• Saturday, 25 September 2021
எமனாகும் மாத்திரை எதற்கு?

எமனாகும் மாத்திரை எதற்கு?

தினம்தோறும் உருமாற்றம் அடையும் வைரஸ் தொடங்கி, கருப்பு பூஞ்சை வரை, 'நோய்' பற்றிய முழு அறிவியல் விளக்கமே சிக்கலாக இருக்கிறது. நோய்க்கான காரணமும் கேள்விக்குறியே. அப்படி இருக்க, நோய் தீர்க்கும் வழி மட்டும் விதிவிலக்கா என்ன?

பிளாஸ்மா தெரபி தொடங்கி, CT ஸ்கேன் தொடங்கி மருத்துவர்களும், ஆராய்ச்சியாளர்களும் தினம் தினம் புதிய கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டு லேசான அறிகுறிகள் இருந்தாலே பத்து நாள்கள் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், இரண்டாவது அலையோ, ஆயிரக்கணக்கில் மக்களை மருத்துவமனை நோக்கி அனுப்ப, மருத்துவமனைகள் பாதிக்கப்பட்டவர்களை திருப்பி வீட்டுக்கு அனுப்பின. இவர் பிழைக்க 10 சதவிகிதம்தான் வாய்ப்பிருக்கிறது, அவர் பிழைக்க 30 சதவிகிதம்தான் வாய்ப்பிருக்கிறது என ரிசப்ஷனில் வைத்தே உயிர் சோதனை நடந்தது. முதலில் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்குள் அனுமதித்து சிகிச்சையை தொடங்குங்கள் என்று சொல்லும் நிலை உருவானது.

அதில் ஒரே சிகிச்சைக்கு அரசு மருத்துவமனையில் சில நூறு ரூபாய்களும், தனியார் மருத்துவமனைகளில் சில லட்சங்களும் செலவானது. ரெம்டிசிவர் மருந்துக்காக பலர் உயிரைப் பணயம் வைக்க அந்த மருந்து அவ்வளவு அத்தியாவசியம் இல்லை என ஒரு பக்கம் வலியுறுத்தப்பட்டுக் கொண்டே இருந்தது. ஒருவருக்கு கோவிட் 19 பாசிட்டிவ் என்றதும் அவருக்கு ஆறேழு மருந்துகள் மிகச்சாதாரணமாக பரிந்துரைக்கப்பட்டன.

மருந்துகளின் தன்மை, அதன் பலன், அதனால் ஏற்படும் பின்விளைவுகள் இதையெல்லாம் யோசிக்காமல் இந்த மருந்துகள் உட்கொள்ளப்பட்டன என்பதுதான் நிதர்சன உண்மை. அதையெல்லாம் கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்தி, நிலையான ஒரு சிகிச்சை வழிமுறையை ஒருவழியாக பரிந்துரைத்திருக்கிறது மத்திய சுகாதாரத் துறை. என்னென்ன மருந்துகள் பயன்படுத்தலாம், எந்தெந்த டெஸ்ட் எடுக்க வேண்டும் என ஒரு லிஸ்ட் வெளியிட்டிருக்கிறது.

மிகச்சாதாரணமாக கொரோனாவுக்காக நம் வீடுகளில் பயன்படுத்தப்பட்ட பல மருந்துகள் இந்த லிஸ்ட்டில் இடம்பெறவில்லை. மிக அதிகமாக பாசிட்டிவ் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட Favipiravir (ஃபவிபிரவிர்) எனும் ஆன்டி வைரல் மருந்து இந்த லிஸ்ட்டில் இல்லை. பலரின் உடைமைகளை விற்று வாங்கப்பட்ட ரெம்டிசிவர் மருந்து லிஸ்ட்டில் இருக்கிறது. இதுவும் ஆன்டி வைரல் மருந்துதான். ஆனால், சீனியர் மருத்துவரின் பரிந்துரையில் மிக குறைந்தபட்ச அளவில்தான் பயன்படுத்த வேண்டும் என சொல்லப்பட்டிருக்கிறது. ஏனெனில் இது சோதனை நிலையில் இருக்கும் ஆபத்து விளைவிக்கக்கூடிய மருந்து எனச் சொல்லப்பட்டிருக்கிறது.

மக்களின் இந்த மருந்து உட்கொள்ளுதலில் தவறாது இடம்பெற்றிருந்த azithromycin (அஸித்ரோமைசின்) மற்றும் doxycycline (டாக்சிசைக்ளின்) போன்ற ஆன்டி-பையோட்டிக் மருந்துகள் இந்த லிஸ்ட்டில் இடம்பெறவில்லை என்பது நாம் கவனிக்க வேண்டியது. இதேபோல Ivermectin (இவர்மேக்ட்டின்) எனும் ஒட்டுண்ணி தொற்றுக்கு எதிரான மருந்தும் அரசின் புதிய பரிந்துரையில் இல்லை. இந்த ஒன்றரை ஆண்டுகளில் அதிகம் விற்கப்பட்ட வைட்டமின் மருந்துகள், ஜின்க் மற்றும் இரும்புசத்து மாத்திரைகளும் லிஸ்ட்டில் இல்லை. அரசின் ஆரம்பகால பரிந்துரையில் வைட்டமின் சி, டி மற்றும் ஜின்க் மாத்திரைகளை ஒரு மாதம் நோயுற்றவர் உட்கொள்ளவேண்டும் என பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

அறிகுறிகள் இல்லாதவர்களுக்கும், லேசான அறிகுறிகள் இருப்பவருக்கும் காய்ச்சல், சளி குறைக்கக் கொடுக்கப்படும் மருந்துகள் தவிர பிற மருந்துகள் கொடுக்கப்பட வேண்டாம் எனவும் மத்திய சுகாதாரத் துறை பரிந்துரையில் சொல்லப்பட்டிருக்கிறது. வீட்டிலேயே ஆக்சிஜன் அளவு, காய்ச்சல் அளவு, பல்ஸ் ஆகியவை கண்காணிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இவைதவிர, ஆக்சிஜன் தேவைப்படும் சற்று தீவிரமான அறிகுறிகள் (moderate) உள்ளவர்க்கும், அதிதீவிர அறிகுறிகள் (severe) உள்ளவருக்கும் மட்டும் மருந்துகள் பரிந்துரைக்கலாம் என சொல்லப்பட்டிருக்கிறது. Oxygen, Steroids, Tocilizumab, Anti-Coagulants மருந்துகள் மட்டும் இந்த நோயாளிகளுக்கு பரிந்துரைக்கலாம் எனவும் இந்த புதிய அறிவிப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. (இந்த மருந்துகள் பற்றிய முழு விளக்கம் கட்டுரையின் பின்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது). அதேசமயம் இந்த மருந்துகள் நிச்சயம் ஒரு மூத்த மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில்தான் கொடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் உள்ள பல மருத்துவர்கள் இதுகுறித்து மிகவும் நேர்மறையான கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்கள். பெரும்பான்மையான மருத்துவர்கள் இந்த அறிவிப்பை வரவேற்றிருக்கும் நிலையில், ஒருசிலர் மாற்று கருத்தையும் முன்வைக்கிறார்கள். இந்தியாவின் கோவிட்-19 போரை பொறுத்தவரை ICMR தான் தலைமையேற்றிருக்கிறது. ICMR சார்பாக மே மாதம் 17-ம் தேதி கோவிட் 19 நோயாளிகளுக்கு அளிக்கவேண்டிய சிகிச்சைகள் குறித்து சில வழிகாட்டுதல்களை வெளியிட்டது. தற்போது மத்திய சுகாதார அமைச்சகத்தின் Directorate General of Health Services (DGHS) எனும் சுகாதார சேவைகள் இயக்குநரகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இரண்டு அறிவுப்புகளிலும் சில மாற்றங்கள் காணப்படுகிறது. உதாரணத்திற்கு ICMR பரிந்துரை இவர்மேக்ட்டின் மருந்துகள் கொடுக்கலாம் எனவும், லேசான அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை முறையும் வெளியிட்டிருக்கிறது. இந்நிலையில், இரண்டில் எதை பின்பற்றுவது என மருத்துவர்களுக்கு குழப்பம் வரலாம் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. இந்த புதிய (DGHS) அறிவிப்பிற்கு ICMR ஒப்புதல் தேவையா என்பது குறித்தும் சந்தேகங்கள் எழுப்பப்படுகிறது.

 

கோவிட் 19 சிகிச்சையை பொறுத்தவரை முன்னர் சொன்னதுபோல எவ்வித அறிவியல் பின்னூட்டமும் இல்லாமல் மக்கள் மருந்துகள் உட்கொள்வது அதிகரித்துள்ளது. குறிப்பாக ஸ்டீராய்டு மருந்துகள் அதிகமாக உட்கொள்வதால் கருப்பு பூஞ்சை போன்ற வேறு நோய்கள் உருவாகவும் காரணங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இந்த மருந்துகள் பயன்பாட்டில் கூடுதல் கவனம் அவசியமாகிறது. ஒரு நபர் ஒரு நாளில் ஐந்திற்கும் மேற்பட்ட மருந்துகள் உட்கொள்வதை 'polypharmacy' என்பர். இது இந்தியாவில் அதிகரித்திருக்கிறது. Favipiravir மாதிரியான ஆன்டி வைரல் மருந்துகள் எல்லாம் மிகத்தீவிர சிகிச்சையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டவருக்கு கொடுக்கப்பட்ட நிலையில், அது இப்போது சர்வ சாதாரணமாக அவுட்பேஷன்ட் எனப்படும் வீட்டிலிருந்து சிகிச்சை எடுத்துக் கொள்பவருக்கு பரிந்துரைக்கப்படுகிறது. அதிலும் தனித்தனியாக இந்த மருந்துகள் என்னென்ன பின்விளைவுகளை ஏற்படுத்தும், இந்த மருந்துகள் ஒருவர் உடம்பில் ஒன்றோடொன்று கலக்கும்போது என்ன விளைவுகள் ஏற்படுத்தும் என்பதற்கெல்லாம் விடையே இல்லை. இவையெல்லாம் தெரியும் வரை, அரசு பரிந்துரைக்கும் நடைமுறைகளை பின்பற்றுவதே சிறந்தது.

கூடுதல் புரிதலுக்காக, இப்போது அரசு பரிந்துரைத்திருக்கும் சில மருந்துகளும் அதைப்பற்றிய சிறு விளக்க குறிப்பும் பின்வருமாறு:

ரெம்டிசிவர்:

இது வீட்டில் பயன்படுத்தும் மருந்து கிடையாது. நிச்சயம் மருத்துவர் பரிந்துரையில், மருத்துவமனை மேற்பார்வையில் கொடுக்கப்பட வேண்டிய மருந்து. அதிகமான அறிகுறிகளோடு, மூச்சு விடுவதில் சிரமும் இருக்கும் நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் supplementary oxygen மருந்து.

ஸ்டெராய்ட்ஸ்:

Dexamethasone (டெக்ஸாமெத்தசோன்) போன்ற ஸ்டெராய்டு மருந்துகளும் நிச்சயம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருப்பவர்கள் மட்டுமே உட்கொள்ள வேண்டியது. தீவிர நுரையீரல் பிரச்னை, ஆஸ்துமா, ஒவ்வாமை போன்ற பிரச்னைகளுக்கு கொடுக்கப்படும் மருந்து இது.

Anticoagulants

இந்த மருந்து ரத்தம் உறைதலை தடுப்பதற்காக கொடுக்கப்படுவது. சர்க்கரை நோய், பிபி உள்ளிட்ட இணை பிரச்சனைகள் உள்ள நோயாளிகளுக்கு தீவிர தொற்று இருப்பின் மட்டுமே இந்த மருந்து மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

டோஸிலீஸுமாப்

உடலின் நோய்எதிர்ப்பு மண்டலத்தை எதிர்க்கும் இந்த Immunosuppressant வகை மருந்துகள் மிக தீவிர சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்கு, ஸ்டீராய்டு மருந்துகளும் கூட வேலை செய்யாவிடின் 48 மணி நேரம் கழித்து கொடுக்கப்பட வேண்டும்.

உலகத்திற்கு நோய்கள் மிக பழக்கமானவை. ஆனால், அதற்கான சிகிச்சைகளும், மருத்துவ அறிவியலும் சில நூறாண்டுகள் கண்டுபிடிப்பே. மருத்துவ உலகம் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கிறது. அதுவும் இதுபோல உலகை அச்சுறுத்தும் புது புது வைரஸ்களை பற்றி தினம் ஒரு புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்துகிறது. இந்நிலையில், அறிவியல் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படும் சிகிச்சைகள் மட்டுமே நம் ஆரோக்கியத்திற்கு அதிகபட்ச உத்திரவாதம் அளிக்க முடியும் என்ற உண்மையை புரிந்துக் கொண்டு பாதுகாப்பாக இருப்போம்.

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!