திமுக மாஃபியா கேங்: மோடி பேச்சு
மதுரையில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டம் பாண்டி கோயில் அருகே நடந்தது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அமைச்சர்கள், தென் மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள நேற்று இரவே மதுரை வந்தார் பிரதமர் மோடி.
கூட்டத்தில் பேசிய மோடி, ``மதுரை நகருக்கு வந்திருப்பது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. மீனாட்சியம்மன் கோயிலில் வழிபட்டதை என் வாழ்நாளில் மறக்க முடியாது. மதுரை புண்ணிய பூமி மட்டுமல்ல, வீர பூமி. கூடலழகர் பெருமாள் கோயில், திருப்பரங்குன்றம் கோயில் என ஆன்மிக பூமியாக இருக்கிறது.
தமிழ்ச் சங்கம் அமைந்திருந்த நகரம், ஞானம் நிறைந்த தமிழ் இலக்கிய நூல்கள் உருவான நகரம். தமிழ் கலாசாரத்தின் தொட்டில் மதுரை. மகாத்மா காந்திக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நகரம். இந்தப் பகுதியில் வாழ்ந்த தலைவர்கள் முத்துராமலிங்க தேவர், மருது சகோதரர்கள், இம்மானுவேல் சேகரன், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோருக்கு மரியாதையைச் செலுத்துகிறேன்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு என்னுடைய குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சௌராஷ்டிரா மக்கள் இங்கு வந்தனர். தெலுங்கு மக்கள் பெருவாரியாக இங்கு வசிக்கிறார்கள்.
தென் தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்கு செல்வாக்கு உண்டு. எம்.ஜி.ஆர் நடித்த `மதுரை வீரன்’ முக்கியமான படம். அதில் பாடியவர் மதுரையைச் சேர்ந்த டி.எம்.சசௌந்தரராஜன். மதுரை மாவட்டத்தில் மூன்று முறை நின்று எம்.ஜி.ஆர் வெற்றிபெற்றார்.
எங்கள் ஆட்சியில் எல்லோருக்குமான வளர்ச்சி என்கிற மந்திரத்தைச் செயல்படுத்தி 130 கோடி மக்களுக்கும் திட்டங்களை நிறைவேற்றிவருகிறோம்.
எதிர்காலத் தலைமுறையினருக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரயில்வே திட்டங்களுக்கு 238 சதவிகித நிதி தமிழகத்துக்கு ஒதுக்கியுள்ளோம்.
இந்த மண், சுந்தரேசுவரர் திருவிளையாடல் நடத்திய மண். அதில் தண்ணீருடன் தொடர்புடைய திருவிளையாடல் உள்ளது. அந்த அடிப்படையில் உருவானதுதான் ஜல் ஜீவன் திட்டம். அனைவருக்கும் குழாய் மூலம் தண்ணீர் வழங்க வேண்டும் என்ற திட்டத்தில் தமிழகத்தில் 16 லட்சம் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
சுந்தரேசுவர் குடியிருக்கும் இந்த பூமியில் இனி எப்போதும் வைகையில் தண்ணீர் ஓடும்.
ஜல்லிக்கட்டைத் தடைசெய்தது காங்கிரஸ். அப்போது காங்கிரஸ் கூட்டணியில் முக்கியப் பதவிகளில் இருந்தது தி.மு.க. ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டித்தனமானது என்று காங்கிரஸ் தலைவர் கூறினார்.
ஜல்லிக்கட்டுக்காகக் கோரிக்கைவைத்த மக்களின் வேதனையை நான் உணர்ந்தேன். தடையை நீக்கும் வகையில் அ.தி.மு.க அரசை உத்தரவிடவைத்தேன்.
காங்கிரஸும் தி.மு.க-வும் ஒரு விஷயத்தில் ஒற்றுமையாக இருக்கின்றன. அது பொய்யை இட்டுக்கட்டிச் சொல்வதுதான். அவர்கள் ஆட்சியில் இருந்தபோது எய்ம்ஸ் மருத்துவமனையைக் கொண்டுவர நினைக்கவில்லை. நங்கள் கொண்டு வந்ததை மறுக்கிறார்கள்.
நான் உங்களுக்கு இதை உறுதியாகக் கூறுகிறேன். இங்கு எய்ம்ஸ் மருத்துவமனை விரைவாக அமைக்கப்படும். நமது அரசாங்கம் மருத்துவத்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்துவருகிறது. அதற்காகப் பல ஏற்பாடுகளைச் செய்கிறோம். பொறியியல், மருத்துவம் தமிழில் படிக்க ஏற்பாடு செய்திருக்கிறோம்.
தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்துக்கு தி.மு.க - காங்கிரஸ் எதையும் செய்யவில்லை. நாங்கள்தான் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றினோம்.
திமுக ஒரு மாஃபியா கேங். அவர்கள் ஆட்சியில்தான் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போனது. அவர்கள் குடும்பப் பிரச்னையால் மதுரையை வன்முறை நகரமாக மாற்றினார்கள். மீனாட்சியம்மன், கண்ணகி, ராணி மங்கம்மாள், வேலு நாச்சியார் போன்றவர்கள் வாழ்ந்த மண் இந்த மதுரை. ஆனால், காங்கிரஸ், தி.மு.க கட்சியினர் பெண்களைத் தொடர்ந்து இழிவுபடுத்துகிறார்கள்.
மதுரைக்கு இன்னொரு பெயர் இருக்கிறது. `தூங்கா நகரம்’ என்று புகழ்பெற்றது இந்த நகரம். எப்போதும் விழித்திருக்கும் நகரம். அரசியலிலும் விழிப்புடன் இருக்கும். விழிப்புடன் இருந்து எங்கள் கூட்டணிக்கு வாக்களியுங்கள்" என்றார்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பத்திரிகையாளர்கள் கொண்டுவந்த குடிநீர் பாட்டில்களை அனுமதிக்காததாலும், உள்ளே குடிநீருக்கும் எந்த வசதியும் செய்யாததாலும் பிரச்னை ஏற்பட்டது. பா.ஜ.க நிர்வாகிகள் மரியாதை இல்லாமல் பேசியதால் பத்திரிகையாளர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். பின்பு வருத்தம் தெரிவித்த நிர்வாகிகள், பத்திரிகையாளர்களை அழைத்து வந்து அமரவைத்தனர். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
Comment / Reply From
You May Also Like
Popular Posts
-
dhanush movie status
- Post By Admin
- March 2, 2021
-
sports
- Post By Muthu
- March 5, 2021
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!