• Friday, 05 September 2025
அரியர் தேர்வு : தமிழக அரசு தருமா தீர்வு?

அரியர் தேர்வு : தமிழக அரசு தருமா தீர்வு?

கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில், கல்லூரித் தேர்வுகளை நடத்த முடியாததை அடுத்து, தேர்வுகளை ரத்து செய்த தமிழக அரசு, அரியர் தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பித்திருந்தவர் களுக்கு ‘ஆல் பாஸ்’ வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்தது. மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற இந்த அறிவிப்புக்கு, அப்போதே கல்வியாளர்கள் மத்தியில் விமர்சனங்கள் கிளம்பின. “2021 தேர்தல் நெருங்கும் நேரத்தில், அரியர் வைத்திருந்த மாணவர்களின் வாக்குகளைக் கவர்வதற்காகவே ஆளுங்கட்சி இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறது. இது மாணவர்களின் எதிர்காலத்தையும் திறன் மேம்பாட்டையும் பாதிக்கும்’’ என்றெல்லாம் எதிர்க் கருத்துகள் வைக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, ‘அரியர் தேர்வு ஆல் பாஸ்’ என்ற தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்யுமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில்தான் ‘அரியர் தேர்வு ரத்தை ஏற்க முடியாது. தேர்வு நடத்துவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தியிருக்கிறது நீதிமன்றம்.

“அரியர் தேர்வு ரத்து என்கிற முடிவை எடுப்பதற்கு முன்னர், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்புகளோடு அரசு கலந்தாலோசித்ததா... அப்படி ஆலோசித்திருந்தால் அவர்கள் சொன்ன கருத்துகள் என்ன?” என்று கேள்வி கேட்கும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு நம்மிடம், “அரியர் வைத்திருந்து ‘ஆல் பாஸ்’ செய்யப்பட்டுள்ள மாணவர்களும்கூட தினமும் கல்லூரிக்கு வந்து, பாடங்களைப் படித்திருக்கிறார்கள். இன்டர்னல் மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள். ஏதோவொரு காரணத்துக்காக எழுத்துபூர்வமான தேர்வில் மட்டும் தோல்வியடைந்திருக்கிறார்கள். நியாயமான அரசாக இருந்தால், வல்லுநர்குழு ஒன்றை அமைத்து ஆராய்ந்துதான் இப்படியொரு முடிவை எடுத்திருக்க வேண்டும். தற்போது வழக்கை விசாரித்துவரும் நீதிமன்றமும்கூட, இந்த விஷயத்தில் ஆசிரியர் மற்றும் மாணவர் அமைப்புகளின் கருத்துகளைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். இப்போதும்கூட, ‘அரியர் தேர்வு ரத்து என்ற அரசின் அறிவிப்பால், மாணவர்களின் கல்வித்திறன் எந்த வகையிலும் பாதிக்கப்படாது’ என்பதற்கான தரவுகளைப் பெறும் முயற்சியில் தமிழக அரசு கவனம் செலுத்தி, அதற்கான உத்தரவாதத்தை நீதிமன்றத்திடமும் அளிக்க வேண்டும்’’ என்கிறார்.

அரியர் ஆல்பாஸுக்கு தடை... குழப்பத்தில் மாணவர்கள்... தீர்வு தருமா தமிழக அரசு?
 

தமிழக அரசின் மேற்கண்ட முடிவால் ஏற்பட்ட குழப்பங்களை விவரித்தார் அனைத்திந்திய பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர் அமைப்புகளின் கூட்டமைப்புத் துணைத் தலைவர் ரவி. “அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் அனைவரையும் அரசு தேர்ச்சி பெற வைத்திருக்கிறதே தவிர அவர்களின் மதிப்பெண்களை அறிவிக்கவில்லை. பட்டயச் சான்றும் வந்து சேரவில்லை. இதனால், இளங்கலை படித்து முடித்து, முதுகலைக்குச் செல்லும் மாணவர்களை எதன் அடிப்படையில் தேர்வு செய்வது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் அடிப்படையில் வகுப்புகளில் சேர்த்துவிட்டாலும், அடுத்து புரொவிஷனல் சர்டிஃபிகேட் இல்லாத அவர்களைத் தேர்வு எழுத அனுமதிப்பதிலும் சிக்கல் எழுந்துள்ளது. இந்த நடைமுறைச் சிக்கல்களை எல்லாம் பார்த்த நிறைய மாணவர்கள் தாங்களாகவே மறுபடியும் தேர்வுக்கு விண்ணப்பித்து தங்கள் அரியர்ஸை க்ளியர் செய்ய ஆரம்பித்துவிட்டனர். ஏற்கெனவே, அரியர் தேர்வுக்காக மாணவர்கள் செலுத்தியிருந்த தொகை வீணாய்ப்போனதுதான் மிச்சம்” என்றார்.

தி.மு.க செய்தித் தொடர்பாளரும், பேராசிரியருமான கான்ஸ்டன்டைன் ரவீந்திரனோ, “பல்கலைக்கழக மானியக்குழுவின் வழிகாட்டுதலின்படி ‘அரியர் தேர்வு ரத்து’ என்கிற விஷயமே செல்லாது என்று நான் ஏற்கெனவே சொல்லியிருந்தேன். பல்கலைக்கழகங்கள் என்பவை மாநிலத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும்கூட, அவற்றின் செயல்பாடுகள் யு.ஜி.சி வழிகாட்டுதலின்படிதான் அமையும். அதனாலேயே ‘அரியர் தேர்வு ரத்து’ என்பதை யு.ஜி.சி ஏற்கவேயில்லை. பல்வேறு விஷயங்களில் மக்களை ஏமாற்றிவந்த அ.தி.மு.க அரசு, தனது ஓட்டரசியலுக்காக அரியர் வைத்திருந்த மாணவர்களையும் ஏமாற்றிவிட்டது’’ என்கிறார் கோபமாக!

“தமிழக அரசு இந்த விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?” என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் கேட்டோம். “கொரோனா பாதிப்பு உச்சத்திலிருந்தபோது, மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டுதான் ‘ஆல் பாஸ்’ முடிவை அறிவித்தோம். கொரோனா தாக்கம் குறைய ஆரம்பித்த பிறகு அனைவருக்குமே முறையாகத் தேர்வுகள் நடத்தப்பட்டுவருகின்றன. அரியர் வைத்திருந்த மாணவர்களுக்கும்கூட ஏற்கெனவே அரசு கொடுத்திருந்த விதிகளின் அடிப்படையில், தனித்தனியே மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும், வழக்கு நிலுவையில் இருப்பதால் மதிப்பெண் பட்டியலை வெளியிட முடியவில்லை. தற்போது, நீதிமன்ற அறிவுறுத்தலின்படி பல்கலைக்கழக மானியக்குழுவுடன் இது விஷயமாகப் பேசிவருகிறோம். வரும் ஏப்ரல் 15-ம் தேதி வழக்கு மறுபடியும் விசாரணைக்கு வரும்போது நல்ல தீர்வு கிடைத்துவிடும்’’ என்றார்.

Comment / Reply From