துரத்தும் கொரோனா : தொடருமா ஐபிஎல்?
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த ஐபிஎல் 2021 போட்டிகள் தொடங்கி 10 நாட்கள் முடிந்துவிட்டது. கடந்த ஆண்டு ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது. கொரோனா காரணமாக ஏப்ரல் - மே மாதம் நடைபெறாமல் செப்டம்பரில் தொடங்கிய ஐபிஎல் சீசனுக்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பை அளித்தார்கள். அதனால், இந்தாண்டு போட்டிகள் இந்தியாவிலேயே நடப்பதால் ஐபிஎல் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த 10 நாட்களாக ஐபிஎல் போட்டிகள் எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் நகர்கிறது!
அச்சுறுத்தும் கொரோனா!
ஐபிஎல் போட்டிகள் தொடங்கிய நேரம் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆட ஆரம்பித்துவிட்டது. கொரோனாவின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக மக்கள் மனதில் அச்சமும் அதிகரிப்பதால் ஐபிஎல் போட்டிகளுக்கான சுவாரஸ்யமும், அதைப்பின் தொடரும் ஈடுபாடும் குறைய ஆரம்பித்திருக்கிறது.
சென்னை - மும்பை!
ஐபிஎல்-ன் முதல் கட்டப்போட்டிகள் தற்போது சென்னை, மும்பை என இரு மைதானங்களில் மட்டுமே நடைபெற்று வருகிறது. மும்பை பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதால் முதலில் விளையாடும் ஒவ்வொரு அணியியும் 180 ரன்களுக்கு மேல் ரன்களைக் குவிக்கிறது. ஆனால், பனிப்பொழிவு காரணமாக சேஸ் செய்யும் அணி அந்த ஸ்கோரை எட்டிப்பிடித்துவிடுகிறது. சேஸிங் செய்யும் அணியின் பேட்ஸ்மேன்கள் மிகவும் சுமாராக விளையாடினால் மட்டுமே முதலில் ஆடும் அணி வெற்றிபெறுகிறது.
சென்னையில் நடைபெறும் போட்டிகள் குறைந்த ஸ்கோரிங் கொண்ட போட்டிகளாக இருக்கின்றன. இங்கே 150 ரன்கள் அடிப்பதே டிஃபெண்ட் செய்ய ஏதுவாக இருக்கிறது. பகலிரவு ஆட்டமாக பெங்களூரு - கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி ஹை ஸ்கோரிங் போட்டியாக அமைந்தது. மற்றவை எல்லாமே 150 ரன் ஆவரேஜ் போட்டிகள்தான்.
இதுவரை சென்னையில் 6 போட்டிகளும், மும்பையில் 6 போட்டிகளும் நடைபெற்று முடிந்திருக்கின்றன. இதில் சென்னையில் 5 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகளே வெற்றிபெற்றிருக்கின்றன. பெங்களூருவுக்கும், மும்பைக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் மட்டுமே சேஸிங் செய்த அணி வெற்றிபெற்றது.
மும்பையைப் பொறுத்தவரை 4 போட்டிகளில் சேஸிங் செய்த அணிகளே வெற்றிபெற்றிருக்கின்றன. இதனாலேயே பல போட்டிகள் எந்தத் த்ரில்லும் இல்லாமல் ஒன் சைடட் போட்டிகளாக முடிகிறது.
ஐபிஎல் அட்டவணை!
ஐபிஎல் போட்டிகள் கொரோனா காரணமாக இந்தமுறை கேரவேன் க்ளஸ்டர் மாடலில் நடத்தப்படுகிறது. முதல்கட்டப்போட்டிகள் அதாவது ஏப்ரல் 25-ம் தேதிவரை சென்னை - மும்பையில் மட்டுமே போட்டிகள் நடைபெற இருக்கின்றன. ஏப்ரல் 26 முதல் முதல் மே 8-ம் தேதிவரை அஹமதாபாத் மற்றும் டெல்லியில் போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது. இந்த 16 போட்டிகள் முடிந்ததும் மே 9-ம் தேதி முதல் முதல் 23-ம் தேதி வரை பெங்களூரு மற்றும் கொல்கத்தாவில் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. மொத்தம் 20 போட்டிகள் இந்த இரு மைதானங்களில் நடைபெற இருக்கின்றன. இதன்பிறகு ப்ளே ஆஃப் மற்றும் இறுதிப்போட்டிகள் மீண்டும் அஹமதாபாத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.
இதுதான் ஐபிஎல் 2021-ன் சுவாரஸ்யத்தைக் குறைத்திருக்கிறது. போட்டிகள் மாறி மாறி இரண்டே மைதானங்களில் நடப்பதால் ஒவ்வொரு போட்டியின் ரிசல்ட்டும் எப்படியிருக்கும் என்பதை முன்கூட்டியே கணிக்கமுடிகிறது. அணிகளும் அதற்கேற்றபடி ஆட்டத்தின் வியூகங்களை வகுப்பதோடு, டாஸ் வெற்றி/தோல்வியில் முக்கிய பங்குவகிப்பதும் போட்டிகளின் சுவாரஸ்யத்தைக் குறைத்துவிடுகிறது.
திணறும் பேட்ஸ்மேன்கள்!
பேட்டிங்கிற்கு பிட்ச் சாதகமாக இருக்கும் மைதானங்களிலும் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்கத்திணறுவதும் போட்டியின் சுவாரஸ்யத்தைக் குறைக்கிறது. நேற்றைய சென்னை - ராஜஸ்தான் போட்டியில் ஒரு பேட்ஸ்மேன்கூட பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. சென்னை அணியில் யாருமே 35 ரன்களைத்தாண்டவில்லை. அதேப்போல் மும்பை - கொல்கத்தா போட்டியில் முதல் 30 ஓவர்கள் யாரும் ஒரு சிக்ஸர்கூட அடிக்கவில்லை என்பது, ‘நடப்பது ஐபிஎல் தொடர்தானா’ என்கிற சந்தேகத்தை வரவழைக்கிறது.
ஐந்தே மாதத்தில் இன்னொரு ஐபிஎல்!
கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கி நவம்பர் முதல் வாரத்தில்தான் ஐபிஎல் முடிவடைந்தது. ஐந்தே மாத இடைவெளியில் இன்னொரு ஐபிஎல் என்பதும் அதன் சுவாரஸ்யம் குறைய இன்னொரு காரணம். கூடவே ரசிகர்களுக்கு அனுமதியில்லை, கிளஸ்டர் கேரவேன் மாடல் என எல்லாமே ஐபிஎல்-ன் வழக்கமான உற்சாகத்தைக் குறைத்துவிட்டன.
கடந்தாண்டு ஐபிஎல்-ன் மிகப்பெரிய வெற்றிக்குக் காரணம் ஃபேன்டசி கேம் அப்ளிகேஷன்களின் பரிசுப்போட்டிகள். 50, 100 ரூபாய்களில் இருந்து கோடிகள் வரை பணம் வெல்லும் ஒரு வாய்ப்பு இந்த கேம்களில் இருந்தால் இதில் பணத்தைக்கட்டி விளையாட பலரும் ஆர்வம் காட்டினார்கள். வெல்லும் ப்ளேயிங் லெவனைத் தேர்ந்தெடுப்பதற்காக எந்த வீரரை வாங்கலாம், யாரை வாங்கக்கூடாது எனத் தீவிரமாக மேட்ச்களைப் பார்த்து அலசி ஆராய்ந்தார்கள். ஃபேன்டசி கேம் அப்ளிகேஷன்களில் தமிழ்நாட்டில் இருந்து பல லட்சம் பேர் விளையாடிவந்தார்கள். ஆனால், இந்த ஆண்டு இவ்வகை ஃபேன்டசி கேம்களுக்கு தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டிருப்பது ஐபிஎல் தொடரைப் பின் தொடரும் சுவாரஸ்யத்தைப் பலருக்கும் குறைத்துவிட்டது.
ஐபிஎல் தொடருமா?!
அடுத்தக்கட்ட ஐபிஎல் போட்டிகள் அஹமதாபாத், டெல்லி என கொரோனாவின் தாக்கம் உச்சத்தில் இருக்கும் நகரங்களில் நடைபெற இருக்கிறது. பயோபபிள் அமைத்து போட்டிகளை எந்தப்பிரச்னையும் இல்லாமல் நடத்திவிடுவோம் என்று பிசிசிஐ சொன்னாலும் எந்த நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதே நிதர்சனம்.
Comment / Reply From
You May Also Like
Popular Posts
-
dhanush movie status
- Post By Admin
- March 2, 2021
-
sports
- Post By Muthu
- March 5, 2021
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!