பயமா.. எனக்கா?... குஷ்பு பேட்டி
ஆயிரம் விளக்கு தொகுதியின் பாஜக வேட்பாளராக பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் நடிகை குஷ்புவிடம் தேர்தல் களத்தில் ஒரு மினி பேட்டி...
‘அரசியலுக்கு வந்து 11 வருஷங்கள் ஆச்சு. இப்போ தான் முதன்முறையா தேர்தல்ல போட்டியிடுறேன். எப்பவுமே உற்சாகமா இருப்பேன். இப்போ ரொம்ப எனர்ஜெட்டிக்கா இருக்கேன்’’ என்று ஆரம்பிக்கிறார்...
குஷ்பு பயந்து நீங்க பார்த்திருக்கீங்களா... எனக்கு எந்த ஒரு விஷயத்துக்குமே பயம் கிடையாது. 16 வயசுல சென்னைக்கு வந்தேன். இந்த ஊர்ல யாரையும் முன்ன பின்ன தெரியாது. சொந்த வீடு கிடையாது. மொழி தெரியாது. என்னுடைய திறமையை மட்டுமே நம்பி இங்க வந்து ஜெயிச்சுக் காட்டியிருக்கேன். ஒவ்வொரு கட்டத்துலயும் பிரச்னைகள் வரும்போது தனி ஒருத்தியாதான் போராடி சமாளிச்சிருக்கேன். அதனால, இந்தத் தேர்தல்லயும் எனக்கு பயம் கிடையாது. வெற்றி பெறுவோம்னு உறுதியா நம்பறேன்.
தேர்தலில் வெற்றிபெற ‘குஷ்பு’ என்கிற நட்சத்திர அந்தஸ்து போதுமா?
நான் மக்களை சினிமா நட்சத்திரமா சந்திச்சு ரொம்ப நாளாச்சு. அவங்களுக்காகக் குரல் கொடுக்கற பிரதிநிதியாதான் இப்போ மக்கள் என்னை பார்க்குறாங்க.
சேப்பாக்கம் தொகுதியை எதிர்பார்த்து அங்கு களப்பணியில் இறங்கினீர்கள். ஆனால், ஆயிரம் விளக்குத் தொகுதி ஒதுக்கப்பட்டது. தொகுதி மக்கள் என்ன சொன்னார்கள்?
சேப்பாக்கம் மட்டுமில்ல, எந்தத் தொகுதியை எதிர்பார்த்தும் நான் வேலை செய்யலை. சேப்பாக்கம் தொகுதில ஒரு பொறுப்பாளரா எனக்குச் சில வேலைகள் கொடுத்தாங்க. அந்த அடிப்படையிலதான் அங்க வேலை பார்த்தேன். சொல்லப்போனா சேப்பாக்கம், திருவல்லிக்கேணில நான் செஞ்ச வேலைகளை, எடுத்துக்கிட்ட பொறுப்புகளை பார்த்துதான் கட்சி எனக்கு ஆயிரம் விளக்குத் தொகுதியைக் கொடுத்தது.
ஆயிரம் விளக்குத் தொகுதியில மக்கள்கிட்ட மகிழ்ச்சியான வரவேற்பு கிடைச்சது. அவங்க தேவைகள் என்னென்னு பார்த்தோம். யாரும் கார், பங்களா வேணும்னு கேக்கலையே. அவங்களுடைய அடிப்படைத் தேவைகளான சாலை வசதி, குடிநீர் வசதி, சாக்கடையை சுத்தம் செய்யுறது, பெண்களின் பாதுகாப்புக்கு சிசிடிவி கேமரா, வீட்டுப் பட்டானு இதைத்தான் கேட்குறாங்க. ஆனா, தி.மு.க இந்தத் தொகுதியில இதுக்கு முன் இத்தனை முறை ஜெயிச்சும் இதைக்கூட செய்து கொடுக்கலையே...
நான் போனபோதெல்லாம் உற்சாகமா வரவேற்று, நம்பிக்கையோட தங்களோட குறைகளை சொன்ன அந்த மக்களுக்கு நான் என்ன செய்யப்போறேன், எப்படிச் செய்யப்போறேன்ங்கிற எண்ணம்தான் ஓடிட்டு இருக்கு.
தேர்தலில் வெற்றிபெற்றால் என்ன மாதிரியான பணிகளை அரசியல்வாதி குஷ்புவிடமிருந்து எதிர்பார்க்கலாம்?
அரசியல்வாதி குஷ்புவை நீங்க என்னிக்குமே பார்க்க முடியாது. மக்களுக்குப் பணி செய்யுறதுக்காக, அவங்களுடைய பிரதிநிதியாதான் நான் என்னிக்குமே இருப்பேன். அரசியல்வாதி அப்படீங்கறது கேக்குறதுக்கு நல்லா இருக்கு. ‘மக்கள் பணி செய்பவர்’ என்பதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு. அந்த குஷ்புவை தேர்தல், அரசியல் தாண்டியும் நீங்க என்னிக்குமே பார்க்கலாம்.
‘நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவு எனக்கு எப்போதும் இருக்கும்’ என்று சொல்லியிருக்கிறீர்களா..?
ரஜினி சார் கூட நிறைய படங்கள்ல நடிச்சிருக்கேன். அவர் எனக்கு பல வருட நண்பர். அந்த அடிப்படையிலதான் அவரோட ஆதரவு எனக்கு எப்பவும் இருக்கும்னு சொன்னேன். இன்னும் அவரை நேர்ல சந்திக்கல. தேர்தல்ல ஜெயிச்சுட்டு போய் சந்திப்பேன்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் உங்களுக்கு நல்ல நண்பர். அவரிடம் தேர்தல் தொடர்பாக எதுவும் பேசினீர்களா?
கமல் சார் என் நல்ல நண்பர். தனிப்பட்ட முறையில அவர் என்கிட்ட பேசினது தனிப்பட்ட விஷயம். அதை ஏன் நான் பொதுவுல சொல்லணும்? எங் களுடைய நல்லது, கெட்டதுல நாங்க ஒருத்தருக்கொருத்தர் ஆதரவு கொடுத்துப்போம். எல்லாத் தையுமே அரசியல் ஆக்கணும் என்ற அவசியம் இல்லை.
தீவிர அரசியல் பணிகள், வேலைப் பளு... குஷ்புவின் இளைப்பாறல் என்ன?
வீடுதான். என் ரெண்டு பசங்களும் இப்போ பெரியவங்க ஆகிட்டாங்க. என் வேலைகள் என்ன அப்படீங்கிறதை ரெண்டு பேரும் புரிஞ்சுக்கிறாங்க. பிரசாரம் முடிச்சுட்டு இரவு வீடு போய் சேர எவ்வளவு தாமதமானாலும் எனக்காகக் காத்துட்டு இருப்பாங்க. இரவு 12 மணி ஆனாகூட நாலு பேரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிட்டு, இன்னிக்கு என்ன வெல்லாம் நடந்துச்சுனு பேசுவோம்.
கணவரின் கடனை அடைக்கத்தான் நீங்கள், காங்கிரஸ் கட்சியிலிருந்து பா.ஜ.க-வுக்கு மாறினீர்கள் என்று வைக்கப்படும் விமர்சனம் பற்றி?
நான் மனுத்தாக்கல் செய்த போது, எனக்கு 22 கோடி மதிப்பிலான சொத்து இருப்பதை சொல்லியிருக்கேன். அதேபோல, என் கணவருக்கு எவ்வளவு சொத்து இருக்கு என்பதையும் பாருங்க. எல்லாமே ஓப்பனாதான் இருக்கு.
என் கணவருக்கு என் காசுல குடும்பம் நடத்தத் தேவையில்ல. சொந்த கால்ல நின்னு பொண்டாட்டி, புள்ளைங்கள பார்த்துக்கிட்டு, எனக்கு வைரத்துல நகை போட்டு, உலகம் சுற்றக்கூடிய ஒருத்தியா என்னை ஜம்முனு வெச்சிருக்காரு.
சமீபத்தில் நீங்கள் கைகளைச் சுழற்றிச் சுழற்றி தாமரை மலர்ந்தே தீரும் என்று சொன்னது சமூக வலைதளங்களில் மீம்ஸ் ஆனதே...
சமூக வலைதளங்கள் வந்த பிறகு யாருமே இங்க மீம்ஸுக்கு தப்ப முடியாது. ஆனா, விமர்சனம் என்று வரும்போது என் அரசியல் வாழ்க்கையை விட்டுட்டு என் குடும்பத்தைத் தாக்கிப் பேசுறது அவங்களோட இயலாமையைத்தான் காட்டுது.
Comment / Reply From
You May Also Like
Popular Posts
-
dhanush movie status
- Post By Admin
- March 2, 2021
-
sports
- Post By Muthu
- March 5, 2021
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!