• Tuesday, 03 December 2024
மாணவர்கள் கற்றல் இழப்பு : ஈடு செய்வது எப்படி?

மாணவர்கள் கற்றல் இழப்பு : ஈடு செய்வது எப்படி?

கோடை விடுமுறை முடிந்து அடுத்த கல்வியாண்டுக்குள் அடியெடுத்து வைக்கும்போது பெரும்பாலான மாணவர்களும் அதுவரை படித்தவற்றில் பாதியை மறந்திருப்பார்கள். இது இயல்பான விஷயம்தான். இந்த நிலையில் கிட்டத்தட்ட ஒரு வருடமாகப் பள்ளிக்கூடம் செல்லாமல் இருக்கிற மாணவர்களிடம், அதற்கான பக்க விளைவாக ‘கற்றல் இழப்பு’ இருக்கும். இது மாணவர்கள் படிக்கிற வகுப்பைப் பொறுத்து மாறுபடும். கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், எல்.கே.ஜி குழந்தை தன் வயதையொத்த குழந்தைகளுடன் பழகுவ தற்கான வாய்ப்பை இந்தக் கல்வியாண்டில் இழந்திருக்கிறது.

எட்டாம் வகுப்பு வரை விளையாட்டுப் பிள்ளையாக இருந்த ஒரு மாணவன் ‘ஒன்பதாம் வகுப்பிலிருந்து படிப்புக்கு அடுத்துதான் மற்ற விஷயங்கள்’ என்று முடிவெடுக்கிற முதிர்ச்சியை இழந்திருக்கிறான். இந்தக் கற்றல் இழப்பை எப்படி ஈடுகட்டுவது... கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தியிடம் கேட்டோம்.

‘`வரிசையில் நிற்பது, ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவது, குழுவாக இணைந்து செயல்படுவது போன்ற செயல்களை கிண்டர் கார்டன் படிக்கிற குழந்தைகளுக்கு ஆன்லைனில் சொல்லித் தந்திருக்கவே முடியாது. அதனால், இவற்றைச் சொல்லித் தந்துவிட்டுதான் ஸ்டாண்டிங் லைன், ஸ்லீப்பிங் லைன் போன்ற பாடங்களுக்குச் செல்ல வேண்டும் ஆசிரியர்கள். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை படிக்கிற மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிப்பாடங்களைத்தான் அதிக கவனம் எடுத்துச் சொல்லித் தருவார்கள். அது ஒரு வருடம் கிடைக்காமல் போவதால், ஸ்கூல் திறந்ததும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிக்கிற மாணவர்களுக்கு வீட்டுப்பாடத்தை பள்ளிக் கூடத்திலேயே சிறிது நேரம் ஒதுக்கிச் செய்ய வைக்கலாம். அதை மாணவர்களும் ஆசிரியர்களும் பேசிக் கொள்கிற நேரமாக அமைத்துக் கொள்ளலாம்.

சற்று வளர்ந்த மாணவர்கள், லாக்டெளன் நேரத்தில் வீட்டுப் பெரியவர்களுடன் சேர்ந்து நிறைய படங்கள் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். இவர்கள் பள்ளிக்குச் செல்லும்போது கவனச்சிதறல் அதிகமாக இருக்கும். இவர்களை பள்ளி சார்ந்த நடவடிக்கைகளில் வழக்கம்போல முழுமையாக ஈடுபடுத்த ஒன்று அல்லது இரண்டு வருடங்களாகும். இதை ஆசிரியர்கள் புரிந்துகொள்வது நல்லது.

இந்தக் கல்வியாண்டில் சில பாடங்களை ஆப்ஷனல் என அறிவித்திருக்கிறது அரசு. உதாரணத்துக்கு, ‘ட்ரிக்னாமெட்ரி’ பாடம் ஆப்ஷனல் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றால், இந்தக் கல்வியாண்டில் அந்தப் பாடத்திலிருந்து கேள்விகள் கேட்க மாட்டார்கள். ஆனால், அடுத்தடுத்த கல்வியாண்டுகளில் இந்தப் பாடத்திலிருந்து கேள்விகள் கேட்கப்படும். அதனால், அடுத்த இரண்டு கல்வியாண்டுகளில் இதற்கென்று தனியாக ஒரு பீரியடு ஒதுக்கி, விடுபட்ட பாடங்களைச் சொல்லித் தர வேண்டும். தவிர, இந்தப் பாடங்களுக்கு மட்டும் தனியாக ஆன்லைனில் தேர்வும் வைக்கலாம். இல்லையென்றால், அடுத்தடுத்த வகுப்புகளிலோ, கல்லூரியிலோ மாணவர்கள் கஷ்டப்படுவார்கள். வரும் கல்வியாண்டில் விடுமுறை நாள்களைச் சற்றுக் குறைத்துவிட்டு மாணவர்களின் கூடுதல் திறமைகளை வெளிக் கொணரும் எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்ட்டிவிட்டீஸ், சோஷியல் ஆக்ட்டிவிட்டீஸ், இன்டர் பர்சனல் ஸ்கில்ஸ் போன்றவற்றுக்குக் கூடுதல் முக்கியத்துவம் தர வேண்டும்.

இந்த ஒரு வருட கற்றல் இழப்பை முறைப்படி சரிசெய்ய மூன்று வருடங்கள் ஆகும். ஒரு வருடத்திலேயே சரி செய்ய வேண்டுமென்று அரசோ, பள்ளிக்கூடங்களோ நினைத்தால், அது மாணவர் களுக்குச் சுமையாக இருக்கும்.

ஆசிரியர் பெற்றோர் கழகங்கள் இந்த பேண்டெமிக் காலத்தில் முழுமையாக இயங்க வேண்டும். பெற்றோர் களுடன் அவர்களின் பிள்ளைகளின் தற்போதைய நிலைகுறித்துப் பேச வேண்டும்.

கல்லூரி மாணவர்களைப் பொறுத்தவரை, கிராமப்புற மாணவர்கள் மட்டுமல்ல, நகர்ப்புற மாணவர்களும் கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வு ஆவதற்கான சில தகுதிகளை இழந்து விட்டார்கள். குறிப்பாக, இக்காலத்துக்கு அதிகம் தேவையான தகவல் பரிமாற்றத் திறனையும் (கம்யூனி கேஷன் ஸ்கில்), நேர்முகத் தேர்வைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்கிற திறமையையும் இழந்துவிட்டார்கள். தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கும் சரி, ஆங்கில வழியில் படித்திருந்தாலும் பேச்சு ஆங்கிலம் முழுமையாகக் கைவரப் பெறாத மாணவர்களுக்கும் சரி, இந்த ஒரு வருடத்தில் ஸ்போக்கன் இங்கிலீஷில் டச் விட்டுப் போயிருக்கும். தேர்வுகளை மட்டும் ஆன்லைனில் எழுதிவிட்டு, இந்தக் கல்வியாண்டைக் கடந்த கல்லூரி மாணவர்கள் அடுத்த கல்வியாண்டின் கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வு பெறுவது கடினம். இந்த இழப்பை வரும் கல்வியாண்டில் ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து சரி செய்ய வேண்டும். தவிர, கல்லூரிகளில் ஒவ்வொரு சப்ஜெக்ட்டுக்கும் ஒரு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். உதாரணத்துக்கு, ஆர்ட்ஸ் துறை மாணவர்களுக்கு வெளிநாட்டு மொழி ஒன்றைக் கற்றுத்தருவதையும் விலங்கியல் மாணவர்களுக்கு லேப் டெக்னாலஜி சொல்லித் தருவதையும் சொல்லலாம். இதைக் கடைசி வருடம்தான் கற்றுத் தருவார்கள் என்றால், லாக்டெளன் நேரத்தில் ஃபைனல் இயர் படித்துக்கொண்டிருந்த மாணவர்களுக்கு இது பெரும் இழப்பாகும். இதில் அரசும் கல்லூரி நிர்வாகங்களும் இணைந்துதான் மாணவர்களுக்கு உதவ வேண்டும்” என்றார்.

கொரோனா பாதிப்பில் இரண்டாவது ஆண்டாகவும் கல்வி பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது. இவற்றையெல்லாம் காரணம்காட்டி சமூக அழுத்தங்களிலிருந்து எதிர்காலத்தில் நம் குழந்தைகள் தப்பிக்கவே முடியாது. வழக்கத்தைவிட கூடுதல் அழுத்தம்கூட வரக்கூடும். இத்தகைய சூழலில், கற்றல் இழப்புக்கு ஆளாகியிருக்கும் குழந்தைகளைத் தாங்கிப் பிடிக்க வேண்டியது பெற்றோர் - ஆசிரியர் - அரசாங்கம் ஆகிய மூன்று தரப்பின் கூட்டுப்பொறுப்பே!

இதை உணர்ந்து அனைவரும் செயலாற்றி னால்தான் எதிர்காலத் தலைமுறை, ஆளுமை யுள்ள தலைமுறையாக உருவெடுக்கும்.

 
 

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!