மீண்டும் மிளிர்வாரா பினராயி?, இது கேரள சர்வே
‘‘உறப்பாணு எல்.டி.எஃப்’’ என ஆளும் சி.பி.எம் கூட்டணியும், ‘‘நாடு நந்நாகான் யு.டி.எஃப்’’ என காங்கிரஸ் கூட்டணியும், ‘‘புதிய கேரளம் மோடிக்கு ஒப்பம்’’ என பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியும் கேரளத்தில் தீவிர பிரசாரம் நடத்துகின்றன. எல்.டி.எஃப் சொல்வதுபோல மீண்டும் கேரளத்தில் உறுதியான ஆட்சி அமைக்குமா... காங்கிரஸ் கூறுவதுபோல நாடு நன்றாக இருக்க யு.டி.எஃப் கூட்டணிக்கு மக்கள் வாக்களிப்பார் களா... பா.ஜ.க கூறுவதுபோல புதிய கேரளம் மோடியின் பக்கம் நிற்குமா... என்பதை நிர்ணயிக்கும் கேரள சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடக்கிறது.
இந்தியாவில் எமெர்ஜென்சிக்குப் பிறகு நடந்த தேர்தல்களில் கேரளத்தில் கம்யூனிஸ்டும், காங்கிரஸும் மாறி மாறி ஆட்சிக்கு வருவது வரலாறு. கேரள மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் ஆளுங்கட்சிக்கு எதிராகவே வாக்களித்து வந்திருக் கிறார்கள். ‘இம்முறை அந்தச் சரித்திரத்தை மாற்றி மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம்’ என்று சூளுரைத்து பணியாற்றுகிறது ஆளும் சி.பி.எம். அதற்குத் தோதாகவே கேரள மீடியாக்களின் கருத்துக்கணிப்பும் அமைந்திருக்கிறது.
‘‘கருத்துக்கணிப்புகள் நமக்குச் சாதகமாக இருப்பதைப் பார்த்து அஜாக்கிரதையாக இருந்து விடாதீர்கள்’’ என்று தொண்டர்களின் எச்சரிக்கை உணர்வைத் தூண்டி களப்பணியாற்ற வைக்கிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன். ‘‘மீண்டும் பினராயி விஜயனுக்கு வாய்ப்பு கொடுத்தால், கேரளத்துக்கு சர்வ நாசம் ஏற்படும். இப்போது அவர் பவ்யமாகப் பேசுவதைப் பார்க்காதீர்கள். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பினராயி விஜயனின் முகம் வேறு மாதிரி மாறும்’’ என்கிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.ஆண்டனி. இதற்கிடையில் கேரளத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இரட்டை வாக்குகள் உள்ளதாக காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா புதிய பூதத்தைக் கிளப்பிவிட்டிருக்கிறார். ‘‘140 தொகுதிகளிலுமுள்ள இரட்டை வாக்குகளை நீக்கினால் நாங்கள் வெற்றிபெறுவோம்’’ என்கிறார் அவர். இந்தக் களேபரங்களுக்கு மத்தியில் கேரள தேர்தல் களத்தின் உண்மை நிலவரம் குறித்து விசாரித்தோம்.
கேரளத்தில் சி.பி.எம்., காங்கிரஸ், பா.ஜ.க கூட்டணிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி என்றாலும், சி.பி.எம்., காங்கிரஸ் என்ற இரண்டு அணியில் ஒன்றுதான் ஆட்சி அமைக்கும் அளவுக்கு எம்.எல்.ஏ-க்களைப் பெறும். அதற்காக, பா.ஜ.க அணிக்குச் செல்வாக்கு இல்லை என்று ஒதுக்கிவிட முடியாது. கேரளத்திலுள்ள பெரும்பாலான தொகுதிகளில் சி.பி.எம்., காங்கிரஸ் கட்சிகளின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் அளவுக்கு பா.ஜ.க வாக்குவங்கி வைத்திருக்கிறது. அதனால்தான், ‘காங்கிரஸும் பா.ஜ.க-வும் ரகசியக் கூட்டணி வைத்திருக்கின்றன’ என்று சி.பி.எம் தலைவர்களும். ‘பா.ஜ.க-வுடன் சி.பி.எம் ரகசியக் கூட்டணி வைத்திருக்கிறது’ என்று காங்கிரஸும் மாறி மாறிக் குற்றம்சாட்டுகின்றன.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கேரளத்தின் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் 19 தொகுதிகளை காங்கிரஸ் கூட்டணி அள்ளியது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சபரிமலை சந்நிதானத்தில் இளம்பெண்களை அனுமதித்த விவகாரம் காரணமாக, சி.பி.எம் கூட்டணியை மக்கள் தண்டித்துவிட்டதாக அப்போது கூறி னார்கள். ‘நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியைப் போல சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றியைக் குவிப்போம்’ என்று உற்சாகமாக இருந்தது காங்கிரஸ் கூடாரம். ஆனால், அடுத்ததாக 2020, டிசம்பர் மாதம் கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் தலையில் இடியை இறக்கின.
உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில், சபரிமலை விவகாரத்துடன் யு.ஏ.இ தூதரகம் மூலமாக போலி பார்சலில் தங்கம் கடத்திய ஸ்வப்னா சுரேஷ் விவகாரமும் சேர்ந்துகொண்டது. அதில் கேரள முதன்மைச் செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரன் கைதுசெய்யப்பட்டார். சி.பி.எம் மாநிலச் செயலாளராக இருந்த கொடியேரி பாலகிருஷ்ணனின் மகன் பினோய் கொடியேரி, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பெங்களூரில் கைதுசெய்யப்பட்டதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து கொடியேரி பாலகிருஷ்ணன் கட்சிப் பதவியை விட்டுவிட்டு நீண்டகால விடுப்பில் சென்றுவிட்டார். இவ்வளவு பஞ்சாயத்துகளுக்கு மத்தியிலும், உள்ளாட்சித் தேர்தலில் வெற்றியை வாரிக்குவித்தது சி.பி.எம் கூட்டணி.
கடந்த 20 ஆண்டு சரித்திரத்தில் உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றியை ருசித்த பேரதிசயம் பினராயி விஜயன் ஆட்சியில் நடந்தது. ‘மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்த அதே பேரதிசயத்தை இந்தச் சட்டமன்றத் தேர்தலிலும் பினராயி தோழர் நிகழ்த்திக்காட்டுவார்’ என்ற குரல் தோழர்கள் மத்தியில் ஒலிக்கிறது. ‘‘ஒக்கி புயல், மழை வெள்ள பிரளயம், நிபா வைரஸ், கொரோனா வைரஸ் தொற்றுகளில் மக்களுக்கு தைரியம் கொடுத்தார் பினராயி விஜயன். உள்ளாட்சி நிர்வாகம் மூலம் சமூக கிச்சன் ஏற்படுத்தி மக்களுக்கு உணவளித்தார். கடந்த ஆட்சியில் 18 மாதங்களாக வழங்காமல் இருந்த பென்ஷன் பேலன்ஸ் தொகையை வழங்கினார். எனவே, மற்ற எந்தக் குற்றச்சாட்டும் பினராயி விஜயனை வீழ்த்தாது’’ என்கிறார்கள் கேரள கம்யூனிஸ்ட்டுகள்.
அதே சமயம் காங்கிரஸ் தரப்பில், ‘‘உள்ளாட்சியில் உள்ளூர்ப் பிரச்னைகளைப் பிரதானப்படுத்தித்தான் மக்கள் ஓட்டளிப்பார்கள். அதே கணக்கில் சட்ட மன்றத் தேர்தலை எடுத்துக்கொள்ள வேண்டாம். சபரிமலை விவகாரம், ஸ்வப்னா சுரேஷின் தங்கக் கடத்தல் விவகாரம், அரசு தேர்வாணையம் மூலம் சொந்தக் கட்சியினரை வேலைக்கு அமர்த்திய மோசடிகள் ஆகியவை சட்டமன்றத் தேர்தலில்தான் எதிரொலிக்கும். ஆழ்கடலில் மீன்பிடிக் குத்தகையை அமெரிக்க கம்பெனிக்குத் தாரைவார்த்திருக்கும் மீனவர் துரோகச் செயலும் இந்தச் சட்டமன்றத் தேர்தலில் சி.பி.எம் அரசுக்குப் பாடம் புகட்டும். எனவே, கருத்துக்கணிப்புகள் தலைகீழாக மாறும்’’ என்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர்.
Comment / Reply From
You May Also Like
Popular Posts
-
dhanush movie status
- Post By Admin
- March 2, 2021
-
sports
- Post By Muthu
- March 5, 2021
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!