• Wednesday, 18 December 2024
கொரோனா இரண்டாம் அலை : திணறும் இந்தியா

கொரோனா இரண்டாம் அலை : திணறும் இந்தியா

கைமீறி இருக்கிறது கொரோனாவின் இரண்டாம் அலை. பிரதமர் மோடி கூறியது போல கொரோனா பரவல் தொற்று பரவ தொடங்கிய போது இருந்த நிலை இப்போது இல்லை. நமக்கு அப்போது என்ன செய்வது என்று தெரியாது. கையுறைகள் இல்லை, தேவையான முகக்கவசங்கள் இல்லை. தடுப்பு மருந்து இல்லை. இதனை எதிர்கொள்ளத் தேவையான அனுபவமும் இல்லை. ஆனால், புயல் வேகத்தில் எல்லாவற்றையும் தயாரித்தோம். தன்னிறைவை அடைந்து, வேண்டிய வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலையைக் கூட அடைந்தோம். ஆனால், நமக்கு கிடைத்த அனுபவத்தை நாம் பயன்படுத்திக் கொண்டோமா?

கொரோனா சோதனை
கொரோனா சோதனை
AP

சர்வதேச நிலையும், இந்தியாவின் நிலையும்...:

இன்றைய காலை நிலவரப்படி, சர்வதேச அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 கோடிக்கும் மேல். இதில் 3.1 கோடி என்ற எண்ணிகையுடன் முதல் இடத்தில் இருக்கிறது அமெரிக்கா. இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.4 கோடி, மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1.7 லட்சம்.

மக்கள் தொகை விகிதாசார அடிப்படையில் அமெரிக்காவுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் பெரும் மோசம் இல்லை என தோன்றலாம். ஆனால், டெல்லியில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்களில் நால்வரில் ஒருவருக்கு கொரோனா என்பது இந்தியாவுக்கு நல்ல செய்தி அல்ல.

கொரோனா

கொரோனா தொற்று பரவ தொடங்கிய சீனாவில் இப்போது உள்ள ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? ஆயிரத்திற்கும் கீழ்தான். மக்கள் தொகையில் நம்மை போன்ற நாடுதான் சீனாவும். எப்படி அவர்களால் கட்டுப்படுத்த முடிந்தது? நாம் எங்கே தவறினோம்?

 

பெரிய நாடான சீனாவின் கதை இதுவென்றால், சிறிய நாடான இஸ்ரேல், இனி பொது இடங்களில் மாஸ்க் அணியதேவையில்லை என முடிவெடுத்து இருக்கிறது. ஆம், தடுப்பு மருந்தை அதிகளவில் மக்களுக்குச் செலுத்திய நாடுகளில் ஒன்றான இஸ்ரேலில் இனி பொது இடங்களில் முகக்கவசம் அணிய தேவையில்லை.

இஸ்ரேல் சமாளித்தது எப்படி?

இஸ்ரேலும் ஒரு சமயத்தில் கொரோனாவை எதிர்க்கொள்ள முடியாமல் திணறிய தேசம் தான். சொல்லப்போனால் கொரோனாவால் சூழப்பட்ட தேசமும் கூட… அண்டைநாடுகளான இரான், இராக் என கொரோனா தொற்று மிகுதியாக இருந்த நாடுகளை எல்லையில் கொண்டிருக்கும் நாடு இது.

சரி… எப்படி அவர்கள் கொரோனாவை சமாளித்தார்கள்? மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கினார்கள், தடுப்பூசி அதிகளவிலான மக்களுக்கு கொடுத்தார்கள்.

இஸ்ரேலின் மிகப்பெரிய மருத்துவமனையான ஷெபா மருத்துவ மையத்தின் பேராசியார் இயால் இஷாம், இஸ்ரேலில் ஹெர்ட் இம்மியூனிட்டி வளர்ந்துவிட்டது என்கிறார். அங்குக் கட்டுப்பாடுகளைத் தளர்த்திய பின்னும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கட்டுக்குள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

எங்கே தவறியது இந்தியா?

பெயரளவில் மட்டுமே கட்டுப்பாடுகள் இருந்தது முதன்மை காரணம் என்றால் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து முன் மாதிரியாக இருக்க வேண்டிய அரசியல் ஆளுமைகளே தேர்தல் பிரசாரத்தில் தமக்குக் கூடிய கூட்டத்தைப் பெருமையாக நினைத்தது மற்றொரு காரணம்.

பொது சுகாதார அறக்கட்டளையின் தலைவர் பி ஶ்ரீநாத் ரெட்டி, “நமக்கு ஹெர்ட் இம்மியூனிட்டி வந்துவிட்டது என தவறாக பலர் நினைத்து, மீண்டும் பழைய வாழ்க்கை முறைக்கே திரும்பிவிட்டனர். இது இரண்டாம் அலை இவ்வளவு மோசமாக இருக்க முக்கிய காரணம்” என்கிறார்.

 

மக்களுக்கு அன்றாட வாழ்க்கையை நடத்தியாக வேண்டும். கொரோனாவைவிட மிகக் கொடுமையானது பசி. நோய் வந்து இறப்பதைவிடப் பசி வந்து இறப்பது கொடுமை. அவர்கள் வேலைக்கு போகத்தான் நினைபார்கள்… பழைய வாழ்க்கை முறைக்கு திரும்பதான் நினைப்பார்கள். கடந்த அலையின் போதே அரசு தங்களை கைவிட்டதாக எண்ணியவர்கள் அவர்கள். இது வறுமை கோட்டின் பக்கத்தில் இருப்பவர்களின் நிலை என்றால்… மத்தியதர வர்க்கத்தின் நிலை வேறு, கடன் கொடுத்தவர்கள் வீட்டின் கதவை தட்டினால் தற்கொலயை நோக்கி செல்ல கூடியவர்கள் அவர்கள். அதனால், அவர்களாலும் வீட்டிலேயே முடங்கி இருக்க முடியாது. வேலைக்கு செல்ல வேண்டும், பழைய வாழ்க்கைக்கு செல்ல வேண்டும்.

மக்களை மட்டுமே குறை சொல்ல முடியாது. அரசு என்ன செய்தது என்பதுதான் கேள்வி?

தடுப்பூசி குறித்த விழிப்புணர்வைக் கூட அரசு முறையாக ஏற்படுத்தத் தவறிவிட்டது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

பிப்ரவரி மாத மத்தியிலேயே மிச்சிகன் பல்கலைக்கழகதின் பேராசிரியர் பர்மர் முகர்ஜி, “இந்தியா தனது தடுப்பூசி செயல்பாட்டை வேகப்படுத்த வேண்டும்” என எச்சரித்து இருந்தார். ஆனால், அது அரசின் காதுகளை எட்டவில்லை.

கும்பமேளா மக்களின் நம்பிக்கை சார்ந்ததுதான். பண்பாடு, கலாசாரம்தான். மறுப்பதற்கில்லை. ஆனால், இப்படியான சூழலில் அதனை குறைந்தபட்சம் முறைப்படுத்தியதா அரசு?

ப்ளூம்பெர்க்கில் தொடர்ந்து எழுதும் பத்தி எழுத்தாளர் மிஹிர் சர்மா, “இந்தியாவின் பொதுநிலையாகி போன அரசின் அதன் அங்கத்தினரின் ஆணவம், தேசியவெறி, அதிகாரத்துவ திறமையின்மை ஆகியவை ஒன்றிணைந்து இந்த நெருக்கடியை உருவாக்கி இருக்கின்றன” என்று குறிப்பிடுகிறார்.

இதனை நம்மால் மறுக்க முடியுமா?

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகாரத்தை தன்னிடம் குவித்து வைத்திருக்கிறது மத்திய அரசு. தடுப்பூசி, மருந்து என அனைத்தும் அதன் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. மாநில அரசுகள் தங்களுக்கு போதுமான மருந்துகள் தாருங்கள் என கதறிக் கொண்டிருக்கின்றன. ஆனால், கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமை என்கிறது மத்திய அரசு.

கால்களில் சங்கிலி பூட்டி சாவியை வைத்துக் கொண்ட ஓடு… ஓடு…’ என்றால் எப்படி ஓட முடியும்?

இதனால்தான், கடுப்பான ஓர் அமைச்சர் கொரோனாவால் மாண்டவர்களின் இறப்பு சான்றிதழிலும் மோடியின் படம் அச்சடிக்க வேண்டும் என்கிறார்.

நிச்சயம் மீள்வோம்

அரசு எப்போதும் போல மக்கள் தங்களை தாங்களே பார்த்துக் கொள்வார்கள் என்ற மனநிலைக்கு வந்துவிட்டதாகத் தெரிகிறது. நம்மாளும் இன்னொரு பொது முடக்கத்தைத் தாங்க முடியாது.

இந்த சூழலை கடப்பது கடினம்தான். ஆனால், நமக்கு நாமே சில கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் இதனை கடக்க முடியும். தடுப்பூசி ஒரு வழி, தேவையில்லாமல் வெளியே வருவதை தவிர்ப்பது பொது வழி. நமக்கான வழிகளில் நாம் சென்று இந்த நிலையுலிருந்து மீள்வோம்.

நிச்சயம் மீள்வோம். எந்த சந்தேகமும் வேண்டாம். நாம் இதனைவிட மோசமான சூழலில் இருந்தும் மீண்டிருக்கிறோம்.

 

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!