தயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா? : தடுப்பூசி சந்தேகமும் தீர்வும்
தலைப்பில் சொன்னதுபோல் கொரோனா தடுப்பூசி போடலாமா? வேண்டாமா என்கிற குழப்பம் பலரது மனதுக்குள்ளும் பூனை பிராண்டுவதுபோல் பிராண்டிக்கொண்டிருக்கிறது. இதுபற்றிய கேள்விகளுக்கு விடையளிக்கிறார் டாக்டர் ஃபரூக் அப்துல்லா.
கொரோனா வேகமாகப் பரவிவரும் நிலையில் சில மருத்துவமனைகளில் ஸ்டாக் இல்லை என்கிறார்கள். தடுப்பூசித் தட்டுப்பாடு வருமா?
இரண்டாம் அலை ஏறுமுகத்தில் இருக்கும் மாநிலங்களான மகாராஷ்டிரா, பஞ்சாப், ஹரியானா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகியவற்றில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மக்களின் சதவிகிதம் உயர்ந்துவருகிறது. ஒரு மாதத்திற்கு முன் ஒரு நாளைக்கு 10 லட்சம் முதல் 15 லட்சம் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு வந்தநிலையில் தற்போது 30 லட்சம் முதல் 35 லட்சம் டோஸ் போடப்படுகின்றன. மத்திய சுகாதாரத்துறையின் அறிக்கைப்படி இந்தியாவிடம் 2.4 கோடி டோஸ்கள் கைவசம் உள்ளன. 1.9 கோடி டோஸ்கள் உற்பத்தியில் உள்ளன. எனவே தடுப்பூசித் தட்டுப்பாடு ஏற்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆயினும் இரண்டாம் அலை இன்னும் பல மாநிலங்களில் ஒரு சேர அதிகமாகும் தறுவாயில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை ஒருநாளைக்கு 50 லட்சத்தை எட்டக்கூடும். அப்போதும் தட்டுப்பாடு இல்லாத நிலையை மத்திய அரசு உருவாக்கவேண்டும்.
+2 தேர்வு நடக்கவுள்ள நிலையில் தேர்வெழுதவுள்ள மாணவர்களுக்கும் தடுப்பூசி போடவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அது சரியா?
தற்போது இந்தியாவில் கிடைக்கும் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் தங்களது மூன்று கட்ட ஆராய்ச்சிகளில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களை மட்டுமே சேர்த்துக்கொண்டுள்ளன. எனவே, ஆராய்ச்சிகளில் பங்குகொள்ளாத 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்குத் தடுப்பூசி வழங்குவது நல்லதல்ல. முறையாக ஆராய்ச்சி செய்த பிறகே அந்த வயதினருக்குத் தடுப்பூசி வழங்க முடியும்.
கோவேக்சின் சிறந்ததா? கோவிஷீல்டு சிறந்ததா?
கோவேக்சின் தடுப்பூசி ஒருவருக்கு 80% நோய் தடுக்கும் திறனைத் தருகிறது என்றால், கோவிஷீல்டு 70% நோய் தடுக்கும் திறனை ஆய்வுகளில் நிரூபித்துள்ளது. கோடிக்கணக்கான மக்களுக்கு வழங்கும்போது இரண்டுக்கும் இடையேயான திறனில் பெரிய அளவு ஏற்றத்தாழ்வு இருக்காது. பாதுகாப்பிலும் இரண்டும் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல. இதுவரை சுமார் பத்துக் கோடி டோஸ்களுக்கு மேல் வழங்கியிருக்கிறோம். நம்மை அச்சுறுத்தும்படியான பாதுகாப்புக் குறைபாடுகள் இரண்டு தடுப்பூசிகளிலும் ஏற்படவில்லை. எனவே இரண்டில் எந்தத் தடுப்பூசி உங்களுக்கு மிக அருகில் கிடைக்கிறதோ, எந்தத் தடுப்பூசியை விரைவாகச் செலுத்திக்கொள்ள முடியுமோ, அதைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் கொரோனா வருகிறதே?
கொரோனாவுக்கு எதிரான முதல் தலைமுறைத் தடுப்பூசிகள் அனைத்தும், தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவருக்குத் தீவிர நோய் ஏற்படாமலும் மரணத்தைத் தடுக்கும் அளவிலும் மட்டுமே செயல்படும். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு அறிகுறிகளற்ற கொரோனாத் தொற்று ஏற்படும் வாய்ப்பு உண்டு. அறிகுறிகளுடைய சாதாரண கொரோனாத் தொற்றும் ஏற்படலாம். கோவிஷீல்டு போட்டுக்கொண்ட ஒருவருக்கு 30% அறிகுறிகளுடைய கொரோனா வருவதற்கு வாய்ப்புண்டு. கோவேக்சின் போட்டுக்கொண்ட ஒருவருக்கு 20% அறிகுறிகளுடைய கொரோனா ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. எனினும் அவர்களிடையே தீவிர கொரோனாவாக மாறும் தன்மையும் மரணம் ஏற்படும் தன்மையும் தடுப்பூசியால் சிறந்த முறையில் கட்டுப்படும் என்று நற்செய்தி சொல்கின்றன ஆய்வுகள்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு முகக்கவசம், தனிமனித இடைவெளி, சானிட்டைசர் எல்லாம் அவசியம்தானா?
ஆம்... கட்டாயம் தேவை. தடுப்பூசிகள் அறிகுறிகளுடைய கொரோனாவில் இருந்து மட்டுமே பாதுகாப்பு தருகின்றன. தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் ஒருவருக்கு அறிகுறிகளற்ற கொரோனாத் தொற்று ஏற்படலாம். எனவே அவர் பேசும்போதும் தும்மும்போதும் தடுப்பூசி போடாத நபர்களுக்கு வைரஸ் பரவலாம். மேலும், தற்போது நம் நாட்டில் 45+ வயதினருக்கு மட்டுமே தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 10% பேர் மட்டுமே தடுப்பூசி பெற்றிருக்கின்றனர். இன்னும் தடுப்பூசி பெறாமல் ஏராளமானோர் இங்கே இருக்கிறார்கள். எனவே தடுப்பூசி பெற்றவர்கள் கட்டாயம் முகக்கவசம், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து கொரோனாப் பரவலைத் தடுக்க ஒத்துழைக்க வேண்டும்.
முந்தைய கொரோனா அலையின்போது பாசிட்டிவ் ஏற்பட்ட பலரும் வீட்டில் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டனர். இப்போதும் அவ்வாறே செய்யலாமா, அல்லது, இன்னும் எச்சரிக்கை தேவையா?
முதல் அலையில் பெரும்பாலும் 45+ வயதினர் மட்டுமே கொரோனாவால் தீவிர பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். முதல் அலையில் நிகழ்ந்த கொரோனா மரணங்களில் 88% மரணங்கள் 45+ வயதினரிடையே நிகழ்ந்தது. ஆனால் இந்த இரண்டாம் அலையில் இளைஞர்களுக்கு மிதமான மற்றும் தீவிர கொரோனாத் தொற்று ஏற்படும் தன்மை இருப்பதாகத் தெரிகிறது. எனவே காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் தோன்றும் அனைவரும் உடனே பரிசோதனை செய்துகொண்டு அரசு நிர்ணயித்த இடங்களில் தனிமைப் படுத்திக்கொள்ள வேண்டும். முதல் அலையில் அறிகுறிகள் ஆரம்பித்த இரண்டாவது வாரத்தில்தான் பெரும்பாலும் நுரையீரலில் தொற்று படர ஆரம்பிக்கும். தற்போதைய அலையில் முதல் வாரத்தின் மத்தியப் பகுதியிலேயே அந்த நிலையை அடைவதைக் காணமுடிகின்றது. எனவே தாங்க ளாகவே எந்தப் பரிசோதனையும் செய்யாமல் வீட்டில் தனிமைப் படுத்திக் கொள்வது ஆபத்தான முடிவாகலாம். அறிகுறிகள் தோன்றினால் உடனே பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். நோயின் தன்மைக்கேற்ப மருத்துவர்கள் பரிந்துரைக்கும் இடங்களில் தனிமைப்படுத்திக் கொள்ளலாம்.
வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்பவர்கள் எதிலெல்லாம் கவனம் செலுத்தவேண்டும்?
ரத்த ஆக்சிஜன் அளவைக் காட்டும் ஃபிங்கர் பல்ஸ் ஆக்சி மீட்டர் கருவி, வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ளும் நபரிடம் கட்டாயம் இருக்கவேண்டும். தினமும் காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேளைகளில் ஆறு நிமிடம் மிதமான நடைப்பயிற்சி செய்துவிட்டு ஆக்சிமீட்டரில் பார்க்கவேண்டும். அந்த அளவுகள் 94%க்குக் கீழே குறைந்தால் மருத்துவமனையை நாடவேண்டும். மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் புதிதாகத் தோன்றினால் அதையும் மருத்துவர்களிடம் தெரிவிக்கவேண்டும். தேவைப்பட்டால் வீட்டிலிருந்து மருத்துவமனைக் கண்காணிப்புக்கு மாறும் நிலை ஏற்படலாம். அப்போது உடனே மருத்துவமனைக்குச் செல்லத் தயாராக இருக்க வேண்டும்.
முந்தைய அலையில் தொற்று ஏற்பட்டவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளதா?
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அண்மையில் செய்த ஆராய்ச்சியில், ‘இந்தியாவில் ஒவ்வொரு நூறு கொரோனாத் தொற்றாளர்களில் 4.5 பேர் ஏற்கெனவே தொற்று அடைந்து மீண்டும் தொற்று அடைபவர்கள்’ என்கிறது. டென்மார்க்கில் 40 லட்சம் மக்களிடம் செய்யப்பட்ட ஆய்வில், ‘முதல் தொற்றின் மூலம் கிடைக்கும் எதிர்ப்பு சக்தி இரண்டாவது முறை தொற்று ஏற்படுவதில் இருந்து 78.8% காக்கிறது’ என்பது தெரிந்தது. ஆனால், ‘இந்தப் பாதுகாப்பு 65+ வயதினருக்கு 47% ஆகக் குறைகிறது’ என்கிறது. முதல் தொற்றினால் ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தியானது சில மாதங்கள் மட்டுமே நீடிக்கிறது. எனவே முதல் முறை தொற்று பெற்றவர்களாயினும் அலட்சியத்துடன் இருந்தால் மீண்டும் தொற்றைப் பெறும் அபாயம் அதிகம். எனவே அதிக கவனம் தேவை.
ஆஸ்ட்ரா செனிகா தடுப்பூசியினால் ரத்த உறைதல் நிகழ்வுகள் ஏற்படுகின்றன என்பது உண்மையா?
ஆஸ்ட்ரா செனிகா நிறுவனமும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இணைந்து தயாரித்துள்ள தடுப்பூசி, ஐரோப்பிய நாடுகளில் வழங்கப்பட்டபோது அரிதினும் அரிதான நிகழ்வாக சிலருக்கு ரத்த உறைதல் நிகழ்வுகளையும் கூடவே தட்டணுக்கள் குறைபாட்டையும் ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ‘அரிதினும் அரிதாக’ என்றால் 2.5 கோடி மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்ட நிலையில் 86 பேருக்கு ரத்த உறைதல் நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன. பிரிட்டனில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 1.8 கோடிப் பேரில் 30 பேருக்கு ரத்த உறைதல் நிகழ்வுகள் கண்டறியப்பட்டன.
இந்தியாவைப் பொறுத்தவரை மார்ச் 31, 2021 வரை 6.3 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. அவர்களுள் தடுப்பூசி போட்டுக்கொண்ட 28 நாள்களுக்குள் 180 பேர் மரணமடைந்திருப்பதாகப் பதிவு செய்யப்பட் டுள்ளது. இந்த 180 மரணங்கள் குறித்து தேசிய தடுப்பூசிகளால் ஏற்படும் பக்கவிளைவுகளைக் கண்காணிக்கும் குழு ஆய்வு செய்துவருகிறது. இந்த அளவு என்பது ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி போட்டால் 0.3 என்ற மிக மிகக்குறைவான அளவிலேயே வருகிறது.
பெரும்பாலும் தடுப்பூசியை 45+ வயதினருக்கு மட்டுமே நாம் தற்போது வழங்கிவருகிறோம். அந்த வயதினரிடையே தடுப்பூசி வழங்கப்படாத சூழ்நிலையிலும் மரண விகிதம் என்பது அதிகம். சராசரியாக 45 வயது முதல் 80 வயதினரிடையே ஆயிரம் பேருக்கு 23 பேர் இறக்கின்றனர். இது தடுப்பூசி போட்ட பிறகு மரணமடைந்தோரை விட 76.7 மடங்கு அதிகம்.
மேலும், கோவிட் நோய் இந்தியாவில், தான் ஆட்கொள்ளும் ஒவ்வொரு ஆயிரம் பேரிலும் 12.8 பேரைக் கொல்கிறது. இது தடுப்பூசிக்குப் பின் நேர்ந்த மரணங்களைவிட 42 மடங்கு அதிகம். எனவே தடுப்பூசியால் நிறைய நன்மைகளே விளைகின்றன. எனவே அச்சமின்றி மக்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளலாம்.
உருமாறிய கொரோனாவுக்கு எதிராக தற்போதைய தடுப்பூசிகள் வேலை செய்யுமா?
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், இந்தியாவில் தற்போது வழங்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் யு.கே வேரியண்ட் மற்றும் பிரேசில் வேரியண்ட் ஆகியவற்றுக்கு எதிராக சிறப்பாகச் செயல்படுவதாகத் தெரிவித்துள்ளது. பிரிட்டனில் செய்யப்பட்ட ஆய்வில், ஆஸ்ட்ரா செனிகா தடுப்பூசி யு.கே வேரியண்ட்டுக்கு எதிராக சிறப்பாகச் செயல்படுவது தெரிகின்றது. எனினும் தென்னாப்பிரிக்க வேரியண்ட்க்கு எதிராக கிட்டத்தட்ட அனைத்து வேக்சின்களின் நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக உள்ளதைக் காணமுடிகின்றது. இன்னும் வேரியண்ட்டுகளுக்கு எதிராக தடுப்பூசிகளின் திறன் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இரண்டாவது அலையைக் கட்டுக்குள் வைக்க என்ன செய்ய வேண்டும்?
வீட்டின் பொருளாதாரத்தில் பங்கேற்காத முதியோர்கள் கட்டாயம் வீடுகளுக்குள் இருக்கவேண்டும். மற்றவர்கள் பணிக்காக வெளியே செல்லும்போது மூன்றடுக்குத் துணி முகக்கவசம் அல்லது சர்ஜிகல் மாஸ்க் அணியவேண்டும். பணியிடங்களில் முடிந்தவரை தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். கைகளை அடிக்கடி சோப் / சானிட்டைசர் போட்டு 20 நொடிகள் நீடிக்குமாறு கழுவவேண்டும். 45+ வயதினர் விரைவாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசிகள் போட்டுக்கொண்டாலும் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. அறிகுறிகளை உதாசீனம் செய்யாமல் உடனே பரிசோதனை செய்யவேண்டும். கொரோனா கண்டறியப்பட்டால் மருத்துவர் அறிவுரைப்படி செயல்பட வேண்டும்.
ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு அவசரக்கால முன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்தத் தடுப்பூசியின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து முன்பு சர்ச்சைகள் எழுந்தனவே?
ஸ்புட்னிக் தடுப்பூசியை கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் உலகின் முதல் கொரோனாத் தடுப்பூசி என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்தார். உடனே மேற்கத்திய நாடுகள், ‘அறிவியல் ஆய்வுகள் ஏதுமின்றி எப்படி அறிவிக்கலாம்’ என்று கேள்வி எழுப்பின. கடந்த பிப்ரவரியில் மூன்றாம் கட்ட ஆய்வு முடிவுகளை வெளியிட்டது ரஷ்யா. அது, இந்தத் தடுப்பூசி பாதுகாப்பானது என்றும் 91.6% நோய் தடுக்கும் திறன் உள்ளது என்றும் உறுதி செய்தது. அர்ஜென்டினா, ஹங்கேரி, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 15 நாடுகளில் இந்தத் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்தியாவைப் பொறுத்தவரை பிரத்யேகமாக 1,600 இந்தியர்களிடம் மூன்றாம் கட்ட ஆய்வு நிகழ்த்தப்பட்டு இதன் பாதுகாப்பு மற்றும் செயல் திறன் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசியின் நம்பகத்தன்மையை முழுமையாக சோதனை செய்த பின்பே நிபுணர் குழு இந்தப் பரிந்துரை செய்திருக்கிறது. எனவே இந்தத் தடுப்பூசியின் வரவு கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போரில் இன்னொரு அஸ்திரமே!
Comment / Reply From
You May Also Like
Popular Posts
-
dhanush movie status
- Post By Admin
- March 2, 2021
-
sports
- Post By Muthu
- March 5, 2021
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!