• Sunday, 24 November 2024
கொடநாடு வழக்கு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

கொடநாடு வழக்கு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக சயான், மனோஜ் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். தற்போது இவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியில் உள்ளனர். இது தொடர்பான வழக்கு நீலகிரியில் உள்ள ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.


இந்த வழக்கை மீண்டும் முதலில் இருந்து விசாரிக்க வேண்டும் என போலீசாரும், இந்த வழக்கில் கூடுதல் தகவல்களை அளிக்க உள்ளதாக சயானும் கோர்ட்டில் தெரிவித்தனர். இதையடுத்து கடந்த 17-ந் தேதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உள்ளிட்ட உயர் போலீசார் சயானிடம் விசாரணை நடத்தி ரகசிய வாக்குமூலம் பெற்றனர். இதேபோல் விபத்தில் இறந்த கனகராஜின் சகோதரர் தனபாலிடம் விசாரித்தனர்.

தொடர்ந்து இந்த கொலை தொடர்பாக கோத்தகிரி, கொடநாடு, கூடலூர் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் இன்ஸ்பெக்டர், 2 எஸ்.ஐ.க்கள் உள்பட போலீசாரிடம் நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தினார். அவர்கள் அளித்த விவரங்களும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கடந்த 27-ந் தேதி இந்த வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சயான் மற்றும் தனபால் அளித்த வாக்குமூலங்கள் அறிக்கையாக தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூடுதல் விசாரணை நடத்த வேண்டியதால் அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது.

இதையடுத்து வழக்கு இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்று ஊட்டி மாவட்ட கோர்ட்டில் கொடநாடு கொலை வழக்கு நீதிபதி சஞ்சய் பாபா முன்பு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகினர்.

அரசு தரப்பில் வக்கீல்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோரும், எதிர்தரப்பை சேர்ந்த வக்கீல்களும் ஆஜராகி இருந்தனர். விசாரணை தொடங்கியதும் அரசு தரப்பில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மேலும் போலீஸ் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் கூடுதல் கால அவகாசம் வேண்டும் என கேட்டு மனு தாக்கல் செய்தனர்.

மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி சஞ்சய் பாபா இந்த வழக்கை அடுத்த மாதம் 1-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!