
சோலார் பேனல் மோசடி : 6 வருஷம் ’உள்ளே’ போகும் சரிதா நாயர்
கேரள மாநிலத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் சோலார் பேனல் மோசடி வழக்கில் சிக்கி பிரபலமானவர் சரிதா நாயர். அதிகாரிகள், அரசியல் புள்ளிகள் என பலரது நட்புக்களை தவறாக பயன்படுத்தியதுடன், அப்போதைய முதல்வர் உம்மன் சாண்டியுடன் நெருங்கிய நட்பில் இருந்தவர் என பரபரப்பாக பேசப்பட்டவர் சரிதா நாயார்.
கேரளம், தமிழகம் உள்ளிட்ட பல பகுதிகளில் சோலார் பேனல் அமைத்து தருவதாக பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றியதாக சரிதா நாயர் மீது புகார் எழுந்தது. பல காவல் நிலையங்களில் சரிதா நாயர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டன. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பரபரப்பாக பேசப்பட்டவர், பின்னர் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் பேப்பர் கப் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனத்தை தொடங்கினார். அந்த தொழிலுக்கும் இப்போது முழுக்கு போட்டுவிட்டார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் ராகுல் காந்தியை எதிர்த்து வயநாடு தொகுதியில் போட்டியிடுவதாகக் கூறி பரபரப்பை கிளப்பினார். சோலார் பேனல் மோசடி வழக்குக்கு பிறகு தொடர்ந்து செய்திகளில் இடம்பிடித்து வந்தார் சரிதா நாயர். இந்த நிலையில் கேரள மாநிலம் கோழிக்கோடு கோர்ட், சோலார் பேனல் மோசடி வழக்கில் சரிதா நாயருக்கு ஆறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
கோழிக்கோட்டைச் சேர்ந்த அப்துல் மஜீத் என்பவர் கோழிக்கோடு கசபா காவல் நிலையத்தில் 2012-ம் ஆண்டு சரிதா நாயர் மீது ஒரு புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில் தனது வீடு, அலுவலகம் ஆகிய இடங்களில் சோலார் பேனல் பொருத்துவதாக பிஜூ ராதாகிருஷ்ணன், சரிதா நாயர் ஆகியோர் தங்கள் பெயரை ஆர்.பி நாயர் மற்று லெட்சுமி நாயர் என மாற்றிக் கூறி, 42 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கூறியிருந்தார். அந்த வழக்கு கோழிக்கோடு ஜுடிஷியல் ஃபர்ஸ்ட் கிளாஸ் மாஜிஸ்ட்ரேட் கோர்டில் நடந்துவந்தது. வழக்கில் பலமுறை நேரில் ஆஜராக கோர்ட் கூறியும் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட பிஜூ ராதாகிருஷ்ணனும், இரண்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட சரிதா நாயரும் கோர்ட்டில் ஆஜராகவில்லை.
கீமோ தெரபி சிகிச்சை காரணமாக சரிதா நாயர் கோர்ட்டில் ஆஜராக முடியவில்லை என அவரது வழக்கறிஞர் கோர்ட்டில் தெரிவித்தார். பிஜூ ராதாகிருஷ்ணனுக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை முடிந்து ஓய்வில் இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், சரிதா நாயர் கீமோ தெரபி எடுப்பதற்கான தெளிவான ஆவணங்கள் இல்லை என அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து சரிதா நாயர் மற்றும் பிஜூ ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்த ஜாமீனை, கோர்ட் கடந்த பிப்ரவரி மாதம் ரத்து செய்தது. சரிதா நாயரும் பிஜூ ராதாகிருஷ்ணனும் தாமாக முன்வந்து கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும், அப்படி ஆஜராகாமல் இருந்தால் கைதுசெய்து ஆஜராக்க வேண்டும் எனவும் கோர்ட் தீர்ப்பளித்தது.
இதைத் தொடர்ந்து கோழிக்கோடு போலீஸார் கடந்த 22-ம் தேதி திருவனந்தபுரம் சென்று சரிதா நாயரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அந்த வழக்கில் கோழிக்கோடு ஜுடிஷியல் ஃபர்ஸ்ட் கிளாஸ் மாஜிஸ்ட்ரேட் கோர்ட் இன்று அளித்த தீர்ப்பில் சரிதா நாயருக்கு 6 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், முப்பதாயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. சோலார் பேனால் வழக்கில் ஆலப்புழா, பத்தனம்திட்டா கோர்ட்டுகளிலும் சரிதா நாயருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Comment / Reply From
You May Also Like
Popular Posts
-
dhanush movie status
- Post By Admin
- March 2, 2021
-
sports
- Post By Muthu
- March 5, 2021
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!