மீண்டும் ஊரடங்கு : தள்ளிப்போகும் ப்ளஸ் டூ தேர்வுகள்
தமிழகத்தில் குறைந்திருந்த கொரோனா வைரஸ் பரவல், மார்ச் மாதம் முதல் வாரத்திலிருந்து மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் மிகவும் வீரியமாக இருக்கிறது. கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் 400-க்கும் கீழ் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 10,000-தை நெருங்கியுள்ளது.
தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும், நாளுக்கு நாள் பாதிப்பு விகிதம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஏற்கனவே , முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு, வணிக வளாகங்கள், திரையரங்குகளில் 50 சதவீத அனுமதி, பேருந்துகளில் நின்று கொண்டு பயணிக்கத் தடை. மதக்கூட்டம், அரசியல் கூட்டம், திருமணம் மற்றும் இறுதிச்சடங்குகள் போன்றவற்றில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது. இருந்த போதிலும் இந்த கட்டுப்பாடுகள் போதிய பலனை அளிக்கவில்லை. பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.
நிலைமை மோசமாகிக்கொண்டிருக்கும் வேலையில், வைரஸ் தடுப்பு நடவடிக்கை மற்றும் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக ஆலோசனை செய்யத் தமிழக அரசு திட்டமிட்டது. தலைமைச் செயலகத்தில் கடந்த வாரம் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், வருவாய் துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். .
அந்த கூட்டத்தில் முதல்வரோ அமைச்சர்களோ கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் இன்று முதல்வர் சென்னையில் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இதில் முக்கிய அமைச்சர்களும் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ``தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரையில் இந்த ஊரடங்கு அமலில் இருக்கும்.
தமிழ்நாட்டில் இரவு நேரங்களில் பொது ஊரடங்கு அமலில் இருப்பதால் வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்து மேற்கூறிய காலகட்டத்தில் (அதாவது இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை) செயல்பட அனுமதிக்கப்படமாட்டாது.
மாநிலங்களுக்கு இடையேயான பொது\ தனியார் போக்குவரத்து சேவையின் போது தடுப்பு நடவடிக்கைகளான முக கவசம் அணிதல் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்தல் கூட்ட நெரிசலை தவிர்த்தல் ஆகியவற்றை தவறாமல் பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.
அவசர மருத்துவ சேவைகளுக்கும், விமான நிலையம், ரயில் நிலையம், செல்ல மட்டும் வாடகை\ ஆட்டோ டாக்சி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும். மேலும் அத்தியாவசியமான பால் வினியோகம், தினசரி பத்திரிகை வினியோகம், மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவ துறை சார்ந்த பணிகள் சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேர ஊரடங்கு போதும் அனுமதிக்கப்படும்.
ஊடகம் மற்றும் பத்திரிகை துறையினர் தொடர்ந்து இரவிலும் செயல்படலாம். பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.
தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இரவு நேர ஊரடங்கின்போது செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும். அன்றைய தினம் இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மற்றும் அனைத்து கடைகள் செயல்பட அனுமதி கிடையாது. மீறினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
எனினும் அத்தியாவசிய பணிகளான பால் வினியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவமனையில் பரிசோதனை கூடம் மருந்தகங்கள் ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவ துறை சார்ந்த பணிகள் அனைத்து சரக்கு வாகனங்கள் விவசாயிகளின் விளை பொருள்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் எரிபொருள்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் ஆகியவை முழு ஊரடங்கின் போதும் அனுமதிக்கப்படும்.
முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில் உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மதியம் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகின்றது. மற்ற மின் வணிக நிறுவனங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் அனுமதி இல்லை.
ஊடகம் மற்றும் பத்திரிகை துறையினர் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணியாற்றலாம்
தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் முழுவதும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
ஊரடங்கு நாட்களிலும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு ஏற்கனவே வெளியிடப்பட்ட கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வதற்கும் எவ்வித தடையும் இல்லை”
நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலா தலங்களுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும் அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை
பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ்வைப்பகம் மற்றும் அருங்காட்சியங்கள் அனைத்து நாட்களும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் குறைந்தபட்சம் ஐம்பது சதவீத பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அந்த நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேநீர் கடைகள், உணவு விடுதிகள், காய்கறி கடைகள், பல சரக்கு கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள் அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் ஒரே நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணி வரை மட்டும் செயல்படும் அனுமதிக்கப்படும்.
கொரனோ நோய்த்தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு மதம் சார்ந்த திருவிழாக்கள் மற்றும் கூட்டங்களுக்கு கடந்த 10-ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே குடமுழுக்கு திருவிழா நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்\இந்து சமய அறநிலையத் துறை ஆணையரிடம் அனுமதி பெற்று இருந்தாலோ அல்லது குடமுழுக்கு நடத்த தேதி நிர்ணயம் செய்து, முன்னேற்பாடுகள் செய்திருந்தாலோ கோவில் பணியாளர்கள் நிர்வாகத்தின் அனுமதியுடன் பொதுமக்கள் 50 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு, உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது.
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு புதிதாக குடமுழுக்கு\ திருவிழாக்கள் நடத்துவதை சம்பந்தப்பட்ட நிர்வாக அமைப்புகள் தற்காலிகமாக ஒத்தி வைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் அத்தகைய நிகழ்வுகளுக்கு தற்போதைய சூழ்நிலையில் அனுமதி அளிக்கப்பட மாட்டாது.
பிளஸ் டூ மாணவர்களுக்கான தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மூலம் நடத்தப்படும் பொது தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது. இருப்பினும் தற்போது நடைபெற்று வரும் செய்முறைத்தேர்வு ஏற்கனவே திட்டமிட்டபடி நடத்தப்படும்.
கல்லூரி\ பல்கலைக்கழக ஆசிரியர்கள் தங்கள் வீட்டிலேயே இணைய வழியாக வகுப்புகளை எடுக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் கல்லூரி பல்கலைக் கழக தேர்வுகள் இணைய வழியாக மட்டுமே நடத்தப்பட வேண்டும். கல்வி சார்ந்த பயிற்சி நிறுவனங்கள் அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் இணைய வழி மட்டுமே பயிற்சி வழங்க அனுமதிக்கப்படுகிறது. கோடைகால முகாம்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது.
தேவையான உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ வசதிகள் உடைய தனியார் மருத்துவமனைகள், விருப்பப்படும் தங்கும் விடுதிகள் இணைந்து கொரோனா பாதுகாப்பு மையங்களாக செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. இதனை சுகாதாரத்துறை ஆய்வு செய்து தேவைப்படும் அனுமதியை வழங்கலாம். அப்படியான தங்கும் விடுதிகளில் வேறு நபர்களை தங்க வைக்க கூடாது.
திருமண நிகழ்வுகளில் 100 நபர்களுக்கு மிகாமல் கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கவசம் அணிவது சோப்பு அல்லது கை சுத்திகரிப்பான் கொண்டு கைகளை சுத்தம் செய்வது சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவற்றை தவறாமல் பின்பற்ற திருமண மண்டபம் நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் மண்டப உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில்கொரோனா தடுப்பு நடவடிக்கையான முகக் கவசம் அணிவது, கை சுத்திகரிப்பான் கொண்டு கைகளை சுத்தம் செய்வது சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவற்றை தவறாமல் பின்பற்றுவது, திரையரங்க நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும், தவறும் பட்சத்தில் திரையரங்க உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தீவிரமாக பின்பற்றப்படவேண்டும். இதனை கண்காணிக்க மாவட்டம் தோறும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும். நோய்த்தொற்று சம்பந்தமாக வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காவிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
Comment / Reply From
You May Also Like
Popular Posts
-
dhanush movie status
- Post By Admin
- March 2, 2021
-
sports
- Post By Muthu
- March 5, 2021
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!