நீட் தேர்வில் முதல் கட்ட வெற்றி : ஸ்டாலின் பெருமிதம்
தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ராமஜெயம்-லதா ஆகியோரின் மகன் ஆர்.விநீத் நந்தன்-எஸ். அக்ஷயா கவுசிக் திருமணம் சென்னை திருவான்மியூர் ஸ்ரீராமச்சந்திரா கன்வென்சன் அரங்கத்தில் இன்று நடந்தது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் மணமக்களை வாழ்த்தி அவர் பேசியதாவது:-
மறைந்த ராமஜெயத்தின் குடும்ப திருமண விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துவதற்கு வாய்ப்பு கொடுத்த நேருவின் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நேருவை பற்றி எல்லோரும் புகழ்ந்து பேசினார்கள். நேரு என்றால் திருச்சி. திருச்சி என்றால் நேரு.
தி.மு.க.வுக்கு பல திருப்புமுனை மாநாடுகளை திருச்சியில் நடத்திக் காட்டி தலைவரிடம் நற்பெயர் பெற்றவர் நேரு. அவரிடம் எந்த வேலையை கொடுத்தாலும் திறம்பட செய்யக்கூடிய ஆற்றல் பெற்றவர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணி பொறுப்புகளை கூட மிக சிறப்பாக செய்து முடித்தார். தி.மு.க. தொண்டர்களிடம் மட்டுமின்றி கூட்டணி கட்சி நிர்வாகிகளிடமும், தலைவர்களிடமும் அன்பாக பழக் கூடியவர். இந்த திருமண விழாவில் என் நெஞ்சில் ஒரு ஏக்கம் இருந்தது. அதே ஏக்கம் நேருவுக்கும் இருந்தது. இந்த இடத்தில் ராமஜெயம் இல்லையே என்ற ஏக்கம்தான் அது. மணவிழாவில் அவர் இல்லாத வருத்தம் நம் எல்லோருடைய உணர்விலும் ஏற்பட்டுள்ளது. அந்த ஏக்கத்தை போக்குகிற வகையில் இந்த திருமண விழாவை கழக மாநாடு போல நேரு நடத்தியுள்ளார். ராமஜெயத்தை திருச்சியில் எல்லோரும் எம்.டி. என்று அழைப்பார்கள். எம்.டி. என்றால் நிர்வாக இயக்குனர் என்று அர்த்தமல்ல. மேக்னட் டிவைஸ் என்ற பொருளில் அழைக்கப்பட்டார். நேரு குடும்பத்தினர் கழகத்துக்காக உழைக்கக் கூடியவர்கள். எதையும் எதிர்பார்த்து உழைப்பவர்கள் அல்ல. நம்முடைய கழகத்தில் நேரு குடும்பம்தான் முதலில் பெரிய இழப்பை சந்தித்தது. இதுபற்றி முரசொலியில் தி.மு.க. தலைவர் அப்போது கடிதம் எழுதினார். அவர் சிலையாய் அல்ல அவருடைய புகழ் மலையாய் இருக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தார். நேரு ஒரே இடத்தில் நிற்கக் கூடியவர் அல்ல. அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே இருப்பார். தனது சகோதரன் இல்லாத இந்த இடத்தில்தான் அவர் நிற்பதை நான் பார்க்கிறேன். ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றும் வகையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு கவர்னரிடம் கொடுக்கப்பட்டது. கவர்னர் அதை பல மாதங்கள் கிடப்பில் போட்டு திருப்பி அனுப்பினார். இதையடுத்து உடனடியாக மீண்டும் சட்டசபையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதா இதுவரையில் ஜனாதிபதிக்கு போகவில்லை. இதை அறிந்து நேற்று நான், அமைச்சர்கள் மற்றும் தலைமை செயலாளருடன் கவர்னரை சந்தித்து நீட் மசோதா கோப்பு பற்றி விசாரித்தேன். அப்போது இந்த மசோதாவை 2-வது முறை நான் திருப்பி அனுப்ப முடியாது. ஜனாதிபதிக்குத் தான் அனுப்ப வேண்டும் என்றார். அதனால் நீட் தேர்வு மசோதாவுக்கு முதல் கட்ட வெற்றி கிடைத்துள்ளது. நீட் தேர்வில் இருந்து நாடு விடுதலை பெறும். பாராளுமன்றத்தில் இதுபற்றி டி.ஆர்.பாலு நேற்று பேசி அங்குள்ள அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். அமைச்சர் நேரு மிக சிறப்பாக பணியாற்றி அனைவரின் நன்மதிப்பை பெற்று விளங்குவது போல மணமக்களும் சிறப்பாக வாழ வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார். திருமண விழாவில் மணமக்களை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர் எம்.பி., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர்மொய்தீன், தி.மு.க. பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
Comment / Reply From
You May Also Like
Popular Posts
-
dhanush movie status
- Post By Admin
- March 2, 2021
-
sports
- Post By Muthu
- March 5, 2021
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!