• Friday, 05 September 2025
ஜனாதிபதிக்கு தமிழக முதல்வர் அழைப்பு

ஜனாதிபதிக்கு தமிழக முதல்வர் அழைப்பு

மு.க.ஸ்டாலின் தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பிறகு முதன் முதலாக கடந்த மாதம் 17-ந்தேதி டெல்லி சென்றார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
 
தமிழகத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் மோடியிடம் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மறுநாள் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் டி.ராஜா ஆகியோரை சந்தித்து பேசினார்.
அவர் முதல்-அமைச்சர் ஆன பிறகு இதுவரை டெல்லி சென்று ஜனாதிபதியை சந்தித்தது இல்லை. அவரை சந்தித்து பேசுவதற்காக மு.க.ஸ்டாலின்  டெல்லி சென்றுள்ளார். நேற்று மாலை தனி விமானம் மூலம் அவர் டெல்லிக்கு புறப்பட்டார். அவருடன் துர்கா ஸ்டாலின், எம்.பி.க்கள் கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோரும் சென்றனர்.
 
டெல்லி சென்றடைந்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை பாராளுமன்ற தி.மு.க. தலைவர் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா எம்.பி., தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், தமிழ்நாடு இல்ல ஆணையர் ஜக்மோகன்சிங் ராஜு மற்றும் எம்.பி.க்கள், முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர்.
 
நேற்றிரவு மு.க.ஸ்டாலின் டெல்லியில் தங்கினார். இன்று மதியம் 12 மணிக்கு அவர் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றார். அங்கு 12.15 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து பேசினார். தமிழக முதலமைச்சராக பதவியேற்றதுக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்ததாக முக ஸ்டாலின் தெரிவித்தார். அப்போது தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஜனாதிபதியிடம் அவர் வழங்கினார்.
 
சந்திப்பு முடிந்து செய்தியாளர்களிடம் முக ஸ்டாலின் கூறியதாவது:-
 
சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவுக்குத் தலைமைதாங்க குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்துவைக்க குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 7 பேர் விடுதலை விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் மேகதாது விவகாரம் தொடர்பாக பிரதமர், மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

Comment / Reply From