• Friday, 05 September 2025
எரிகிற வீட்டில் பிடிங்கியதெல்லாம் லாபம் : இது கொரோனா கொள்ளை

எரிகிற வீட்டில் பிடிங்கியதெல்லாம் லாபம் : இது கொரோனா கொள்ளை

கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம், தடுப்பூசி குறித்த சர்ச்சை, ஊரடங்கு எனக் கொரோனாவை முன்வைத்து பல்வேறு விஷயங்கள் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் சூழலில், கொரோனா பாதிப்பு உறுதியானவர்களிடம் கடைநிலை பணியாளர்கள் தாறுமாறாக லஞ்சம் வாங்குவதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஒரு மனிதனின் பிறப்பு தொடங்கி இறப்பு வரை பல்வேறு நிலைகளிலும் லஞ்சத்தில் ஊறித் திளைத்திருக்கும் நம் நாட்டில் கொரோனா பேரிடர் மட்டும் விதிவிலக்காகிவிடுமா என்ன? இ-பாஸுக்கு லஞ்சம், வீட்டைத் தகரத்தால் அடைக்காமலிருக்க லஞ்சம் எனக் கடந்த வருடம் கொரோனாவை முன்வைத்து அடிமட்டத்தில் நடந்த தில்லுமுல்லுகள் நாம் அறிந்ததே. இப்போதும் அப்படியான சர்ச்சைகள் முளைக்கத் தொடங்கியிருக்கின்றன.

கொரோனா பரவல்
கொரோனா பரவல்

சில தினங்களுக்கு முன்பு மதுரை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உள்ள நோயாளிகளிடம், ஒப்பந்த சுகாதாரப் பெண் பணியாளர் ஒருவர் லஞ்சம் வாங்கியதாகப் புகார் எழுந்தது. விசாரணையில் அந்தப் பெண் ஊழியர் லஞ்சம் வாங்கியது தெரிய வந்ததையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கொரோனா பாசிட்டிவ் ஆனவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டாமலிருப்பதற்கும், கொரோனா கேர் சென்டர்களில் அத்தியாவசியப் பொருள்கள் வாங்கித் தருவதற்கும், அது சார்ந்த பணியாளர்கள் லஞ்சம் கேட்பதாகப் பலர் குற்றம் சாட்டுகின்றனர்.

 

நுகர்வோர் ஆர்வலரான மா.சோமசுந்தரத்திடம் இது குறித்துப் பேசினோம். ``ஒரு நபருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சில மணி நேரங்களில், அவர் வசிக்கும் பகுதியின் சுகாதார ஆய்வாளருக்கு அது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டு விடும். அப்படித் தகவல் வந்ததும் அப்பகுதியின் சுகாதார ஆய்வாளர் உடனடியாக அங்குள்ள தன்னார்வலர்களை அனுப்பிச் சம்பந்தப்பட்ட அந்த நபரின் வீட்டை ஆய்வு செய்ய வேண்டும். அந்த வீட்டில் எத்தனை பேர் வசிக்கின்றனர், அங்கு வசிக்கும் மற்றவர்களுக்கு ஏதேனும் அறிகுறி இருக்கிறதா உள்ளிட்ட தகவல்களையெல்லாம் சேகரிக்க வேண்டும்.

அறிகுறி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களைப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதுமட்டுமல்லாது அந்த வீட்டைச் சுற்றி கிருமிநாசினி மருந்து தெளித்து, `இந்த வீட்டில் வசிக்கும் இன்னாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகையால் 14 நாள்கள் இவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்' என்று அவர்கள் வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்பட வேண்டும். இந்தப் பணிகளையெல்லாம் மேற்கொள்வது, அரசு தற்காலிகமாக நியமித்துள்ள தன்னார்வலர்கள்தாம். இந்தப் பணியில்தான் ஏராளமான லஞ்சம் புரள்கிறது.

 

ஆம்! பலரும் தங்கள் வீட்டில் கொரோனா ஸ்டிக்கர் ஒட்டப்படுவதை விரும்புவதில்லை. கொரோனாவிலிருந்து மீள்வது குறித்த கவலை ஒருபுறமிருந்தாலும், மறுபுறம் தங்கள் வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டிவிடக் கூடாது என்ற தவிப்பு இருக்கிறது. குறிப்பாக, நடுத்தர வர்க்கத்தினரும் அதற்கு மேல் உள்ளவர்களும்தாம் இப்படியான மனோபாவத்தில் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் வீட்டுக்கு வரும் தன்னார்வலர்களிடம் பேசி 2,000 ரூபாயிலிருந்து அவர்கள் வசதிக்கேற்ப 5,000 ரூபாய் வரை கொடுத்து ஸ்டிக்கர் ஒட்டாமல் தடுத்துவிடுகின்றனர்.

ஸ்டிக்கர் ஒட்டப்படாத வீட்டுக்கு மருந்து தெளிக்க மாட்டார்கள். எனவே, மருந்து தெளிப்பவருக்கு 500 ரூபாயோ 1,000 ரூபாயோ கொடுத்து மருந்து தெளிக்க வைக்கின்றனர். இப்படிப் பல இடங்களில் நடக்கிறது. எனக்குத் தெரிந்த ஒருவர் வீட்டிலேயே இப்படி நடந்திருக்கிறது. இதில் முதல் தவறு கொடுப்பவர்களுடையதுதான். வாங்குபவர்கள் இரண்டாவதுதான். மக்கள் கொடுக்கும் ஆயிரம், இரண்டாயிரத்துக்காக இப்படிச் செய்யும் அளவுக்கான சூழலை உருவாக்கி வைத்துள்ள அரசின் மீதும் தவறு இருக்கிறது.

 

எனவே, தன்னார்வலர்களை மட்டும் குற்றம் சொல்லிவிட முடியாது. அவர்களுக்கு 12,000 ரூபாய்தான் சம்பளம். காலையிலிருந்து மாலை வரை தொடர்ந்து வேலை செய்ய வேண்டும். சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிகம். கொரோனா பாதிக்கப்பட்ட நபர்கள் அடுக்குமாடிக் குடியிருப்பைச் சேர்ந்தவர்களென்றால் அங்கு சென்றுவர தன்னார்வலர்கள் கடுமையான சிரமத்துக்கு ஆளாவார்கள்.

`நீங்க நிறைய கொரோனா நோயாளிகளை சந்திக்கிறீங்க... அதனால லிஃப்ட்டை பயன்படுத்தாதீங்க’ என்று சொல்லிவிடுவார்கள். எத்தனை மாடியாக இருந்தாலும் அலுப்பு பார்க்காமல் அவர்கள் படிக்கட்டில் ஏறி இறங்க வேண்டும். எந்த நேரம் வேண்டுமானாலும் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. தன் வாயிலாகத் தன் குடும்பத்துக்கு அச்சுறுத்தல் இருக்கிறது எனத் தெரிந்தும் உயிரைப் பணயம் வைத்து இந்தப் பணியைச் செய்பவர்களுக்கு அரசு போதுமான சம்பளம் கொடுத்தால் இதுபோன்ற பிரச்னைகள் வராது. சம்பளத்தை உயர்த்துவது இருக்கட்டும், கொடுக்கிற சம்பளத்தையும் சரியான தேதிக்குக் கொடுப்பதில்லை. இப்படியான சூழலில் அவர்கள் என்னதான் செய்வார்கள்?” என்றார்.

கொரோனா பாதித்த வீடுகளில் இப்படியான நிலைமை என்றால், கொரோனா கேர் சென்டர்களிலும் இப்படியான பணம் பறிக்கும் வேலைகள் நடைபெறுகின்றன என்று சிலர் குற்றம் சாட்டுகின்றனர். கொரோனா கேர் சென்டருக்குச் செல்லும் நோயாளிக்குத் தனியாக பக்கெட் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வேண்டுமெனில் அங்குள்ள பணியாளர்களையே நாட வேண்டும். நம்மால் வெளியில் செல்ல முடியாது. அப்படியான சூழலில், அங்குள்ள பணியாளர்கள் ஒவ்வொரு பொருள்களின் விலையையும் கூடுதலாகச் சொல்லி பணம் பறிப்பதாகச் சொல்லப்படுகிறது.

 

இதுகுறித்து தன்னார்வலர் ஒருவரிடம் பேசினோம், `` `focus volunteers', `sector health workers' என இரண்டு வகையான தன்னார்வலர்கள் இந்தப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறோம். கொரோனா பாசிட்டிவ் ஆனவர்கள் வீடுகளுக்குச் சென்று ஸ்டிக்கர் ஒட்டுவது, பேனர் வைப்பது, அவர்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கித் தருவது ஆகியவை focus volunteers-களுடைய வேலை. ஒவ்வொரு வீடாகச் சென்று யாருக்கேனும் கொரோனா அறிகுறி இருக்கிறதா என்று விசாரிப்பதுடன், அவர்களின் உடல் வெப்பநிலையையும், ஆக்சிஜன் அளவையும் பரிசோதித்து தகவல் சேகரிப்பது sector health workers-ன் பணி.

கடந்த ஆண்டு கொரோனா வந்தபோது ஏப்ரலிலிருந்து நவம்பர் ஒரு டிவிஷனுக்கு 50-க்கும் மேற்பட்ட sector health workers, பத்துக்கும் மேற்பட்ட focus volunteers என 60-க்கும் மேற்பட்டோர் பணியாற்றினோம். அப்போது சம்பளம் மாதம் 15,000 ரூபாய் கொடுத்தார்கள். அந்த 15,000 ரூபாய்க்காக மட்டும் நாங்கள் அந்த வேலைக்குச் செல்லவில்லை. இந்த நேரத்தில் நாம் ஏதாவதொரு வகையில் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கில்தான் அந்தப் பணிக்குச் சம்மதித்தோம்.

ஊழியர்
ஊழியர்

ஏப்ரலில் இருந்து நவம்பர் வரை அனைவருக்கும் வேலை இருந்தது. அதன் பிறகு கொரோனா தாக்கம் குறைந்ததால் பத்து பேரை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவர்களை நிறுத்திவிட்டனர். ஜனவரி மாதத்தோடு அந்த பத்து பேரையும் நிறுத்திவிட்டனர். அந்த மாதத்தின் சம்பளம் எங்களுக்கு மார்ச் மாதம்தான் வந்தது. இப்படி ஒவ்வொரு மாதமும் சம்பளம் தள்ளித் தள்ளித்தான் போடுகின்றனர். இந்த முறை என்ன காரணத்தினாலோ சம்பளத்தை 15,000 ரூபாயிலிருந்து 12,000 ரூபாயாகக் குறைத்துவிட்டனர். பல்வேறு சிரமங்களுக்கு இடையில் நாங்கள் இந்தப் பணியைச் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால், இப்படியான பழி எங்கள் மீது சுமத்தப்படுகிறது. நீங்கள் சொல்வதைப்போல ஒரு வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டாமல் பணம் வாங்குவதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. உடனடியாக சானிட்டரி இன்ஸ்பெக்டருக்கு புகார் சென்றுவிடும். எங்கள் பகுதியில் நீங்கள் சொல்வதைப்போல நடக்கவில்லை. நடப்பதற்கு வாய்ப்பும் இல்லை. ஏதாவது ஒன்றிரண்டு பேர் அப்படித் தவறு செய்யலாம். அதற்காக ஒட்டுமொத்தமாக இப்படிப் பழி சுமத்தக் கூடாது” என்றார் ஆதங்கத்துடன்.

Comment / Reply From