• Saturday, 23 November 2024
ஸ்ரீவில்லிபுத்தூருக்கு இடைத்தேர்தல்?

ஸ்ரீவில்லிபுத்தூருக்கு இடைத்தேர்தல்?

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுடனான கூட்டணியில் 25 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. இதில், விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்துர் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது. சிவகாசி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக அரசன் அசோகனும், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக மாநில பொதுக்குழு உறுப்பினரான மாதவராவும் களமிறங்கினர். வேட்புமனுத் தாக்கல் செய்த மறுநாளே மாதவராவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இருப்பினும், அதனை பொருட்படுத்தாமல் இரண்டு நாட்கள் பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசாரம் செய்து கொண்டிருந்த போதே லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். மாதவராவ் மருத்துவமனையில் இருந்ததால், அவரது மகள் திவ்யா தன் தந்தைக்காக தொகுதி முழுவதும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டார். மாதவராவுக்கு ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பால் அவரது மகள் திவ்யாவே வேட்பாளராக மாற்றப்படலாம் என்றெல்லாம் பேசப்பட்டது.

மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோதே இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டதாகவும், நுரையீரல் பாதிப்பும் இருந்ததாகவும் சொல்லபடுகிறது. இந்த நிலையில், நேற்று காலை 7.56 மணிக்கு மாதவராவ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாதவராவ் சென்னையில் வசித்து வந்தாலும், அவரது சொந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர்தான். அவரது உடல் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கொண்டு வரப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது. மதவராவ், கடந்த 1986-ம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வருகிறார். சென்னை சட்டக்கல்லூரியில் ராஜீவ் காந்தி ஃபோரமின் தலைவராக இருந்தவர்.

இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் உறுப்பினராகவும், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் செயலாளராகவும், துணைத்தலைவராகவும், தேசிய காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் குழு ஆலோசகர், சட்ட ஆலோசனைக்குழு துணைச் செயலாளர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்தவர். மண்ணின் மைந்தர் என்பதாலும், தொகுதி மக்களிடம் நல்ல அறிமுகம் உள்ளவர் என்பதாலும் இத்தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவார் எனப் பேசப்பட்டது. வரும் மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளரான மாதவராவ் உடல்நலக்குறைவால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒருவேளை மாதவராவ் தேர்தலில் வெற்றிபெற்றால் அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும்.

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!