முதல்வரும் 33 அமைச்சர்களும்
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.
மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணிக்கு 159 இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது. தி.மு.க. 125 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைப்பதற்கான தனி பெரும்பான்மை பலத்தை பெற்றுள்ளது.
10 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. ஆட்சி கட்டிலில் அமர்கிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் அரியணையை அலங்கரிக்கிறார். தி.மு.க. தலைமையிலான ஆட்சி அமைவதற்கான ஏற்பாடுகள் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கின.
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணி கட்சியினரையும் சேர்த்து 133 எம்.எல்.ஏ.க்கள் கடந்த செவ்வாய்க்கிழமை அண்ணா அறிவாலயத்தில் கூடி மு.க.ஸ்டாலினை ஒருமனதாக போட்டியின்றி சட்டசபை தி.மு.க. தலைவராக தேர்வு செய்தனர். இதற்கான தீர்மான கடிதத்திலும் அவர்கள் கையெழுத்திட்டனர்.
நேற்று முன்தினம் அந்த கடிதத்துடன் மு.க. ஸ்டாலின் கவர்னர் மாளிகைக்கு சென்றார். கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம் அந்த கடிதத்தை வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதை ஏற்றுக்கொண்ட கவர்னர் மு.க.ஸ்டாலினை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைய உள்ள புதிய அமைச்சரவை பட்டியல் கவர்னரின் பார்வைக்கு அனுப்பப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட கவர்னர் பன்வாரிலால் புதிய அமைச்சரவை பதவி ஏற்புக்கான ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டார்.
அதன்பேரில் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் திறந்தவெளி பகுதியில் பதவி ஏற்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 200 பேருக்கு மட்டுமே அந்த விழாவில் பங்கேற்க வரும்படி அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணியில் இருந்தே எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள் கவர்னர் மாளிகைக்கு வர தொடங்கினார்கள். அவர்கள் அனைவரும் சோதனைக்கு பிறகு விழா நடைபெறும் திறந்தவெளி பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். 8.30 மணிக்கு எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்தனர்.
சரியாக 9.03 மணிக்கு மு.க.ஸ்டாலின் கவர்னர் மாளிகை வந்தார். அவரை தலைமை செயலாளர் ராஜீவ்ரஞ்சன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதையடுத்து கவர்னர் விழா மேடைக்கு வந்தார். அவருக்கு மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
அதைத் தொடர்ந்து அமைச்சர்களை கவர்னருக்கு மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். தனது குடும்பத்தாரையும் அறிமுகம் செய்தார். விழாவுக்கு வந்திருந்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரையும் கவனருக்கு அறிமுகம் செய்தார்.
அதன் பிறகு மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் விழா மேடைக்கு சென்றனர். இதையடுத்து பதவி ஏற்பு விழா நிகழ்ச்சிகள் 9.06 மணிக்கு தொடங்கின. புதிய அமைச்சரவைக்கு பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு உறுதிமொழி செய்து வைக்க வரும்படி கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அழைப்பு விடுத்தார்.
அதன் பிறகு பதவி ஏற்க வருமாறு மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் தனக்குரிய மேடை பகுதிக்கு வந்து பதவி ஏற்க தயாராக நின்றார். கவர்னர் பன்வாரிலால் பதவி பிரமாணம் செய்து வைத்து அதற்கான வாசகத்தை படித்தார்.
அதன்படி, “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்” என்று தொடங்கி பிரமாணத்தை மு.க.ஸ்டாலின் படித்தார். பிறகு ரகசிய காப்பு உறுதி மொழியையும் படித்து முடித்தார். 9.07 மணிக்கு ஸ்டாலின் பதவி ஏற்று முடித்தார்.
முதல்-அமைச்சராக 2 உறுதிமொழி பிரமாணங்களையும் வாசித்து முடித்த பிறகு அதற்கான கோப்பில் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். பிறகு கவர்னர் பன்வாரிலாலுக்கு கைகூப்பி வணக்கம் தெரிவித்து நன்றி கூறினார்.
பதிலுக்கு கவர்னர் வாழ்த்துக்களை தெரிவித்தார். அதன் பிறகு புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 33 அமைச்சர்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை செயலாளர் ராஜீவ்ரஞ்சன் ஒவ்வொரு அமைச்சராக வரிசையாக பெயர் சொல்லி அழைத்து பதவி ஏற்க வைத்தார்.
அதன்படி துரைமுருகன், கே.என். நேரு, இ.பெரியசாமி, க.பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எஸ்.ரகுபதி, சு.முத்துசாமி, கே.ஆர்.பெரியகருப்பன், தா.மோ.அன்பரசன், மு.பெ.சாமிநாதன், பி.கீதா ஜீவன், அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன், ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன், கா.ராமச்சந்திரன், அர.சக்கரபாணி, வி.செந்தில் பாலாஜி, ஆர்.காந்தி, மா.சுப்பிரமணியன், பி.மூர்த்தி, எஸ்.எஸ்.சிவசங்கர், பி.கே.சேகர்பாபு, பழனிவேல் தியாகராஜன், சா.மு.நாசர், செஞ்சி கே.எஸ்.மஸ்தான், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன், சி.வி.கணேசன், த.மனோ தங்கராஜ், மா.மதிவேந்தன், என்.கயல்விழி செல்வராஜ் பதவி ஏற்றுக்கொண்டனர்.
அமைச்சர்கள் பதவி ஏற்றதும் கோப்பில் கையெழுத்திட்டனர். பிறகு கவர்னருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் வணக்கமும், நன்றியும் தெரிவித்தனர். அமைச்சர்கள் பதவி ஏற்று முடித்ததும் விழா நிறைவு பெற்றது.
Comment / Reply From
You May Also Like
Popular Posts
-
dhanush movie status
- Post By Admin
- March 2, 2021
-
sports
- Post By Muthu
- March 5, 2021
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!