• Friday, 04 July 2025
சசிகலா - ஓபிஎஸ் மீட்டிங் : கலக்கத்தில் இபிஎஸ்

சசிகலா - ஓபிஎஸ் மீட்டிங் : கலக்கத்தில் இபிஎஸ்

ஒரு மாத காலத்துக்கும் மேலாகக் களைகட்டிய தேர்தல் திருவிழாவின் முக்கியப் பகுதியான வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. ஆனாலும், அரசியல்வாதிகள் பெருமூச்சுவிட முடியாத அளவுக்குத் தலைக்குமேல் கத்தியாகத் தொங்கிக்கொண்டிருக்கிறது ரிசல்ட். எடுத்த முடிவுகள், முடித்த கூட்டணிகள், தொடுத்த அஸ்திரங்கள், கொடுத்த வாக்குறுதிகள், தவிர்த்த வாய்ப்புகள் என அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் கணக்குகளைச் சரிபார்த்துக்கொண்டிருக்கும் சூழல் இது. புதிய பூசல்கள்... திடீர் காய்நகர்த்தல்கள்... என அடுத்தடுத்த அத்தியாயங்களுக்குத் தயாராகிறது அரசியல் மேடை. முக்கியக் கட்சிகளின் கூடாரங்களில் என்ன நடக்கிறது என்பதை அறிய ஒரு ரவுண்ட் வந்தோம்...

சக்சஸ் பார்ட்டி... சசி பாசம்... அதிர்ச்சியில் அ.தி.மு.க!
 


எம்.ஜி.ஆர் தொடர்ச்சியாக மூன்று முறை ஆட்சியைப் பிடித்தார். தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியைப் பிடித்த பெருமை ஜெயலலிதாவுக்கு உண்டு. அதை ஹாட்ரிக் வெற்றியாக மாற்றிவிடலாம் என்ற எண்ணத்தில் இருந்த நிர்வாகிகள் தற்போது வருத்தத்தில் இருக்கிறார்கள். ‘‘கூட்டணியில் பா.ஜ.க-வைத் தவிர்த்திருந்தால், எங்கள் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்திருக்கும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு எதிரான அலை எப்படி எங்களையும் சேர்த்துச் சுருட்டியதோ, அதே நிலையே தற்போதும் ஏற்பட்டிருக்கிறது. ‘அ.ம.மு.க-வைச் சேர்த்துக்கொள்ளலாம்’ என்று கடைசி வரை பலரும் வலியுறுத்தியும், அதற்கு எடப்பாடி இறங்கி வரவே இல்லை. தேர்தல் முடிவுக்குப் பிறகு நிச்சயம் அதற்காக வருத்தப்படுவார்’’ என்கிறார்கள்.

அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசியபோது, ‘‘பணத்தைவைத்து வாக்குகளை வளைத்துவிடலாம் என்று எடப்பாடி தரப்பு கணக்கு போட்டது. ஆனால், கட்சியின் அடிமட்ட நிர்வாகிகளுக்குத் தலைமைமீது இருக்கும் வருத்தத்தை எடப்பாடி கவனிக்கத் தவறிவிட்டார். இதனால், முன்களத்தில் நின்று பணியாற்ற வேண்டியவர்கள், கடைசி நேரத்தில் கப்சிப் ஆகிவிட்டார்கள். அமைச்சர்களும் சொந்தத் தொகுதியில் வெற்றிபெறவே திண்டாடியதால், தங்கள் மாவட்டத்தின் பிற தொகுதிகளைக் கண்டுகொள்ளவில்லை. இதனால், பண விநியோகம் முதல் நிர்வாகிகள் ஒருங்கிணைப்பு வரை பல இடங்களில் சொதப்பல்களே மிஞ்சின.

அமைச்சர்கள் பலரும் அ.ம.மு.க நிர்வாகிகளைச் சந்தித்து தங்களுக்குச் சாதகமாக நடந்துகொள்ள வேண்டுகோள் விடுத்தார்கள். அதற்குப் பலனும் இருந்தது. குறிப்பாக, சசிகலாவுக்கு நெருக்கமானவர்களாக இருந்த செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட அமைச்சர்களின் தொகுதிகளில் போட்டியிட்ட அ.ம.மு.க வேட்பாளர்களிடம் ‘கொஞ்சம் அடக்கி வாசியுங்கள்’ என்று கடைசி நேரத்தில் தினகரன் தரப்பு சிக்னல் கொடுத்த பிறகே, அந்த அமைச்சர்கள் பெருமூச்சுவிட முடிந்தது.

சக்சஸ் பார்ட்டி... சசி பாசம்... அதிர்ச்சியில் அ.தி.மு.க!
 

ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்ட வைத்திலிங்கம், கடைசி நேரத்தில் இறக்கிய கரன்சி மட்டுமே தன்னைக் காப்பாற்றும் என்று நம்புகிறார். காரணம், அந்தத் தொகுதியில் தி.மு.க-வைவிட வைத்திலிங்கத்துக்கு அதிக அச்சுறுத்தல் கொடுத்தது அ.ம.மு.க-தான். எனவே, தேர்தல் முடிவுகள் தனக்குச் சாதகமாக வராதபட்சத்தில் எடப்பாடிமீது கோபத்தை முழுமையாகக் காட்டத் தயாராக இருக்கிறார்’’ என்றார்கள்.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீரின் நிலையே கடைசி நேரத்தில் பரிதாபமாகிவிட்டது என்று வருத்தப்படுகிறார்கள் அவரின் ஆதரவாளர்கள். ‘‘பிரசாரத்தின் கடைசி 13 நாள்கள் போடியிலேயே அவர் போராட வேண்டியிருந்தது. எடப்பாடி தனது சொந்தத் தொகுதியில் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான், வன்னியர் சமூகத்துக்கு 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு கொடுக்கும் சட்டத்தை அமல்படுத்தினார் என்பதும், அதைக்கொண்டே போடி தொகுதியில் தனக்கு எதிராகச் செக் வைத்துவிட்டார் என்பதும் பன்னீரின் கோபத்துக்குக் காரணங்கள்.

கட்சியிலும் சமூகத்திலும் தனக்குப் பிடிமானம் இல்லை என்று உணர்ந்திருக்கும் பன்னீர், சசிகலாவின் துணையை நாட முடிவெடுத்துவிட்டார். தேர்தல் முடிவு வருவதற்குள்ளாக சசிகலாவைச் சந்தித்து, எதிர்கால முடிவை எடுக்கத் துணிந்து விட்டார். தமிழ்ப் புத்தாண்டுக்குப் பிறகு கேரளாவில் ஓரிடத்தில் சசி-பன்னீர் சந்திப்பு நடக்க வாய்ப்புள்ளது. ஆனால், தேர்தல் முடிவுக்குப் பின்னர் சந்திப்பை வைத்துக்கொண்டால் தனக்கு இன்னும் பலமாக இருக்கும் என்று சசி நினைக்கிறார். சந்திப்புக்கான காலம் மாறலாமே தவிர, சந்திப்பு நடந்தே தீரும்’’ என்றார்கள் அந்த ஆதரவாளர்கள். இதையெல்லாம் கேள்விப்பட்டு எடப்பாடி தரப்பு அதிர்ச்சியில் இருக்கிறது.

பா.ம.க பரிதவிப்பு

அ.தி.மு.க இந்தத் தேர்தலில் பெரிதாக நம்பிய கட்சி என்றால், அது பா.ம.க-தான். ஆனால், பா.ம.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் இடையே கடைசிவரை கெமிஸ்ட்ரி வொர்க்-அவுட் ஆகவில்லை. குறிப்பாக, மோடி தலைமையில் நடந்த பிரசாரக் கூட்டங்களில் கூட்டணியிலுள்ள சிறிய கட்சிகள்கூட பங்கேற்ற நிலையில் பா.ம.க தலைவர்கள் யாரும் மேடையேறவில்லை. தேர்தல் முடிந்த பிறகு, பா.ம.க தலைமைக்குள் கடுமையாக விவாதங்கள் நடந்துள்ளன. அப்போது அன்புமணி தரப்பில், ‘‘ஆரம்பத்திலேயே அ.தி.மு.க கூட்டணி வேண்டாம் என்று சொன்னோம். இப்போது நமக்கு வரும் தகவல்களைப் பார்த்தால் முடிவுகள் நமக்குச் சாதகமாக இல்லையென்று தெரிகிறது. வட மாவட்டங்களில் பா.ம.க-வினர் வாக்குகள் அ.தி.மு.க-வுக்கு விழுந்த அளவுக்கு, அ.தி.மு.க வாக்குகள் பா.ம.க-வுக்கு விழவில்லை’’ என்று கவலையோடு சொல்லியிருக்கிறார்கள்.

‘இருபது இடங்களை எங்களுக்குக் கொடுத்து என்ன பயன்?’ என்று தேர்தல் முடிந்த அன்றே புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள் பா.ஜ.க-வினர். அது பற்றிப் பேசிய பா.ஜ.க நிர்வாகிகள் சிலர், ‘‘தேர்தலுக்குப் பிறகு நடத்திய சர்வேயில் அ.தி.மு.க-வின் வாக்குகள் எங்களுக்கு முழுமையாக விழவில்லை என்று தெரிந்திருக்கிறது. நாங்கள் போட்டியிட்ட பல தொகுதிகளில் அ.தி.மு.க-வையே பிரதானமாக நம்பியிருந்தோம். அ.தி.மு.க-வினரோ, எங்களுக்கு ஒழுங்காக வேலை செய்யாமல் பரிதவிக்கவிட்டனர். சென்னை ஆயிரம் விளக்கில் போட்டியிட்ட குஷ்புவுக்கு அ.தி.மு.க நிர்வாகிகள் ஒழுங்காக வேலை செய்யவில்லை. அதை அ.தி.மு.க தரப்பும் கண்டுகொள்ளவில்லை. இதனால், குஷ்புவின் கணவர் சுந்தர்.சி களத்தில் இறங்கி, ஒதுங்கியிருந்த அ.தி.மு.க நிர்வாகிகளிடம் கெஞ்சிக் கூத்தாடி தேர்தல் வேலை செய்யவைத்தார். சென்னையில் தங்கியிருந்த அமித் ஷாவிடம் இதையெல்லாம் சொன்ன எங்கள் நிர்வாகிகள், ‘அ.தி.மு.க மூத்த அமைச்சர்கள் செய்த சில தவறுகளை நாம் கண்டும் காணாமலும் இருந்ததாலேயே நமக்கு எதிரான அலை இங்கு அதிகமாக இருக்கிறது’ என்றும் சொல்லியிருக்கிறார்கள். அவரோ, ‘தேர்தல் முடிவுகள் வரும்வரை அமைதியாக இருங்கள்’ என்று அர்த்தபுஷ்டியுடன் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். தேர்தல் முடிவுக்குப் பிறகு இதற்கான பலன்களை அ.தி.மு.க அனுபவிக்கும்’’ என்றார்கள்.

தென் மண்டலத்தில் அ.தி.மு.க-வுக்கு எதிரான அலையைப் பார்த்துப் பூரித்துப்போன தினகரன், நிச்சயம் இரு தொகுதிகளிலாவது வெற்றிபெறுவோம் என்றும், 20 தொகுதிகளிலாவது தி.மு.க-வுக்கு அடுத்ததாக இரண்டாமிடம் பிடிப்போம் என்றும் நம்பிக்கையில் இருக்கிறாராம். அதேநேரம் அ.ம.மு.க நிர்வாகிகள் மத்தியிலும் புலம்பல்கள் உள்ளன. அவர்களிடம் பேசியபோது, ‘‘சசிகலா அரசியலிலிருந்து ஒதுங்கும் முடிவை எடுத்தபோது, தினகரன் எங்களிடம் ‘தேர்தலில் துணிந்து நில்லுங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று உறுதி கொடுத்தார். ஆனால், வாக்குப்பதிவு நாள்வரை அவரிடமிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை. பூத் செலவுக்குக் காசு கொடுக்கக்கூட பல வேட்பாளர்கள் திண்டாடிவிட்டார்கள். தினகரனுக்கு வேண்டப்பட்ட சிலருக்கு மட்டுமே அவர் தரப்பிலிருந்து உதவி கிடைத்திருக்கிறது. எங்களுக்கே இந்த நிலையென்றால், கூட்டணியிலிருந்த தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகளின் நிலையைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை’’ என்கிறார்கள்.

தேர்தல் ரிசல்ட் தங்களுக்குச் சாதகமாகவே இருக்கும் என்பதில் தி.மு.க உறுதியுடன் இருக்கிறது. வாக்குப்பதிவு நடந்த அன்று மாலையே சென்னை தேனாம்பேட்டையிலுள்ள ஐபேக் அலுவலகத்தில், ஸ்டாலின், உதயநிதி, வழக்கறிஞர் வில்சன் உள்ளிட்டோர் பிரசாந்த் கிஷோரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். அப்போது பிரசாந்த் கிஷோர் “தி.மு.க கூட்டணி நிச்சயம் 200 தொகுதிகளில் ஜெயிக்கும்” என்று சொல்ல, உச்சி குளிர்ந்துபோயிருக்கிறார் ஸ்டாலின். பாசிட்டிவ் செய்திகளால், தி.மு.க முகாமில் ஆங்காங்கே சக்சஸ் பார்ட்டிகள் களைகட்டத் தொடங்கிவிட்டன.

அதேசமயம், சில புகைச்சல்களும் தி.மு.க முகாமுக்குள் எழ ஆரம்பித்துள்ளன. தருமபுரி மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் ‘‘என் தொகுதி பொறுப்பாளரிடம் ஐந்து சி பணத்தைக் கொடுத்தேன். கடைசிவரை பணத்தை அவர் வெளியே எடுக்கவே இல்லை’’ என்று புகாரளித்திருக்கிறார். வேலுமணியை வீழ்த்த வேண்டும் என்று ஸ்டாலின் கங்கணம் கட்டிக்கொண்டிருந்த நிலையில், தொண்டாமுத்தூரிலுள்ள தி.மு.க நிர்வாகிகள் பலரும் வேலுமணியிடம் விலைபோனதால், வெளி மாவட்டங்களிலிருந்து ஆட்களைக் கொண்டுவந்து வேலைபார்க்கும் நிலை தி.மு.க வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதிக்கு ஏற்பட்டதாம்.

தனக்குப் போட்டியாக, அமைச்சராகும் வாய்ப்புள்ள வேட்பாளர்களை அந்தந்த மாவட்டத்தின் முக்கியப்புள்ளிகளே தேர்தலில் காலிசெய்யும் வேலையில் ஈடுபட்டார்கள் என்ற தகவலும் அறிவாலயத்துக்குச் சென்றிருக்கிறது. இன்னொருபுறம், இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட மூத்த நிர்வாகிகள் சிலர், ‘எம்.எல்.ஏ ஆகும் வாய்ப்புதான் எங்களுக்குத் தரப்படவில்லை. ஏதேனும் பசையுள்ள வாரியப் பதவியையாவது தாருங்கள்’ என்று ஸ்டாலின், உதயநிதி மற்றும் கிச்சன் கேபினெட்டை மொய்த்து வருகிறார்களாம்.

தி.மு.க-வின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஸ்டாலினின் குடும்ப வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘‘அமைச்சரவை குறித்து முதலில் குடும்பத்தினரிடம் ஆலோசனை செய்த பிறகே, மூத்த நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தவிருக்கிறார்கள். உதயநிதிக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறாராம். ஓராண்டு கழித்து அமைச்சரவை மாற்றியமைக்கும்போது கொடுக்கப்படலாம் எனத் தெரிகிறது’’ என்றார்கள்.

ஆளாளுக்கு ஒரு கணக்கில் இருக்கிறார்கள். மக்கள் என்ன கணக்கு போட்டார்கள் என்பது விரைவில் தெரியவரும்!

 

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!