• Friday, 22 November 2024
முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திருவாரூர் வருகை

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திருவாரூர் வருகை

திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.10.50 கோடி மதிப்பில் மகப்பேறு குழந்தைகள் நல சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. 70 ஆயிரம் சதுரடி பரப்பில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய கட்டிடத்தை நாளை (புதன்கிழமை) காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் இன்று மாலை சென்னையிலிருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வருகிறார். பின்னர் கார் மூலம் தஞ்சாவூர் வழியாக திருவாரூர் வருகிறார். பின்னர் காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயாரும், தனது பாட்டியுமான அஞ்சுகம் அம்மாள் நினைவிடத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் அங்கிருந்து திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள அவரது குடும்பத்திற்கு சொந்தமான இல்லத்திற்கு சென்று கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

இதனைத் தொடர்ந்து அரசினர் ஓய்வு இல்லம் சென்று இரவு தங்குகிறார். இதையடுத்து நாளை காலை 9 மணிக்கு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு குழந்தைகள் நல சிகிச்சை பிரிவை திறந்து வைக்கிறார். இதனைத்தொடர்ந்து கார் மூலம் திருக்குவளையில் உள்ள கருணாநிதி பிறந்த இல்லத்திற்கு சென்று அங்கு அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் திருவெண்காடு சென்று மதிய உணவை முடித்துக்கொண்டு கார் மூலம் சென்னை திரும்புகிறார். தமிழக முதலமைச்சராக பதவியேற்று முதல்முறையாக சொந்த ஊரான திருவாரூருக்கு முதல்வர் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காஷ்மீர் விமான நிலையத்தில் டிரோன் மூலம் வெடிகுண்டு வீசியதை தொடர்ந்து நாடு முழுவதும் முக்கிய பிரமுகர்களின் நிகழ்வுகளின்போது டிரோன் பறக்க தடை விதிக்க வேண்டும் என மத்திய பாதுகாப்பு துறை அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் முதலமைச்சர் வருகையை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் இன்றும் நாளையும் டிரோன் பறக்க மாவட்ட கலெக்டர் காயத்திரி கிருஷ்ணன் தடை விதித்துள்ளார்.

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!