பிரதமரிடம் மு.க.ஸ்டாலின் வைக்கவுள்ள கோரிக்கைகள்
தமிழ்நாடு முதல்வராகப் பதவியேற்று ஒரு மாத காலத்துக்கு மேலாக கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான பணியிலேயே முழுமூச்சுடன் ஈடுபட்டிருந்தார் மு.க.ஸ்டாலின். இன்றைக்கு அவர் அரசு முறைப் பயணமாக டெல்லி செல்கிறார். பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவது, நிதி நெருக்கடியைச் சமாளிப்பது என்கிற இரண்டு முக்கிய சவால்கள் தி.மு.க அரசின் முன்பாக இருக்கின்றன. இந்த இரண்டு பிரச்னைகளையும் மத்திய அரசின் துணையுடனேயே சமாளிக்க வேண்டிய நிலையில், பிரதரையும், மத்திய அமைச்சர்களையும் அவர் சந்திக்கவிருக்க
கொரோனா பெருந்தொற்றைச் சமாளிப்பதற்குப் போதுமான தடுப்பூசியை மத்திய அரசிடமிருந்து பெற வேண்டியிருக்கிறது. அதுபோல, கறுப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகளையும் மத்திய அரசிடமிருந்து பெற வேண்டும். கொரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் தேவை பல மடங்கு அதிகரித்திருக்கும் நிலையில், மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து உடனடியாக கூடுதல் ஆக்சிஜன் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, தமிழ்நாட்டுக்குக் கூடுதல் தடுப்பூசியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தமிழ்நாடு அரசு வலியுறுத்திவரும் நிலையில் ஸ்டாலின் டெல்லிக்கு செல்கிறார்.
இந்தப் பயணத்தின் முக்கியத்துவம் குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் பேசினோம்.
“மாநில முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு பிரதமரை முதல்வர்கள் சந்திப்பது வழக்கமான ஒன்று. ஸ்டாலினைப் பொறுத்தவரை அவர் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு ஒரு மாதம் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. ஆகையால், இப்போது டெல்லிக்குச் செல்கிறார். இந்தப் பயணத்துக்கு பல முக்கியத்துவம் உண்டு. டெல்டா மாவட்டங்கள் வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கு ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு அனுமதி கேட்கிறது. ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு நிலைப்பாட்டை தி.மு.க எடுத்திருக்கும் நிலையில், தமது அரசின் நிலைப்பாட்டை ஸ்டாலின் டெல்லியில் தெரிவிப்பார்.
எழுவர் விடுதலை குறித்து குடியரசுத் தலைவருக்கு முதல்வர் கடிதம் எழுதியிருக்கிறார். மத்திய உள்துறை அமைச்சகம் சொல்வதைப் பொறுத்துதான் அது குறித்து குடியரசுத் தலைவர் முடிவெடுப்பார். ஆகவே, உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்கும்போது, இந்த விஷயம் குறித்து ஸ்டாலின் பேசுவார் என்று எதிர்பார்க்கலாம். அப்போது, ஸ்டாலினிடம் சில கோரிக்கைகளை அமித் ஷா முன்வைக்கலாம். பத்மா சேஷாத்ரி பள்ளியில் மாணவிகளைப் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக ஆசிரியர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும், இதேபோன்ற குற்றச்சாட்டின் பேரில் சிவசங்கர் பாபா மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கிறது. சிவசங்கர் பாபா ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துக்கு நெருக்கமானவர். ஆகவே, இந்த விவகாரங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் அமித் ஷா பேசலாம்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் மு.க.ஸ்டாலின் சந்திக்கவிருக்கிறார். அப்போது, தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீடு, ஜி.எஸ்.டி பாக்கியை உடனடியாக வழங்குமாறு ஸ்டாலின் வலியுறுத்துவார். தமிழ்நாட்டுக்கு உள்ளாட்சி நிதி பாக்கியும் இருக்கிறது. அதையும் உடனே வழங்குமாறு ஸ்டாலின் கேட்பார். செங்கல்பட்டிலுள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தில் தடுப்பூசி உற்பத்தி செய்வதற்குக் குத்தகை அடிப்படையில் தமிழ்நாடு அரசுக்கு அந்த நிறுவனத்தைத் தர வேண்டும் என்று பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதினார். அது குறித்தும் ஸ்டாலின் பிரதமரிடம் பேசுவார்.
காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தியையும் ராகுல் காந்தியையும் ஸ்டாலின் சந்திக்கவிருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால், வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-வுடன் கூட்டணி சேருவதற்கு பா.ஜ.க முயலலாம். எனவே, காங்கிரஸை தி.மு.க கூட்டணியிலிருந்து கழற்றிவிடச் செய்வதற்கான வேலைகளை பா.ஜ.க மேற்கொள்ளலாம். ஆனால், தி.மு.க ஆதரவு வாக்குகளில் பெரும்பாலானவை, பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகள் என்பது யதார்த்தம். தி.மு.க-வின் வெற்றிக்குக் கைகொடுத்தது பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகள்தான். எனவே, பா.ஜ.க-வுடன் தி.மு.க கூட்டணி சேருவதற்கு வாய்ப்பே இல்லை. அந்தச் செய்தியை வலுவாகச் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் சோனியா காந்தியையும் ராகுல் காந்தியையும் அவர் சந்திக்கிறார் என்றும் பார்க்கலாம்” என்றார் ப்ரியன்.
முதல்வர் ஸ்டாலினின் டெல்லி பயணத்தின் முக்கியத்துவம் குறித்து வலதுசாரி கருத்தாளர் ஸ்ரீராம் சேஷாத்ரியிடம் பேசினோம்.
“பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்தபோதெல்லாம் GoBackModi என்று சொன்னவர் ஸ்டாலின். ஆனாலும், மாநிலத்தின் முதல்வராக டெல்லிக்கு ஸ்டாலின் செல்லும் இன்றைய சூழலில், இந்தப் பயணத்தின் மூலமாக ஸ்டாலினுக்கும் மோடிக்கும் இடையே நல்ல உறவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று பார்க்கிறேன். ஏற்கெனவே, கருணாநிதி உடல்நிலை சரியில்லாமல் இருந்த நேரத்தில், அவரது வீட்டுக்குச் சென்று மோடி பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயிரம் கோரிக்கைகளுடன் ஸ்டாலின் டெல்லிக்குச் செல்லலாம். ஆனால், இரண்டு கோரிக்கைகள்தான் முக்கியமான கோரிக்கைகள். மற்ற மாநிலங்களில் கொரோனா பெருந்தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்துவிட்டாலும், தமிழ்நாட்டில் 11,000 என்ற அளவில் இருக்கிறது. கொரோனா மரணங்களும் அதிகமாக உள்ளன. எனவே, தடுப்பூசி உட்பட கொரோனா தொடர்பான கோரிக்கைகளை ஸ்டாலின் வலியுறுத்துவார். இன்னொன்று, நிதிப் பிரச்னை. தமிழ்நாடு அரசின் நிதி ஆதாரம் மோசமான நிலையில் இருக்கிறது. இந்த ஆண்டின் இறுதியில் தமிழ்நாடு அரசின் கடன்சுமை ஆறு லட்சம் கோடி ரூபாயாக இருக்கும்.
கடந்த பல ஆண்டுகளாக புதிய தொழிற்சாலைகள் தமிழ்நாட்டுக்கு வரவில்லை. புதிய தொழிற்சாலைகளைக் கொண்டுவர வேண்டிய நெருக்கடி தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது. உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் தொழிற்சாலைத் திட்டங்கள் வந்தால் ஒழிய முதலீடுகள் வருவதற்கு வாய்ப்பு இல்லை. தொழிற்சாலைகள் தொடங்க காலதாமதம் ஏற்படும் என்கிற பட்சத்தில், உள்கட்டமைப்புகளைப் பெருக்குவதற்கு நிதி தேவைப்படும். பட்ஜெட் ஒதுக்கீடு அல்லாமல் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு என்ற அடிப்படையில் மத்திய அரசால் நிதி ஒதுக்கீடு செய்ய முடியும். எனவே, அது பற்றி இந்தப் பயணத்தின்போது பேசப்படும் என்று எதிர்பார்க்கிறேன்.
Comment / Reply From
You May Also Like
Popular Posts
-
dhanush movie status
- Post By Admin
- March 2, 2021
-
sports
- Post By Muthu
- March 5, 2021
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!