• Sunday, 24 November 2024
புதுச்சேரி தேர்தல் களம் : கலக்கப்போவது யாரு?

புதுச்சேரி தேர்தல் களம் : கலக்கப்போவது யாரு?

தமிழகத்துக்கு இணையாக தகிக்கிறது புதுச்சேரி தேர்தல் களம். புதுச்சேரியில் பா.ஜ.க-வின் அரசியல் சதுரங்க வேட்டையால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு நடைபெறும் தேர்தல் என்பதால், எதிர்பார்ப்பும் ஏகத் துக்குக் கூடியிருக்கிறது. புதுச்சேரி மாநில சட்டசபைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 16 தொகுதி களில் என்.ஆர்.காங்கிரஸும், ஒன்பது தொகுதிகளில் பா.ஜ.க-வும், ஐந்து தொகுதிகளில் அ.தி.மு.க-வும் போட்டியிடுகின்றன. மதச்சார்பற்ற கூட்டணியில் 15 தொகுதிகளில் காங்கிரஸும், 13 தொகுதிகளில் தி.மு.க-வும், தலா ஒரு தொகுதியில் வி.சி.க மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடுகின்றன. 10 இடங்களில் தனித்துப் போட்டி என்று வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த பா.ம.க., கடைசிநேரத்தில் அவற்றை வாபஸ் பெற்று பா.ஜ.க-விடம் சரணடைந்திருக்கிறது. வேட்பாளர்கள் பற்றாக்குறையால் சுயேச்சைக்கு ஆதரவளிக்கும் பரிதாப நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில், இங்கு அடித்தளமே இல்லாத பா.ஜ.க இம்முறை அதிக இடங்களில் போட்டியிடுகிறது. கட்சி மற்றும் வேட்பாளர்கள் செல்வாக்குகளையும் தாண்டி, வைட்டமின் ‘ப’தான் இம்முறை புதுச்சேரி அரசியல் களத்தை ஆதிக்கம் செய்கிறது! ஒவ்வொரு தொகுதியின் நிலவரத்தையும் பார்ப்போம்...

ஏ.கிருஷ்ணன்
ஏ.கிருஷ்ணன்
நமச்சிவாயம்

மண்ணாடிப்பட்டு

தி.மு.க-வில் ஏ.கிருஷ்ணன் என்கிற ஏ.கே.குமாரும், பா.ஜ.க-வில் முன்னாள் அமைச்சரான நமச்சிவாயமும் மோதுகிறார்கள். வன்னியர் வாக்குகளும், கடந்த தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு சுமார் 4,000 வாக்குகளைப் பிரித்த பா.ம.க முன்னாள் எம்.எல்.ஏ அருள்முருகன் தற்போது தங்கள் அணியில் இருப்பதும் நமச்சிவாயத்துக்கு ப்ளஸ். என்.ஆர்.காங்கிரஸின் சிட்டிங் எம்.எல்.ஏ டி.பி.ஆர்.செல்வம் சுயேச்சையாகக் களமிறங்காததும் நமச்சிவாயத்துக்கு ஆறுதலான விஷயம். தொகுதியில் முந்துகிறார் நமச்சிவாயம்.

ஏ.முகிலன் - கோபிகா
ஏ.முகிலன் - கோபிகா

திருபுவனை

என்.ஆர்.காங்கிரஸில் சிட்டிங் எம்.எல்.ஏ கோபிகாவும், தி.மு.க-வில் ஏ.முகிலனும், சுயேச்சையாக காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ அங்காளனும் களம்காண்கிறார்கள். தொகுதியில் அடித்தளம் இல்லாததால் தி.மு.க பின்னுக்குத் தள்ளப்பட, கோபிகாவும் அங்காளனும் மட்டுமே தகுதிச்சுற்றில் இருக்கிறார்கள். தொகுதியில் மேற்கொண்ட பணிகள், வன்னியர் வாக்குகள் ஆகியவற்றால் ரேஸில் முந்துகிறார் கோபிகா.

கார்த்திகேயன் - சாய்.ஜெ.சரவணகுமார்
கார்த்திகேயன் - சாய்.ஜெ.சரவணகுமார்

ஊசுடு

காங்கிரஸும் பா.ஜ.க-வும் மோதுகின்றன. காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திகேயனுக்கு பட்டியல் சமூக வாக்குவங்கி பலம். கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றிக்கு மிக அருகில் சென்று தோல்வியடைந்த பா.ஜ.க-வின் சாய்.ஜெ.சரவணகுமார், மழை நிவாரணம், கொரோனா நிவாரணம் என்று தொடர்ச்சியாக மக்கள் நலப்பணிகள் மேற்கொண்டுவருகிறார். அதனால், அவரே முன்னேறுகிறார்.

சன்.குமாரவேலு - ‘தேனீ’ சி.ஜெயக்குமார்
சன்.குமாரவேலு - ‘தேனீ’ சி.ஜெயக்குமார்

மங்கலம்

தி.மு.க வேட்பாளர் சன்.குமாரவேலும், என்.ஆர்.காங்கிரஸின் ‘தேனீ’ சி.ஜெயக்குமாரும் மோதுகிறார்கள். 2011 சட்டமன்றத் தேர்தலில் இங்கு வெற்றிபெற்றவர் என்பதும், பொருளாதார பலம்மிக்கவர் என்பதும் ஜெயக்குமாருக்கு ப்ளஸ். அதன் பிறகு தொகுதிப் பக்கம் தலைகாட்டாமல், 2016-ல் தொகுதி மாறிச் சென்றது மைனஸ். கடந்த தேர்தலில் தோல்வியடைந்தும், தொகுதியில் மக்கள் பணிகளை மேற்கொண்டுவருவது சன்.குமாரவேலுவுக்கு ப்ளஸ். தொகுதியில் நிலைமை இழுபறிதான்!

சிவா - சுகுமாறன்
சிவா - சுகுமாறன்

வில்லியனூர்

தி.மு.க-வில் இரா.சிவாவும், என்.ஆர்.காங்கிரஸில் சுகுமாறனும் போட்டியிடுகிறார்கள். தொகுதியின் சிறுபான்மையினர் வாக்குகள் தி.மு.க-வுக்கு பலம். என்.ஆர்.காங்கிரஸுக்கு வன்னியர் வாக்குகள் கைகொடுக்கும் என்றாலும், பா.ஜ.க கூட்டணியில் இருப்பது சறுக்கலே. இரு தரப்பிலும் கடும் போட்டி நிலவினாலும், பட்டியல் சமூகம் மற்றும் தான் சார்ந்த யாதவர் சமூக வாக்குகளுடன் முன்னேறுகிறார் சிவா.

தேவபொழிலன் - பன்னீர்செல்வம்
தேவபொழிலன் - பன்னீர்செல்வம்

உழவர்கரை

என்.ஆர்.காங்கிரஸின் முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வமும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அங்காளன் என்கிற தேவபொழிலனும் மோதுகிறார்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலில் 7,107 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றிபெற்ற இத்தொகுதி, வேட்பாளர் பற்றாக்குறையால் வி.சி.க-வுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. தேவபொழிலனுக்கு காங்கிரஸ் வாக்குகள் கிடைக்கும் என்றாலும், பொருளாதாரரீதியில் பசையற்றவர் என்பதால் பன்னீர்செல்வம் முன்னேறுகிறார்.

கண்ணன் ஏ.கே.டி.ஆறுமுகம்
கண்ணன் ஏ.கே.டி.ஆறுமுகம்

இந்திராநகர்

என்.ஆர்.காங்கிரஸில் ஏ.கே.டி.ஆறுமுகமும், காங்கிரஸில் கண்ணனும் மோதுகிறார்கள். முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் கோட்டைகளில் ஒன்றாகக் கருதப்படும் இத்தொகுதியில், காங்கிரஸ் நிர்வாகியாக அவரை எதிர்த்து அரசியல் செய்துகொண்டிருந்தவர் இதே ஏ.கே.டி.ஆறுமுகம்தான். தற்போது அவரே வேட்பாளராகியிருப்பதால், கண்ணனை முந்துகிறார் ஆறுமுகம்.

பி.செல்வநாதன் - கே.எஸ்.பி.ரமேஷ்
பி.செல்வநாதன் - கே.எஸ்.பி.ரமேஷ்

கதிர்காமம்

ரங்கசாமியின் கோட்டைகளில் ஒன்று இது என்பதால், காங்கிரஸ் வேட்பாளர் பி.செல்வநாதனைவிட என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.பி.ரமேஷுக்கு வரவேற்பு அதிகம் இருக்கிறது. முந்திச் செல்கிறார் ரமேஷ்.

சேது.செல்வம் - ரங்கசாமி
சேது.செல்வம் - ரங்கசாமி

தட்டாஞ்சாவடி

என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் களமிறங்கியிருக்கும் ரங்கசாமியை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேது.செல்வம் களம்காண்கிறார். முதல்வர் வேட்பாளர் என்ற இமேஜ் மற்றும் ஆஸ்தான தொகுதி என்பதால் முன்னேறுகிறார் ரங்கசாமி.

ஷாஜகான் - ஜான்குமார்
ஷாஜகான் - ஜான்குமார்

காமராஜர் நகர்

காங்கிரஸும், பா.ஜ.க-வும் மோதுகின்றன. காங்கிரஸ் வேட்பாளரான முன்னாள் அமைச்சர் ஷாஜகானுக்கு தொகுதிவாசியான வைத்திலிங்கம் எம்.பி-யின் ஆதரவு இருப்பது பலம். ஆனாலும், ‘காலாப்பட்டு மக்கள் புறக்கணித்ததால்தான் இங்கு வந்திருக்கிறார்’ என்கிற எதிர்க்கட்சியின் பிரசாரம் இவருக்கு மைனஸ். அறக்கட்டளை மூலமாக இலவசங்களை அள்ளி இறைப்பது, தொகுதி மக்களின் பிரச்னைகளைத் தீர்ப்பது எனத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருக்கும் பா.ஜ.க வேட்பாளர் ஜான்குமார், ரேஸில் முந்துகிறார்.

வைத்தியநாதன் - சாமிநாதன்
வைத்தியநாதன் - சாமிநாதன்

லாஸ்பேட்டை

பா.ஜ.க-வில் சாமிநாதனும், காங்கிரஸில் வைத்தியநாதனும் போட்டியிடுகிறார்கள். பா.ஜ.க மாநிலத் தலைவர் சாமிநாதன், தொடர்ந்து இருமுறை தேர்தலில் டெபாசிட் இழந்து, பிறகு கட்சித் தலைமையால் நியமன எம்.எல்.ஏ ஆக்கப்பட்டவர். அமைச்சர் கனவுடன் வலம்வரும் இவர், வைட்டமின் ‘ப’-வை மட்டுமே நம்பியிருக்கிறார். எதிர்முனையில் போட்டியிடும் வைத்தியநாதன், தனது கமலா அறக்கட்டளை மூலம் மக்கள் பணிகளை மேற்கொண்டுவருகிறார். தவிர, கடந்தமுறை சுயேச்சையாகப் போட்டியிட்டு இரண்டாம் இடத்துக்கு வந்த அனுபவமும் வைத்தியநாதனுக்குக் கைகொடுப்பதால், காங்கிரஸ் முந்துகிறது.

முத்துவேல் - கல்யாணசுந்தரம்
முத்துவேல் - கல்யாணசுந்தரம்

காலாப்பட்டு

பா.ஜ.க., தி.மு.க., சுயேச்சை என மும்முனைப் போட்டி நிலவுகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆள்மாறாட்ட சர்ச்சையில் சிக்கிய முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம்தான் பா.ஜ.க வேட்பாளர். வன்னியர் சமூக வாக்குகளை நம்பிப் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் தட்டாஞ்சாவடி செந்திலுக்கும் கல்யாணசுந்தரத்துக்கும் இடையேதான் போட்டி என்பதால், தி.மு.க வேட்பாளர் முத்துவேல் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். கணிசமாக இருக்கும் மீனவர் மற்றும் வன்னியர் சமூக வாக்குகள் கல்யாணசுந்தரத்துக்கு பலம் என்பதாலும், இவரை வீழ்த்த எதிரணியில் ஆள் இல்லாததாலும் முன்னேறுகிறார் கல்யாணசுந்தரம்.

செந்தில்குமார் - வையாபுரி
செந்தில்குமார் - வையாபுரி

முத்தியால்பேட்டை

அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ வையாபுரி மணிகண்டனும், காங்கிரஸில் செந்தில்குமார் என்ற புதுமுகமும் போட்டியிடுகிறார்கள். ஆனாலும், கடந்த முறை என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்து, இம்முறை சுயேச்சையாகக் களமிறங்கியிருக்கும் பிரகாஷ்குமாரும், வையாபுரி மணிகண்டனும்தான் தற்போது தகுதிச்சுற்றில் இருக்கிறார்கள். கணிசமான மீனவர் வாக்குகளுடன், என்.ஆர்.காங்கிரஸ் வாக்குகளையும் பிரகாஷ்குமார் பிரிப்பார் என்றாலும், பொருளாதார பலத்தால் முந்துகிறார் வையாபுரி மணிகண்டன்.

எஸ்.பி.சிவக்குமார்
எஸ்.பி.சிவக்குமார்

ராஜ்பவன்

தி.மு.க-வும் என்.ஆர்.காங்கிரஸும் மோதுகின்றன. தனது அரசியல் குருவான பா.கண்ணனையே வீழ்த்தி, தொடர்ந்து இரண்டு முறை வெற்றிபெற்றுவரும் முன்னாள் அமைச்சர் லட்சுமி நாராயணன், என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் களமிறங்கியிருக்கிறார். அரவிந்தர் ஆசிரம வாக்குவங்கி இவருக்கு பலம். தொகுதி மாறிப் போட்டியிடுவது தி.மு.க வேட்பாளர் எஸ்.பி.சிவக்குமாருக்கு மைனஸ். எளிதில் அணுகக்கூடியவராக வலம்வரும் லட்சுமி நாராயணனுக்குச் சாதகமாக இருக்கிறது தொகுதி.

கென்னடி - அன்பழகன்கென்னடி - அன்பழகன்

 

உப்பளம்

அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் மோதுகின்றன. சிறுபான்மையினர் கணிசமாக வசிக்கும் உப்பளத்தில் பா.ஜ.க கூட்டணியுடன் களம்காண்பது அ.தி.மு.க வேட்பாளர் அன்பழகனுக்கு மைனஸ். பட்டியல் சமூகம் மற்றும் மீனவர்கள் வாக்குகளை முழுமையாகப் பெறப் போராடி வரும் அவர், என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதைச் சாதகமாக நினைக்கிறார். முன்னாள் எம்.எல்.ஏ புஸ்ஸி ஆனந்தின் தனிப்பட்ட செல்வாக்கால், சிறுபான்மையின வாக்குகள் தி.மு.க பக்கம் செல்வதற்கான வாய்ப்புகளே அதிகம். மேற்கண்ட காரணங்களால் ரேஸில் முந்துகிறார் தி.மு.க வேட்பாளர் கென்னடி.

கோபால் -  ‘ஓம்சக்தி’ சேகர்
கோபால் - ‘ஓம்சக்தி’ சேகர்

உருளையன்பேட்டை

தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் மோதுகின்றன. முன்னாள் எம்.எல்.ஏ சிவாவின் ஆதரவுடன் களமிறங்கியிருக்கும் தி.மு.க வேட்பாளர் கோபால், தொகுதியில் கணிசமாக இருக்கும் தனது யாதவ சமுதாய வாக்குகளை நம்புகிறார். தொகுதி மாறி வந்திருக்கும் அ.தி.மு.க வேட்பாளர் ‘ஓம்சக்தி’ சேகர், கரையேறப் போராடிவருகிறார். கடந்தமுறை என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த ஜி.நேரு, இம்முறை சுயேச்சையாகக் களமிறங்கியிருக்கிறார். மும்முனைப் போட்டி கடுமையாக இருப்பதால், இழுபறி நீடிக்கிறது.

வி.கார்த்திகேயன் - விவிலியன் ரிச்சர்டு
வி.கார்த்திகேயன் - விவிலியன் ரிச்சர்டு

நெல்லித்தோப்பு

தி.மு.க-வும் பா.ஜ.க-வும் மோதுகின்றன. இலவசங்களை அள்ளி இறைத்து தொகுதியைக் கட்டுக்குள் வைத்திருக்கிறார் ஜான்குமார். முதல்வர் நாராயணசாமிக்காக ஜான்குமார் விட்டுக்கொடுத்த இந்தத் தொகுதியில், தற்போது அவரின் மகன் விவிலியன் ரிச்சர்டு பா.ஜ.க வேட்பாளராகக் களமிறங்கியிருக்கிறார். கட்சி அடையாளங்களைத் தாண்டி ஜான்குமார் மகன் என்ற அடையாளத்துடன், தி.மு.க வேட்பாளர் வி.கார்த்திகேயனை முந்துகிறார் விவிலியன் ரிச்சர்டு.

சம்பத் - பாஸ்கர்
சம்பத் - பாஸ்கர்

முதலியார்பேட்டை

அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் மோதுகின்றன. 2016 சட்டமன்றத் தேர்தலில் இரண்டாமிடம் பெற்ற என்.ஆர்.காங்கிரஸ், இம்முறை கூட்டணியில் இருப்பது, அ.தி.மு.க சிட்டிங் எம்.எல்.ஏ-வான பாஸ்கருக்கு பலம். தி.மு.க வேட்பாளர் சம்பத், தேர்தலுக்கும் கட்சிக்கும் புதியவர் என்பது மைனஸ். தொகுதி நிலவரம் அ.தி.மு.க-வுக்குச் சாதமாக இருக்கிறது.

ஜெயமூர்த்தி - தட்சிணாமூர்த்தி
ஜெயமூர்த்தி - தட்சிணாமூர்த்தி

அரியாங்குப்பம்

காங்கிரஸில் சிட்டிங் எம்.எல்.ஏ ஜெயமூர்த்தியும், என்.ஆர்.காங்கிரஸில் ஆர்.தட்சிணாமூர்த்தியும் மோதுகிறார்கள். சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருந்தும், தொகுதிக்கு எதையும் செய்யவில்லை என்ற அதிருப்தி ஜெயமூர்த்திக்கு மைனஸ். மழை, கொரோனா ஊரடங்கு காலங்களில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டது தட்சிணாமூர்த்திக்கு ப்ளஸ். பெரும்பான்மை மீனவ மக்களின் ஆதரவுடன் தட்சிணாமூர்த்தி முன்னேறுகிறார்.

அனந்தராமன் - செல்வம்
அனந்தராமன் - செல்வம்

மணவெளி

காங்கிரஸில் முன்னாள் அரசு கொறடா அனந்தராமனும், பா.ஜ.க-வில் ஏம்பலம் செல்வமும் மோதுகிறார்கள். வன்னியர் மற்றும் பட்டியல் சமூக வாக்குகள் அனந்தராமனுக்கு பலம். இரு தரப்பினருக்கும் கடும் போட்டி நிலவினாலும், எதிரணியை பா.ஜ.க-வின் முகமாக நிறுத்தி, பட்டியல் சமூக வாக்குகளை அறுவடை செய்து, தொகுதியைத் தக்கவைக்கிறார் அனந்தராமன்.

கந்தசாமி - லட்சுமிகாந்தன்
கந்தசாமி - லட்சுமிகாந்தன்

ஏம்பலம்

காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கந்தசாமியும், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக லட்சுமிகாந்தனும் களம்காண்கிறார்கள். வன்னியர் வாக்குகள், முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் பிரசாரம் ஆகியவை லட்சுமிகாந்தனுக்கு பலம். அதேசமயம் கணிசமான பட்டியல் சமூக வாக்குகளுடன், பிற சமூக வாக்குகளையும் தன்வசப்படுத்தி வைத்திருக்கும் கந்தசாமி, தொகுதியைத் தக்கவைக்கிறார்.

விஜயவேணி -ராஜவேலு
விஜயவேணி -ராஜவேலு

நெட்டப்பாக்கம்

காங்கிரஸில் சிட்டிங் எம்.எல்.ஏ விஜயவேணியும், என்.ஆர்.காங்கிரஸில் முன்னாள் அமைச்சர் ராஜவேலுவும் போட்டியிடுகிறார்கள். புதுச்சேரி எம்.பி வைத்திலிங்கத்தின் ஆதரவால் கடந்த முறை வெற்றிபெற்ற விஜயவேணி மீது, தொகுதிப் பக்கம் தலைகாட்டுவதில்லை என்ற அதிருப்தி நிலவுகிறது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர், என்.ஆர்.காங்கிரஸுக்குத் தாவிவிட்டார்கள். மேலும் பலர் அங்கிருந்துகொண்டே மறைமுகமாக ரங்கசாமியை ஆதரிப்பதால், ராஜவேலு முன்னேறுகிறார்.

ஆர்.ஆர்.செந்தில் - தனவேலு
ஆர்.ஆர்.செந்தில் - தனவேலு

பாகூர்

தி.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.ஆர்.ராமநாதனின் மகனும், முன்னாள் எம்.பி ஆர்.ஆர்.ராதாகிருஷ்ணனின் தம்பியுமான ஆர்.ஆர்.செந்தில் களம்காண்கிறார். என்.ஆர்.காங்கிரஸில் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ தனவேலு களம்காண்கிறார். ரங்கசாமியின் பிரசாரத்தால் வன்னியர் வாக்குகள் தனவேலுவுக்குக் கிடைக்கும் என்றாலும், ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற குடும்பப் பின்னணியுடன் முதன்முறை களம்காணும் செந்தில், அனைத்துச் சமூக வாக்குகளையும் பெற்று முன்னேறுகிறார்.

ரமேஷ் பரம்பத் - அப்துல் ரகுமான்
ரமேஷ் பரம்பத் - அப்துல் ரகுமான்

மாஹே

கேரள நிலப்பரப்பை ஒட்டியிருக்கும் இத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ரமேஷ் பரம்பத்தும், என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் அப்துல் ரகுமானும், சுயேச்சையாக ஹரிதாசனும் களம்காண்கிறார்கள். கடந்த தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட ராமச்சந்திரனுக்கு கேரள சி.பி.எம் ஆதரவு கொடுத்தது. அதனால் தொடர்ச்சியாக ஆறு முறை காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்ற முன்னாள் அமைச்சர் வல்சராஜை வீழ்த்தி வெற்றிபெற்றார் ராமச்சந்திரன். அதேபோல இம்முறை சுயேச்சையாகப் போட்டியிடும் ஹரிதாசனுக்கு கேரள சி.பி.எம் ஆதரவு தெரிவித்திருப்பதால், அவர் முன்னேறுகிறார்.

சோளப்பள்ளி அசோக் - ரங்கசாமி
சோளப்பள்ளி அசோக் - ரங்கசாமி

ஏனாம்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாவின் கோட்டையாகக் கருதப்படும் இத்தொகுதியில், இம்முறை அவர் போட்டியிடவில்லை. என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனர் ரங்கசாமி போட்டியிடுகிறார். வேட்பாளர் பற்றாக்குறையால் இங்கு சுயேச்சை வேட்பாளரான சோளப்பள்ளி அசோக் என்பவரை காங்கிரஸ் ஆதரிக்கிறது. போட்டியின்றி முன்னேறுகிறார் ரங்கசாமி.

ஏ.வி.சுப்பிரமணியன் - பி.ஆர்.என்.திருமுருகன்
ஏ.வி.சுப்பிரமணியன் - பி.ஆர்.என்.திருமுருகன்

காரைக்கால் வடக்கு

காங்கிரஸில் மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியனும், என்.ஆர்.காங்கிரஸில் பி.ஆர்.என்.திருமுருகனும் மோதுகிறார்கள். நில ஆக்கிரமிப்பு புகார்களால் திருமுருகன் மீது அதிருப்தி நிலவுகிறது. மீனவர் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகள் சுப்பிரமணியனுக்குக் கைகொடுப்பதால், காங்கிரஸ் முந்துகிறது.

நாஜிம் - அசனா
நாஜிம் - அசனா

காரைக்கால் தெற்கு

பா.ஜ.க-வில் அசனாவும், தி.மு.க-வில் நாஜிமும் மோதுகிறார்கள். பா.ஜ.க கூட்டணியில் அ.தி.மு.க இருப்பதால், அக்கட்சி வேட்பாளர் அசனாவுக்கு சிறுபான்மையினர் வாக்குகள் கிடைப்பது சந்தேகமே. அவை தி.மு.க வேட்பாளர் நாஜிமுக்குத் திரும்பக்கூடும் என்பதால் உதயசூரியனே முந்துகிறது.

நாக.தியாகராஜன் - மனோகரன்
நாக.தியாகராஜன் - மனோகரன்

நிரவி-திருப்பட்டினம்

தி.மு.க-வில் நாக.தியாகராஜனும், என்.ஆர்.காங்கிரஸில் முன்னாள் அமைச்சர் வி.எம்.சி.சிவகுமாரின் மகன் மனோகரனும் போட்டியிடுகிறார்கள். சிட்டிங் தி.மு.க எம்.எல்.ஏ கீதா ஆனந்தனுக்கு சீட் மறுக்கப்பட்டதால், அவர் சுயேச்சையாகக் களமிறங்கியுள்ளார். புதுமுகமான நாக.தியாகராஜனுக்கு இளைஞர் பட்டாளம் சுழன்று வேலை செய்வதால், தி.மு.க முந்துகிறது.

மாரிமுத்து - சந்திரபிரியங்கா
மாரிமுத்து - சந்திரபிரியங்கா

நெடுங்காடு-கோட்டுச்சேரி

என்.ஆர்.காங்கிரஸில் முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகள் சந்திரபிரியங்காவும், காங்கிரஸில் முன்னாள் எம்.எல்.ஏ மாரிமுத்துவும் களமிறங்கியுள்ளார்கள். தி.மு.க-வின் நட்சத்திர வேட்பாளர் என்றெல்லாம் பில்டப் செய்யப்பட்ட டாக்டர் விக்னேஸ்வரனுக்கு சீட் தரப்படவில்லை. கடுப்பான அவர் சுயேச்சையாகக் களமிறங்கியிருக்கிறார். அவர் தி.மு.க வாக்குகளைப் பிரிப்பதால், சந்திர பிரியங்கா முன்னேறுகிறார்.

சந்திரபிரியங்கா - ஜி.என்.எஸ்.ராஜசேகரன்
சந்திரபிரியங்கா - ஜி.என்.எஸ்.ராஜசேகரன்

திருநள்ளாறு

காங்கிரஸில் அமைச்சர் கமலக்கண்ணனும், பா.ஜ.க-வில் ஜி.என்.எஸ்.ராஜசேகரனும் மோதுகிறார்கள். தொகுதியில் கிரிக்கெட் பயிற்சி மையம், வாலிபால் பயிற்சி, ஐ.ஏ.எஸ் பயிற்சி மையம் என்றெல்லாம் ராஜசேகரன் வாக்குறுதிகளை அள்ளிவிடுவது இளைஞர்களைக் கவர்ந்துள்ளது. என்.ஆர்.காங்கிரஸில் சீட் கிடைக்காததால், முன்னாள் அமைச்சர் பி.ஆர்.சிவா சுயேச்சையாகப் போட்டியிட்டு, கணிசமான வாக்குகளைப் பிரிப்பது அவருக்கு மைனஸ். எனவே, கமலக்கண்ணன் தொகுதியைத் தக்கவைக்கிறார்.

 

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!