• Friday, 22 November 2024
பழைய காருக்கு ஆப்பு வைக்கும் அரசு

பழைய காருக்கு ஆப்பு வைக்கும் அரசு

பழைய வாகனங்களால் காற்று மாசு ஏற்படுவதை தடுப்பதற்கு மத்திய அரசு புதிய வாகன கொள்கையை கொண்டு வந்தது. இதன்படி 15 ஆண்டுகளான வணிக வாகனங்கள் மற்றும் 20 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட தனியார் வாகனங்கள் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாடு முழுவதும் 51 லட்சம் தனியார் வாகனங்களும், 17 லட்சம் வணிக வாகனங்களும் சாலைகளில் ஓடுவதற்கு தகுதியற்றவை என அறிவிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் தமிழகத்தில் தனியார் மற்றும் வணிக வாகனங்கள் இரண்டும் சேர்த்து மொத்தமாக 16 லட்சம் வாகனங்கள் தகுதியற்ற வாகனங்களாக விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.

மத்திய அரசின் புதிய கொள்கை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட உள்ளது. அதன்படி தமிழகத்திலும் விரைவில் அந்த கொள்கை அமலுக்கு வர இருக்கிறது. அது போன்ற நிலை ஏற்படும் போது சாலைகளில் செல்லும் வாகனங்களை நிறுத்தி போலீசார் அதன் வயதை பரிசோதிப்பார்கள்.

அப்போது வணிக வாகனங்கள் 15 ஆண்டுகளை கடந்து இருந்தால் அது பறிமுதல் செய்யப்படும். தனியார் வாகனங்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் ஓட்டப்பட்டு இருந்தால் அவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்ய உள்ளனர். இதுபோன்ற வாகனங்களை இனி ஓட்ட முடியாது. இனி அவற்றை காயலாங்கடைக்கு தான் போட வேண்டும்.

இதுபோன்ற வயது முதிர்ந்த வாகனங்களுக்கு பதில் புதிய வாகனங்களை வாங்குபவர்களுக்கு சலுகை அளிக்கவும் மத்திய அரசு  முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மத்திய அரசின் இதுபோன்ற நடவடிக்கையால் புதிய வாகனங்களின் எண்ணிக்கை பெருகி காற்று மாசு கட்டுக்குள் வரும் என்பதே அனைத்து தரப்பினரின் எண்ணமாக உள்ளது.

பழைய வாகனங்கள் கர்நாடகாவில் அதிகம் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. அங்கு 20 ஆண்டுகளுக்கும் மேலான வாகனங்கள் 39 லட்சத்துக்கும் மேல் உள்ளன. டெல்லியில் 36 லட்சம் பழைய வாகனங்களும், உத்தரபிரேதசத்தில் 26 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்களும், கேரளாவில் 20 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்களும் உள்ளன.

தமிழகத்தில் 16 லட்சம் வாகனங்கள் இருக்கும் நிலையில் பஞ்சாபில் 15 லட்சம் வாகனங்கள் உள்ளன.

பழைய வாகனங்களை ஒழிக்கும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு உணவு எண்ணை டேங்கர் லாரி உரிமையாளர்கள் நல சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜானகி ராமன் கூறியதாவது:-

பழைய வாகனங்கள் மூலம் காற்று மாசு ஏற்படுவதை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகளுக்கு முழு வரவேற்பு அளிக்கிறோம்.

அதே நேரத்தில் பழைய வாகனங்களாக இருந்தாலும் அதிகம் பயன்படுத்தாமல் சில வாகனங்கள் சாலைகளில் ஓட்டுவதற்கு தரமான வாகனங்களாக இருக்கும். எனவே வாகனங்களை பரிசோதனை செய்து தகுதியுள்ள வாகனங்களை ஓட்டுவதற்கும் அனுமதிக்க வேண்டும்.

மத்திய அரசும் இதனை கருத்தில் கொள்வதாக கூறி உள்ளது. நாங்களும் இந்த நேரத்தில் அதனை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!