கோடை + கொரோனா : சம்மர் சவால்கள்; வெல்லும் வழிகள்
கோடையில் கொரோனா வைரஸ் சூடு தாங்காமல் வந்த வழியே போய்விடும் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தவர்கள், கடந்த வருட கோடையில்தான் அதன் உக்கிர முகத்தைப் பார்த்தார்கள். இந்த வருடமும் கொரோனா ஆபத்து விலகிய பாடாக இல்லை. கோடையோடு கொரோனாவையும் நேருக்கு நேர் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் எல்லோரும். வழக்கத்தைவிட இந்த வருடம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்குமாமே என்பதில் தொடங்கி, கோடையில் நோய் எதிர்ப்புத் திறன் கூடுமா என்பதுவரை சம்மர் குறித்த சந்தேகங்கள் ஏராளம்...
சம்மரை சமாளிக்க நாம் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை, வாழ்வியலில் தேவைப்படும் மாற்றங்கள், வழக்கமாகச் செய்கிற தவறுகள் என எல்லாவற்றையும் விரிவாக விளக்கியிருக்கிறார்கள் நிபுணர்கள் பலர்.
கொரோனாவோடு கோடையையும் வெல்வோம்...
புயல், மழைக்காலங்களில் வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கைகளை உற்றுநோக்கும் மக்கள், கோடையில் அவ்வளவாகக் கண்டுகொள்வதில்லை. இந்த வருடத்தின் கோடைக்கால வெப்பநிலை குறித்து பல்வேறு கேள்விகளுடன் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசனை சந்தித்தோம்...
இந்த வருடம் கோடையில் வெப்பத்தின் தாக்கம் எந்தளவுக்கு இருக்கும்?
`இந்த வருடம் கோடைக்காலத்துக்கான வெப்பநிலை குறித்து இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் விரிவான அறிக்கையைக் கொடுத்திருக்கிறது. அதன்படி பார்த்தால், தமிழகத்தைப் பொறுத்தவரை மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்களுக்கான வெப்பநிலை கடந்த ஆண்டு சராசரி வெப்பநிலையைவிட சற்று குறைவாகத்தான் இருக்கும்.
அதற்கு என்ன காரணம்?
நமக்கு கிழக்கிலிருந்து காற்று வீசிக்கொண்டிருக்கிறது. கிழக்கிலிருந்து காற்று வீசும்போது, மதிய நேரத்தில் கடல் காற்றானது உள் மாவட்டங்கள் வரை வீசக் கூடும். அப்படியான சூழலில், வெப்பநிலை அதிகமாக உணரப்படுவதற்கு வாய்ப்பில்லை. கடல் காற்று இல்லாத நேரத்தில் மட்டும் வெப்ப நிலை அதிகமாகும். வெப்பநிலை குறைவாக இருக்கும் எனச் சொல்வது மூன்று மாதங்களுக்குமான சராசரி அளவுதான். மற்றபடி அவ்வப்போது ஓரிரு நாள்களுக்கு வெப்ப நிலை அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன.
ஓரிரு நாள்கள் வெப்பநிலை அதிகரிக்கும் என்கிறீர்கள்... அது எந்த மாதத்தில், எந்தெந்தப் பகுதிகளில் இருக்கும்?
ஏப்ரல் இரண்டு அல்லது மூன்றாவது வாரத்தில் ஆரம்பித்து தென்மேற்குப் பருவ மழை தொடங்கும்வரை ஓரிரு நாள்களுக்கு வெப்பநிலை அதிகமாவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. வட கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட சில உள் மாவட்டங்களிலும் அதற்கான வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டைவிட சராசரி வெப்பநிலை குறைவாக இருக்கும் என்றாலும்கூட கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் மாதம் இரண்டு அல்லது மூன்றாவது வாரங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதாவது, வெப்பநிலை வழக்கமாக இருந்தாலும்கூட அங்கு வெப்பம் அதிகமாக உணரப்படும். காரணம், கடலோரப் பகுதிகளில் காற்றில் இருக்கும் அதிகமான ஈரப்பதம்.
காற்றில் ஈரப்பதம் இருந்தால்தான் வெப்பம் குறைவாக உணரப்படும் என்றுதானே நினைப்போம்...
மனித உடலின் சராசரி வெப்பநிலை 36.6 டிகிரி செல்சியஸ். சுற்றுப்புற வெப்பநிலையானது அந்த அளவைத் தாண்டாதபட்சத்தில் காற்றில் ஈரப்பதம் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் பிரச்னை இல்லை. அதுவே, சுற்றுப்புற வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸைத் தாண்டும்போது காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் அது வெப்பத்தை அதிகமாக உணர வைக்கும். அதாவது, உடலின் சராசரி வெப்பநிலையைவிட சுற்றுப்புற வெப்பநிலை அதிகரிக்கும்போது உடல் வெப்பத்தைக் கட்டுக்குள் வைக்க நம் உடலில் உள்ள தண்ணீர் வியர்வையாக வெளியேற்றப்படும். அந்த வியர்வை விரைவில் ஆவியாவதன் மூலமே உடல் வெப்பநிலை சரியான அளவில் தக்கவைக்கப்படும்.
சுற்றுப்புற வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாக இருக்கும்போது காற்றின் ஈரப்பதம் அதிகமாக இருந்தால், வெப்பத்தைக் குறைப்பதற்காக நம் உடல் வியர்வையாக வெளியேறும் நீர் ஆவியாவது காற்றின் ஈரப்பதத்தால் தடுக்கப்படும். நம் வியர்வை எளிதில் ஆவியாகாதபட்சத்தில் உடலின் சூடு இன்னும் அதிகரிக்கும். அப்போது நாம் வெப்பத்தை அதிகமாக உணர்வோம். அந்த நிலையைத்தான் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று குறிப்பிடுகிறோம்.
வெப்பம் அதிகமாக இருக்கும் சூழலில், மக்கள் என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்?
ஏப்ரல் மாதம் இரண்டு, மூன்றாவது வாரத்திலோ, மே மாதம் முதல் வாரத்திலோ சூரியனின் கதிர்கள் தமிழகப் பகுதிகளில் செங்குத்தாக விழும். அப்படியான நாள்களில் காலை 11 மணியிலிருந்து மதியம் 3 மணி வரைக்கும் திறந்தவெளியில் வெயில்படும் இடத்தில் இருந்தால் உடல் சோர்வு அதிகமாக இருக்கும். ஒரு சிலர் வெப்பம் தாங்காமல் ‘சன் ஸ்ட்ரோக்’ ஏற்பட்டு உயிரிழப்பதற்கான வாய்ப்புகூட இருக்கிறது. ஆகையால், வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸ் 43 டிகிரி செல்சியஸ் என உயரும் காலகட்டத்தில் 11 மணியிலிருந்து 3 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியில் செல்லும் மக்கள் அதிக அளவு தண்ணீர் பருக வேண்டும். தண்ணீருடன் உப்பு எலுமிச்சைச்சாறு கலந்து குடிக்கலாம்.
மழைக்காலம், குளிர்காலங்களில் சாப்பிட்டதைப் போலவே காரமான, பொரித்த உணவுகளை கோடையிலும் சாப்பிட சிலர் விரும்புவார்கள். இது முற்றிலும் தவறான பழக்கம். கோடையில் அதிகம் வியர்ப்பதால் உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டு உடல் வறட்சியாக இருக்கும். அந்த நேரத்தில் காரமான உணவுகளைச் சாப்பிடும்போது உடல் மேலும் சூடாகி, அதிக வறட்சி ஏற்படும். இதனால் வயிற்றுப்போக்கு, செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம். மேலும், வயிற்றில் செரிமானத்துக்காகச் சுரக்கும் அமிலங்களுடன் காரமான உணவும் கலந்து அல்சர் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தலாம். அதனால் வெயில் காலத்தில் காரமில்லா, எளிதில் ஜீரணமாகக்கூடிய இட்லி, இடியாப்பம், மோர் சாதம் போன்ற எளிய உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது.
வெயில் பயணம் வேதனையில் முடியலாம்!
வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, வயதானவர்கள் காலை 11 முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்லக் கூடாது. ஏற்கெனவே திட்டமிட்ட பணிகள் என்றால் வெயில் தாக்கம் குறைவாக இருக்கும் காலை அல்லது வெயில் தணிந்த மாலை நேரத்தில் செல்லலாம். அப்படியே வெளியே செல்ல நேரிட்டாலும் குடை, தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை உடன் எடுத்துச் செல்ல மறக்கக் கூடாது.
தண்ணீரை அலட்சியப்படுத்தாதீர்கள்!
அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும் என்பதால் பெண்கள் தொடங்கி வயதானவர்கள் வரை தண்ணீர் குடிப்பதைக் குறைப்பார்கள். இதனால் அவர்களுக்கு எளிதில் நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டு, உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்துவிடும். எனவே, கோடைக்காலத்தில் தினம்தோறும் 2 - 3 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும். கோடையிலும் கொதித்து, ஆறவைத்த நீரையே குடிக்க வேண்டும்.
சிலர் வெயில் நேரத்தில் வெளியே சென்றுவிட்டு வந்ததும் ஃபிரிட்ஜில் வைக்கப்பட்ட தண்ணீரை உடனே எடுத்துக் குடிப்பார்கள். உடல் வெப்பமாக இருக்கும்போது உடனே குளிர்ந்த நீரைப் பருகும்போது சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்னைகள் வரலாம். பெருந்தொற்று காலத்தில் இதுபோன்ற தொற்றுகள் அண்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். மேலும், ஃபிரிட்ஜில் வைக்கப்பட்ட நீரில் கிருமிகள் சேர்வதற்கும் வாய்ப்புள்ளது. அதன் மூலமாகவும் தொற்று ஏற்படலாம்.
டயப்பர் தவிருங்கள்!
கோடையிலும் குழந்தைகளுக்கு டயப்பர் பயன்படுத்துவதை பெரும்பாலான பெற்றோர் தவிர்ப்பதில்லை. வெப்பமான காலநிலையில் அதிக இறுக்கமான டயப்பர் அணிவிக்கும்போது சருமத்தில் அரிப்பு, தடிப்புகள் போன்ற பிரச்னை ஏற்படலாம். அத்தியாவசியம் என்றால் காட்டன் டயப்பர் பயன்படுத்தலாம். அடர் நிறத்திலான மற்றும் கறுப்பு நிற உடைகளும் அணியக் கூடாது. அடர்நிற ஆடைகள் வெப்பத்தை வேகமாக உறிஞ்சி உடலுக்குக் கடத்தும். வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியலாம்.
கடினமான பயிற்சிகளுக்கு நோ!
மழை, குளிர்காலத்தில் முடங்கியிருந்தவர்கள், வெயில் தலையைக் காட்ட ஆரம்பித்ததும் உடற்பயிற்சி செய்யத் தொடங்கிவிடுவார்கள். உடற்பயிற்சி நல்லதுதான். ஆனால், கடினமாக உடலை வருத்தி பயிற்சிகள் செய்யும்போது நீர்ச்சத்து இழப்பு ஏற்படக்கூடும். அதனால் கோடையில் எளிதான உடற்பயிற்சிகளே சிறந்தவை. உடற்பயிற்சி, நடைப்பயிற்சிக்குச் செல்பவர்கள் போதுமான அளவு தண்ணீர், நீர்ச் சத்துள்ள காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
வெந்நீர் குளியல் வேண்டாமே!
வெயில் காலத்தில்கூட வெந்நீரில் குளிக்கும் பழக்கம் பலருக்கு உண்டு. சரும அலர்ஜி இருப்பவர்கள் கோடையிலும் வெந்நீரில் குளிக்கலாம். மற்றவர்கள் உடல் வெப்பநிலையைவிட சற்று அதிகமாக இருக்கும் வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். அதிக சூடான நீரில் குளிப்பதை அனைவருமே தவிர்க்க வேண்டும்.
மண்பானைத் தண்ணீருக்கு மாறுங்கள்!
மண்பானைத் தண்ணீர் உடல் சூட்டைத் தணிப்பதோடு, செரிமானத்தை யும் அதிகரிக்கும். கூடவே நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். ஃபிரிட்ஜ் வாட்டர் குடிக்க வேண்டுமென்கிற தவிப்பை மண்பானைத் தண்ணீர் தணிக்கும். மண்பானைத் தண்ணீரில் சிறிதளவு சீரகமும் போட்டு வைத்துக் குடித்தால் ரத்தமும் சுத்திகரிக்கப்படும்.
நீராகாரம் உடலுக்குக் குளிர்ச்சி தருவதோடு செரிமானத்தையும் தூண்டும். பானகம், வியர்வையால் இழந்த நீரிழப்பை ஈடுசெய்வதோடு அதில் சேர்க்கப்பட்டிருக்கிற வெல்லம் இரும்புச்சத்தையும் தரும். மோர் நம்முடைய குடல் பகுதியில் நன்மை செய்கிற பாக்டீரியாவை அதிகப் படுத்தும். கூடவே வெயில் காலத்தில் வருகிற வெப்ப கழிச்சலையும்
சரி செய்யும். இளநீரில் இருக்கிற நுண்ணூட்டச்சத்துகள் கோடைக்காலத்தில் நம் உடல் இழக்கிற நீர்த்தன்மையை உடனடியாக மீட்டுத் தரும். நுங்கை தோலுடன் சாப்பிட்டால் உடல்சூட்டால் வயிற்றில் ஏற்படுகிற புண்ணை ஆற்றும். குழந்தைகளுக்கு வியர்க்குரு வந்தால், அதற்கான பவுடரை தடவு வதற்குப் பதில் நுங்கின் நீரைத் தடவலாம். ஒரே நாளில் வித்தியாசம் தெரியும். சாயம் சேர்க்காத நன்னாரி சர்பத்தும் நல்ல உடல் சூடு தணிப்பான் தான். சர்க்கரை மற்றும் ஐஸ்கட்டி சேர்க்காத, சுகாதாரமான கரும்புச்சாறும் கோடைக்கால நீரிழப்பை ஈடுகட்டும்.
மெத்தைக்கு பதில் பாய்!
கோடைக்காலத்தில் ஃபோம் மெத்தையில் படுப்பதைவிட இலவம் பஞ்சு மெத்தையில் படுத்தால் உடம்பு சூடாகாது. உடனடியாக இலவம் பஞ்சு மெத்தை வாங்க முடியாதவர்கள், கோரைப் பாயில் படுக்கலாம். பிளாஸ்டிக் பாயைத் தவிர்ப்பது நல்லது.
உடலைக் குளிர்விக்கும் சித்த மருந்துகள்!
சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும் செம்பருத்தி மணப்பாகு உடலைக் குளிர்விக்கும். உடல் உஷ்ண பிரச்னையிருப்பவர்கள் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கிற சந்தன சிராய்களை பானைத் தண்ணீரில் போட்டு வைத்துக் குடிக்கலாம்.
Tags
Comment / Reply From
You May Also Like
Popular Posts
-
dhanush movie status
- Post By Admin
- March 2, 2021
-
sports
- Post By Muthu
- March 5, 2021
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!