• Saturday, 05 July 2025
மோடியுடன் மோதும் யோகி ஆதித்யநாத்

மோடியுடன் மோதும் யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேசத்தில் இன்னும் ஓராண்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கட்சி நிர்வாகிகளுக்கும், முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் இடையே இத்தனை நாள்களாக மறைமுகமாக நிலவிவந்த கருத்து வேறுபாடு தற்போது பூதாகரமாக வெடித்திருக்கிறது. அதன் காரணமாக, பாஜக தலைமைக்கும், யோகிக்கும் இடையே மோதல் போக்கு நிலவிவருகிறது. இந்தநிலையில், தலைமைக்கு யோகி மீது திடீர் அதிருப்தி ஏற்பட என்ன காரணம், பாஜக-வின் தலைமை நிர்வாகிகள் உத்தரப்பிரதேசத்துக்கு விசிட் செய்தது எதற்காக, ஆர்.எஸ்.எஸ் உயர்மட்டக்குழுவில் யோகி குறித்து என்ன விவாதிக்கப்பட்டது போன்ற மோடிக்கும் யோகிக்கும் இடையே நிலவும் பனிப்போரின் பின்னணி என்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதாவுக்கு, குஜராத் மாநிலம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு உத்தரப்பிரதேசமும் முக்கியம் என்ற நிலை கடந்த நான்கு ஆண்டுகளில் உருவாக்கப்பட்டிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் 2017 சட்டசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலேயே தேர்தலைச் சந்தித்த பாஜக., 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மாபெரும் வெற்றியைப் பதிவு செய்து ஆட்சியைப் பிடித்தது.

உத்தரப்பிரதேசத்தில் 1991-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் 221 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் பாஜக முதன்முறையாக ஆட்சியில் அமர்ந்தது. கல்யாண்சிங் முதல்வராகப் பதவிவகித்தார். அதைத் தொடர்ந்து, 2000-2002 வரை இரண்டு வருட காலத்துக்கு மட்டும் தற்போதைய மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரப்பிரதேச முதல்வராகப் பதவியிலிருந்தார். அதற்குப் பிறகு உத்தரப்பிரதேசத்தில் தாமரை மலர்வதற்கு மாநில மக்கள் பிடிகொடுக்கவில்லை. ஆனால், அப்போதே உத்தரப்பிரதேசத்தை பாஜக குறிவைத்துவிட்டது.

இந்தியாவின் மக்கள்தொகை மிகுதியான மாநிலத்தில், பெரும்பான்மை மக்களின் எண்ணங்களைத் தூண்டி, அவற்றை வாக்குகளாக மாற்ற அந்தக் கட்சிக்கு சிறிது காலம் தேவைப்பட்டது அவ்வளவுதான். பாஜக-வின் இந்தத் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த, கட்சித் தலைமை கண்டெடுத்த இந்துத்துவ மடாதிபதிதான் யோகி ஆதித்யநாத். உ.பி-யில் 2017 சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில், 384 தொகுதிகளில் போட்டியிட்டு, 312 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் யோகி ஆதித்யநாத்தை முதல்வராக அமர்த்தி ஆட்சி அமைத்த பாஜக., அவரது தலைமையில் தற்போது முழுமையாக நான்கு ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இந்த நான்கு ஆண்டுக்காலத்தில் உத்தரப்பிரதேசம் என்றால் பாஜக., பாஜக என்றால் உத்தரப்பிரதேசம் என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

ஆசைகளைத் துறந்து, ஆன்மிகத்தில் மூழ்கிய மடாதிபதி ஒரு மாநிலத்தின் முதல்வராக உயர்கிறார் என்பதெல்லாம் உத்தரப்பிரதேசத்தில் மட்டுமே நடக்கக்கூடிய, பாஜக-வால் மட்டுமே நிகழ்த்தக் கூடிய மந்திரம். சிறு வயதிலேயே ஆன்மிகத்தின் மீது அதீத நாட்டம் கொண்டவராக விளங்கிய யோகி ஆதித்யநாத், 1994-ல் கோரக்பூர் மடத்தின் தலைமை மடாதிபதியாக உயர்ந்தார். சந்நியாசிதான் என்றாலும், யோகியின் போக்கே வேறு. எதையுமே தடாலடியாகச் செய்தே பழக்கப்பட்ட யோகி ஆதித்யநாத்தின் ஆரம்பகால வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது கோரக்பூர் பல்கலைக்கழக இளைஞர்கள் அளித்த பேராதரவுதான் என்றே சொல்லலாம்.

கோரக்பூர் மடாதிபதியாக இருந்த யோகி, இந்து மகாசபையில் இணைந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் இணக்கமாகச் செயல்பட்டதுதான் அவருக்கும் பாஜக-வுக்குமான தொடர்பை ஏற்படுத்தியது. இந்துத்துவா சித்தாந்தத்தை இளைஞர்கள் மூலமாக மாநிலத்தில் வலுப்படுத்திய யோகி ஆதித்யநாத்தை கோரக்பூர் மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர்கள் முன்னிறுத்தினர். உத்தரப்பிரதேசத்தில் இந்துத்துவ சித்தாந்தம் வலுப்பெறத் தொடங்கிய காலமது. கோரக்பூர் தொகுதியில் முதன்முறையாக வெற்றிபெற்று எம்.பி-யான யோகி ஆதித்யநாத், அதிலிருந்து தொடர்ந்து ஐந்து முறை கோரக்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக நாடாளுமன்ற இருக்கையை அலங்கரித்தார்.

2017 தேர்தலில் ஆட்சியைப் பிடித்தே தீர வேண்டும் என்று முனைப்பு காட்டிய பாஜக., முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலேயே தேர்தலையும் எதிர்கொண்டு வெற்றிக்கனியை எட்டிப் பிடித்தது. தேர்தல் முடிவுக்கு பிந்தைய ஆலோசனையில் பாஜக-வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-ன் மூத்த தலைவர்கள் யோகி ஆதித்யநாத்தை முதல்வர் பதவிக்குப் பரிந்துரைக்க, மறு பேச்சுக்கே இடமில்லாமல் பாஜக தலைமையும் ஐந்து முறை எம்.பி-யாக பணியாற்றிய யோகியை முதல்வராகத் தேர்ந்தெடுத்தது. முதல்வர் பதவிக்கு வந்ததுமே சந்நியாசி யோகி சரவெடியாக வெடிக்கத் தொடங்கினார். அடுத்த சில ஆண்டுகளில் இந்துத்துவ சித்தாந்தத்தின் அடையாளமாக உயர்ந்தார். உத்தரப்பிரதேசத்தில் இந்து மதத்தை உயர்த்திப் பிடித்து, பிரதமர் மோடியின் அபிமானிகளுள் மிக முக்கியமானவர் என்ற இடத்தை அடைந்திருக்கும் யோகி ஆதித்யநாத்தை வரும் தேர்தலில் முதல்வர் வேட்பாளராகத் தலைமை முன்னிறுத்தக் கூடாதென்று கட்சியின் மாநில நிர்வாகிகள் பலரும் போர்க்கொடி தூக்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

கொரோனா விவகாரத்தில் கோட்டைவிட்ட 'காவி புதல்வன்'!

மக்கள்தொகையில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசம், கொரோனா நோய்த்தொற்றின் முதலாம் அலையைத் திக்கித் திணறிச் சமாளித்துவிட்டது என்றாலும், இரண்டாம் அலையில் நிலைகுலைந்து திக்குமுக்காடிவிட்டது. மருத்துவ நிபுணர்களின் தொடர்ச்சியான எச்சரிக்கைகளைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் அலட்சியமாகக் கடந்ததற்கு யோகி அரசு கொடுத்த விலை அப்பாவி மக்களின் மரணங்கள். மக்கள்தொகை மிகுதியான மாநிலம் என்ற போதிலும், அரசு இரண்டாம் அலையை எதிர்கொள்ள மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்தத் தவறியது. கொரோனா பாதிப்பு மாநிலத்தில் உச்சம் தொட்டிருந்த வேளையிலும், நிலைமை கட்டுக்குள்தான் இருக்கிறது என்று கதை கட்டியது, கொரோனா உயிரிழப்புகளைக் குறைத்து கணக்கில் காட்டியது எனத் தவற்றுக்கு மேல் தவறு செய்த யோகி ஆதித்யநாத்தின் கொரோனா கால செயல்பாடுகளுக்குச் சாட்சியமாக மிதந்தன கங்கை நதியில் சடலங்கள்.

அடித்தட்டு மக்களைத் தாண்டி அதிகாரத்தின் உச்சாணிக் கொம்பில் இருப்பவர்களும் உ.பி-யில் மருத்துவ உதவிகள் கிடைக்காமல் பரிதவித்த போதிலும், மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடும், ஆக்ஸிஜன் தட்டுப்பாடும் துளியும் இல்லையெனத் தம்பட்டம் அடித்த அரசின் கொரோனாகாலச் செயல்பாடுகளை மிகவும் மோசம் என்பதைத் தவிர நாம் எப்படி நிலையை விவரிப்பது!

இந்தியா முழுவதும் கடந்த சில நாள்களாக நோய்த்தொற்றுப் பரவல் குறைந்து காணப்படும் இந்த நேரத்தில் உத்தரப்பிரதேசத்தில் நாங்களும் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டோம்... கொரோனாவைச் சிறப்பாகச் சமாளித்துவிட்டோம் என்று தனக்குத் தானே சான்றளித்துக்கொள்வதெல்லாம் என்ன மாதிரியான மனநிலை என்று தெரியவில்லை. கொரோனாவைக் கட்டுப்படுத்தத் தவறிய அரசின் செயல்பாடுகளை உள்நாட்டுப் பத்திரிகைகளைத் தாண்டி சர்வதேச பத்திரிகைகளும் விமர்சித்துத் தள்ளியதால், மத்தியில் ஆளும் பாஜக-வுக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரும், அழுத்தமும் உ.பி-யில் நடைபெறவிருக்கும் 2022 சட்டசபைத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதுதான் அரசியல் வட்டாரத்தின் சமீபத்திய ஹாட் டாபிக்காக இருக்கிறது.

அரசியலுக்கு இழுத்துவிட்டது, கோரக்பூர் மக்களவைத் தொகுதி எம்.பி ஆக்கியது, உத்தரப்பிரதேச முதல்வராக நியமிக்கப் பரிந்துரை செய்தது என யோகி ஆதித்யநாத்தின் அரசியல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு யோகிக்கு எதிராக நிற்காது என்றாலும், பாஜக நிர்வாகிகளின் வாதங்களையும் கவனிக்க வேண்டிய பொறுப்பு அந்த அமைப்புக்கு இருக்கிறது. யோகி ஆதித்யநாத் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கவும், தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளவும் கடந்த வாரம் ஆர்.எஸ்.எஸ் உயர்மட்டக்குழுக் கூட்டம் நடைபெற்றது. உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலுக்கான கூட்டம் என்று பொதுவெளியில் சொல்லப்பட்டாலும், யோகி மீதான விமர்சனங்களுக்கு விளக்கம் பெறவே அந்தக் கூட்டம் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் யோகி ஆதித்யநாத்துக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகக் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முறையிட்டதாகவும் அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

குஜராத் அதிகாரியும்... யோகி - மோடி மோதலும்!

பிரதமர் மோடியுடன் இணக்கமாக இருக்கும் பாஜக-வினர் பட்டியலில் சமீபத்தில் இணைந்தவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அர்விந்த் குமார் ஷர்மா. அரசுப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற கையோடு பாஜக-வில் இணைந்தார். பாஜக தலைமையின் உத்தரவின் பேரில் ஐந்து மாதங்களுக்கு முன்பு குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து உத்தரப்பிரதேசத்தின் லக்னோ வந்தடைந்த அர்விந்த் குமார் ஷர்மா முதல்வர் யோகியின் விருப்பமின்றி சட்டமன்ற மேலவை உறுப்பினராக்கப்பட்டார்.

அது முதல் மாநில அரசின் செயல்பாடுகளைத் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்து மோடிக்குத் தகவல் தெரிவித்துவந்ததாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் அர்விந்த் குமார் சட்டமன்ற மேலவை உறுப்பினராக்கப்பட்டபோது பெரிதாக கண்டுகொள்ளாத முதல்வர் யோகி ஆதித்யநாத், தற்போது அவரின் செயல்பாடுகளால் அதிர்ந்துபோயிருக்கிறார். இந்தநிலையில், தான் அர்விந்த் குமார் ஷர்மாவை உத்தரப்பிரதேச துணை முதல்வராக்க வேண்டும் என்று தலைமையிலிருந்து வெளியாகியிருக்கும் தகவல் உத்தரப்பிரதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக வெளியாகியிருக்கும் தகவலில், ஐஏஎஸ் அதிகாரி அர்விந்த் குமார் ஷர்மாவை உத்தரப்பிரதேச அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டு அவருக்குத் துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று மோடி கூறியதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகியைத் தொடர்ந்து இரண்டு துணை முதல்வர்கள் பதவியில் இருக்கின்றனர். துணை முதல்வர்களான தினேஷ் ஷர்மா, கேசவ் பிரசாத் மௌரியா ஆகிய இருவரில் ஒருவரைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, பதிலுக்கு அர்விந்த் குமாரைத் துணை முதல்வராக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக, துணை முதல்வர் பதவியில் இருந்துவரும் கேசவ் பிரசாத் மௌரியாவை மாநில பாஜக தலைவராக பணியமர்த்திவிட்டு, அந்த இடத்தில் ஐஏஎஸ் அதிகாரி அர்விந்த் குமாரை நியமிக்க ஆலோசனை நடத்தப்பட்டுவருகிறது. ஆனால், முதல்வர் யோகி ஆதித்யநாத் அர்விந்த் குமாரை துணை முதல்வராக்குவதற்கு வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்.

பிரதமர் மோடியே நேரடியாக அர்விந்த் குமாரைத் துணை முதல்வர் பதவிக்குப் பரிந்துரை செய்துள்ளபோதிலும், யோகி ஆதித்யநாத் எதிர்ப்பு தெரிவிப்பதால் பாஜக தலைமையின் கோபத்துக்கு ஆளாகியிருக்கிறார். ஏற்கெனவே உத்தரப்பிரதேசத்தில் யோகி அரசின் செயல்பாடுகளால் கடும் அதிருப்தியிலிருந்த மோடி இந்த விவகாரத்தில் வெறுப்பின் உச்சத்தை அடைந்துவிட்டாராம். இந்துத்துவவாதி என்ற முறையில் யோகி, மோடியின் அபிமானியாக இருந்தாலும், அரசியலை அரசியலாகத தான் பார்க்க வேண்டும் என்ற முடிவுக்கு தற்போது மோடி வந்திருக்கிறார்.

ஆரம்பகால அரசியல் பயணத்தில், கோரக்பூரின் வலிமையான அரசியல் தலைவர்களாகத் திகழ்ந்த பாஜக-வின் ஹரிஷங்கர் திவாரி மற்றும் வீரேந்திர பிரதாப் ஷாஹியின் பிடி தளர்ந்து போன நேரத்தை கச்சிதமாக யோகி ஆதித்யநாத் பயன்படுத்திக்கொண்டதுதான் இன்று அவரை முதலமைச்சர் பதவி வரை அழைத்துச் சென்றிருக்கிறது. திறமை இருந்தாலும் கிடைக்கும் சந்தர்ப்பங்களைச் சரியாகப் பயன்படுத்தினால் மட்டுமே வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து போக முடியும் என்பதற்கு யோகியின் வரலாறே சான்று.

பாஜக தலைமைக்கு யோகியின் கொரோனாகால செயல்பாடுகளை எதிர்க்கட்சிகள் வெளிப்படையாக விமர்சித்துத் தள்ளியதைவிடவும், உத்தரப்பிரதேச எம்.எல்.ஏ-க்களும் எம்.பி-க்களும் மறைமுகமாகப் புலம்பித் தள்ளியதுதான் அதிகம் என்கின்றனர் தலைமைக்கு நெருக்கமான நிர்வாகிகள் சிலர். 'சூழ்நிலை சந்தர்ப்பத்தால் ஒரு சந்நியாசி முதல்வராகிவிட்டார். அரசியலில் ஊறித் திளைத்து கட்சிக்கு உழைத்துக் கொட்டிய நாமும் தலைமையின் முடிவுக்குத் தலையாட்டிவிட்டு அவரை முதல்வராக்கிவிட்டோம். யோகியின் செல்வாக்கு மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. இப்படியேவிட்டால் மாநிலத்தில் அடுத்தகட்ட தலைவர் என யாரும் உருவாக முடியாது. எனவே யோகிக்கு முடிவு கட்டியாக வேண்டும்' என்று கலந்தாலோசித்து திட்டம் தீட்டிய முக்கிய நிர்வாகிகள் அண்மையில் உத்தரப்பிரதேசம் வந்திருந்த ஆர்.எஸ்.எஸ் தேசியத் துணைத் தலைவர் தத்தாத்ரேய ஹொசபலே யோகியை நேரில் தனியாகச் சந்தித்து யோகி மீது சரமாரியாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கின்றனர். அதேபோல், கொரோனாவைச் சமாளிப்பதில் முதல்வர் யோகி தோல்வியைத் தழுவிவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் கருத்துகளையும் பாஜக நிர்வாகிகள் பதிவிட்டனர்.

 

யோகிக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்காத நரேந்திர மோடி!

நரேந்திர மோடி ட்விட்டரில் படு ஆக்ட்டிவாக இருக்கக்கூடிய நபர். அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் என யார் பிறந்தநாள் வந்தாலும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவிப்பது அவரது வழக்கம். அதிலும் பாஜக தலைவர்கள் பிறந்தநாள் என்றால் தவறாமல் வாழ்த்து தெரிவித்துவிடுவார். இந்தநிலையில், மோடி - யோகி இடையேயான மோதலை வெளிக்காட்டும்விதமாகச் சம்பவம் ஒன்று நடந்தது.

ஜூன் 5-ம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவிக்கவில்லை. ஏற்கெனவே புகைச்சலிலிருந்த விவகாரம் இதன் மூலம் உறுதியாகவே, கட்சிக்குள் பதற்றநிலையை ஏற்படுத்தியது. ஆனால், பாஜக தலைமையோ மோடி கொரோனா இரண்டாம் அலையில் யாருக்குமே ட்விட்டரில் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்றும், யோகி ஆதித்யநாத்துக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துவிட்டதாகவும் சமாளித்துவிட்டது. ஆனால், யோகி ஆதித்யநாத்துக்கு மோடி தொலைபேசியில்கூட வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று யோகியின் ஆதரவாளர்கள் தலைமையின் கூற்றை மறுக்கின்றனர்.

ஜூன் 3-ல் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் உயர்மட்டக் கூட்டம், பாஜக தேசிய பொதுச்செயலாளர் சந்தோஷின் உத்தரப்பிரதேச பயணம் போன்றவை பதற்றநிலையிலேயே யோகியை வைத்திருந்த நிலையில், உத்தரப்பிரதேச பாஜக துணைத் தலைவர் ராதாமோகன் சிங் ஆளுநர் ஆனந்திபென் படேலை சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், தனிப்பட்ட முறையில் தான் ஆளுநரைச் சந்தித்ததாகச் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய ராதாமோகன் கட்சித் தலைமையும், ஆட்சித் தலைமையும் சிறப்பாகச் செயல்படுவதாகத் தெரிவித்தார். ஆனாலும், அவர் அமைச்சரவையை மாற்றி அமைப்பது தொடர்பாகத்தான் ஆளுநரிடம் பேசியதாகக் கூறப்படுகிறது.

 

சேஃப் சோனில் யோகி ஆதித்யநாத்?!

உத்தரப்பிரதேச பாஜக நிர்வாகிகள் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினாலும், அடுத்தகட்ட தலைவர் என்ற முறையில் அங்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு யாருமில்லை. இது யோகிக்குச் சாதகமாக அமைகிறது. தன்னைத் தவிர வேறு யாரும் கட்சியில் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்பதில் யோகி மிகவும் தெளிவாக இருந்தார்... தற்போது வரையிலும் இருந்துவருகிறார்.

ஒருவேளை பாஜக தலைமை உத்தரகாண்ட்டில் முதல்வரை மாற்றியதைப் போன்று யோகி ஆதித்யநாத்தை மாற்றிவிடலாம் என்று எண்ணினாலும், இழப்பு பாஜக-வுக்குத்தான். ஏனென்றால், தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக் காலமே இருக்கும் நிலையில் முதல்வரை மாற்றிவிட்டுத் தேர்தலை எதிர்கொள்வது என்பது ஆபத்தான முடிவு. அதேபோல் உத்தரப்பிரதேசத்தில் நிர்வாகரீதியாக விசாரணை மேற்கொண்டுவிட்டு டெல்லி திரும்பிய பாஜக தேசிய பொதுச்செயலாளர் சந்தோஷும் யோகிக்கு எதிரான மனநிலையில் இல்லை. மேலும், உத்தரப்பிரதேசத்தில் யோகியின் தலைமையை மாற்றியமைக்கப்போவதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கும் டெல்லி தலைமை, யோகியை மீண்டும் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தித் தேர்தலை எதிர்கொள்ளவிருப்பதாகக் கூறப்படுகிறது.

கொரோனா விவகாரத்தில் மாநிலத்தில் மிகவும் மோசமான பாதிப்புகளைச் சந்தித்துள்ள தொகுதிகளில் மருத்துவக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவது, மக்களைச் சந்தித்து வாக்குவங்கியைப் பலப்படுத்துவது உள்ளிட்ட வேலைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தலைமை யோகியை அறிவுறுத்தப்போவதாகவும் அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. யோகி ஆதித்யநாத் மீது மக்களுக்கு ஈர்ப்பு ஏற்படக் காரணமே அவரின் எளிமைதான். எளிதில் மக்களால் சந்திக்கக்கூடிய தலைவர் என்ற நற்பெயரை அவர் பெற்றிருக்கிறார். அது அவருக்கு மீண்டும் செல்வாக்கை வலுப்படுத்திக்கொள்ள உதவும். அதேபோல், இந்துத்துவவாதத்தின் மிக முக்கிய முகமாக மாறியிருக்கும் யோகியைப் பதவியிலிருந்து அகற்றுவதற்கு பாஜக-வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அனுமதிக்காது என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.

இதையெல்லாம் வைத்துப் பார்க்கையில், வெளியிலிருந்து பார்ப்பதற்கு யோகி டேஞ்சர் ஸோனில் இருப்பது போன்று நமக்குத் தெரிந்தாலும், உண்மையில் அவர் என்னமோ 'என்னதான் நடக்கும் நடக்கட்டுமே...' என்றபடி சேஃப் ஸோனில்தான் சவாரி செய்துகொண்டிருக்கிறார்.

 

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!