந்தேதி முதல்-அமைச்சராக பதவி ஏற்க விரும்புவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கிண்டி கவர்னர் மாளிகையில் பதவி ஏற்பு விழாவை வைத்துக் கொள்ளலாம் என்றும் விருப்பம் தெரிவித்தார். இதையும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஏற்றுக் கொண்டார்.
ஆட்சி அமைக்க கவர்னர் முறைப்படி அழைப்பு விடுத்ததும் அமைச்சரவை பட்டியலை நாளை மு.க.ஸ்டாலின் கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கவர்னருடன் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்ததைத் தொடர்ந்து கிண்டி கவர்னர் மாளிகை வளாகத்தில் உள்ள திறந்த புல்வெளி மைதானத்தில் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. அங்கு சுமார் 200 பேர் அமரும் வகையில் பதவி ஏற்பு விழா நிகழ்ச்சிகள் எளிமையான முறையில் நடைபெறுகிறது.
பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கும் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி விழாவில் பங்கேற்க வரும் அனைவருக்கும் இன்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
Comment / Reply From
You May Also Like
Popular Posts
-
dhanush movie status
- Post By Admin
- March 2, 2021
-
sports
- Post By Muthu
- March 5, 2021
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!